கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
எது தவறென்று தெரியவில்லை. நதியின்றிப் போனதா... மழையின்றிப் போனதா... இலையின்றிப் போனதா...? ஏது பிழையென்று புரியவில்லை. சலனமற்ற மனம் தேடி அலையும் நிலை மலை கண்டு நிதானிக்கிறது. எதன் தப்பித்தல் பொருட்டு இந்தப் பயணங்கள். இணை நதிகளுடன் ஓடிக் கடல் கலந்து அடையாளமற்றுப் போகும் நதியின் மீது ஏன் இத்தனை ஆயாசம்? நிலமோ கடலோ எதனைச் சேரினும் அதுவாக மாறிப் போகும் மழையினூடாக ஏன் இத்தனை அழுகை? பச்சைக்கும் கிரீடம் சுமக்காமல் பழுப்புக்கும் புலம்பிச் சாகாமல் சருகென பெயர் மாற்றும் வித்தை இலையாய் இல்லாமல் போனது எதன் தவறு? கண், காது, மூக்கு, கை, கால், வயிறு, குறி கொண்டு பிறந்த இவ்வாழ்வு எதைத் தந்தது? எங்கே கொண்டு சேர்க்கப் போகிறது இந்தப் பசி? எங்கே என் குழி? எங்கே என் நெருப்பு? வெறும் கேள்விகளுடன்தான் இந்த உடலா என்ற ஒன்று போதாதா... நாம் இந்நிலை தவற...
“பதினஞ்சு மாத்திரை போட்டேன். ரொம்ப நம்பிக்கையா இருந்துச்சி. எப்படியும் செத்துடலாம்னு நம்பினேன். முதல்ல பின்மண்டைதான் மரத்துப்போச்சி. அப்பவே முடிவு பண்ணிட்டேன். விடியறதுக்குள்ள செத்துடலாம்னு. கொஞ்சம் கொஞ்சமா செத்துப்போனேன். பின்ன எப்படிச் சொல்லுறது. திடீர்னு முழிப்பு வந்தப்போகூட நம்பலை. பாதி ராத்திரியில முழிப்பு வந்துருக்கு. இன்னும் சாக நேரம் இருக்குனு நம்பினேன். நெறைய சத்தம் கேட்டுதான் கண்ணு முழிச்சி போர்வையை ரிமூவ் பண்ணினேன். சாகலை. ஆமா, விடிஞ்சிட்டு. யூரின் போக பாத்ரூம் போனா மயக்கமா வருது. தலையில பாறாங்கல்லைக் கட்டிவிட்ட மாதிரி வெயிட்டு. டாக்டர்கிட்ட போனேன். தனியாதான் போனேன். அவ்ளோ தூக்கமாத்திரை ஏதுன்னு கேட்டாரு. வேற ட்ரீட்மென்ட்டுக்கான பில்ஸ்னு சொன்னேன். பிரஷர் பார்த்தார். நார்மல். கூட யாரும் வரலியான்னாரு. இல்லைனேன். அல்கலைசர் எழுதித் தந்தாரு. நெறைய யூரின் போனா மயக்கம் தெளிஞ்சிடும்னாரு. தூங்கி ரெஸ்ட் எடுக்கச் சொன்னாரு. கண்ணு மங்கலானா அட்மிட் ஆகச்சொல்லி எழுதித்தந்தாரு. நான் வேறெந்த மாத்திரையும் வாங்கல. எனக்குத் தெரியாதா என்னப்பத்தி. வீட்டுக்கு வந்துட்டேன்.
நெக்ஸ்ட் டைம் 25. ம்ஹும். மூணு மணி நேரம் தூங்கிட்டு ஃப்ரெஷ் ஆகிட்டேன். அதுக்கப்புறம்தான் வீட்டுக்குத் தெரிய ஆரம்பிச்சது. ராத்திரியில தூக்கம் இல்லாம போச்சு. பகல்கிறது எதையாவது ஞாபகப்படுத்திக்கிட்டே இருந்துச்சி. அந்த ஞாபகத்துக்கு சாட்சியா இருக்கப் பிடிக்கல. மாத்திரை போட்டா கொஞ்சம் தூங்குவேன். அவ்ளோதான். வீட்டோட தனிமை கான்சியஸ் இல்லாம இருக்க வசதிபண்ணிக் குடுத்துச்சி. கண்டுபுடிச்சிட்டாங்க. ரெண்டு தடவை பைக்கிலேர்ந்து கீழ விழுந்து அடிபட்டு எழுந்து வந்தேன். நான் சரியா வாழலைனு தெரிஞ்சுது. ஏதேதோ டாக்டரைப் பார்த்துட்டு இங்க வந்து சேர்ந்துட்டேன். அக்காதான் கூட இருக்காங்க. அவங்களுக்கு இங்க பக்கத்துலதான். திருமங்கலம். இப்போ எனக்கு நடக்கிற ட்ரீட்மென்ட், எடுத்துக்கிற மாத்திரை எல்லாம் எனக்குத் தெரியும். இங்கேயே அவ்ளோ சீக்கிரம் வெளிய விடமாட்டாங்க. நீங்க என்னை பாக்க வந்துருக்கிறதைச் சொல்லிட்டு வந்திருக்கேன். ரிசப்ஷன்லநீங்க விசாரிச்சது என் பேர் இல்ல. அப்பா பேரு. ஃபேஸ்புக் ஐ.டி-யில அந்தப் பேரு வெச்சிருக்கேன். உங்களைப் பாக்கணும்போல இருந்துச்சி. அதான் போன் பண்ணினேன். உங்களை மீட் பண்ணினதுல சந்தோசம்.''
தனக்கு என்ன நடக்கிறது, தனக்குள் என்ன நிகழ்கிறது, சிகிச்சை முறை என்ன, அதன் பின்விளைவு என்ன? என்றெல்லாம் என்னுடன் ஒரு மணி நேரம் பேசிய அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற அடைமொழியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவன். மதுரையில் புகழ்பெற்ற மருத்துவமனை அது. புகழ்பெற்ற என்று நான் சொல்வது வழி விசாரித்த அத்தனை பேரும் ‘‘அந்த ஆஸ்பத்திரியா...'' எனக் கண்களில் ஆச்சரியக் கொக்கி மாட்டி பின் வழியைச் சொன்னார்கள். ஆஸ்பத்திரி வாசலில் இறக்கிவிட்ட நண்பனோ உடனே தன் பைக்கினைத் திருப்பி பை சொல்லி விரைந்தான். ரிசப்ஷனில் விசாரிக்கையில் என்னிடமே ஆயிரத்தொன்பது கேள்விகளுடன் விசாரணைகள். அவனுக்கு போன் செய்து கீழே வரச்சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தார்கள்.