முதுமை எனும் பூங்காற்று 17: உறவுகள் தொடர்கதை

By விவேக பாரதி

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். நாம் எப்போதும் தனியாக இயங்க முடியாது. காலையில் பல் தேய்க்கப் பயன்படுத்தும் பற்பசை முதல், இரவில் உபயோகப்படுத்தும் கொசுவர்த்தி வரை எங்கோ யாரோ உற்பத்தி செய்ததைத்தான் உபயோகப்படுத்துகிறோம். இப்படி அந்நிய மனிதர்களுடனேயே ஏதேனும் ஒரு வகையிலான பந்தத்தால் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியானால் உறவினர்களுடனான நமது பிணைப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது! ஆனால், இன்றைய காலகட்டத்தில் உறவுகளுக்கான மதிப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா?

ஒரு பிடி மண்ணாகப் போனாலும் ஊரோடு போக வேண்டும் என்று பழமொழி சொல்வார்கள். அப்படி ஊருடன் உறவுகளுடன் இருப்பதையே நம் முன்னோர்கள் விரும்பினார்கள். நம்முடைய பழக்கவழக்கங்களில், இறை நம்பிக்கையில் சமுதாய விழாக்களில், பண்டிகைகளில் உறவின் முக்கியத்துவத்தைப் புகுத்தி நடைமுறைப்படுத்தியது நம் முன்னோர்கள்தான். இன்றைக்கும் உறவுகளைப் பேணவே பெரியவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், நகர்ப்புற வாழ்க்கை, நவீன யுகம் எனும் பெயரில் இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் உறவுப் பின்னலையே உதாசீனப்படுத்திவிடுகிறார்கள்.

சாமி போட்ட முடிச்சு

நம் பெரியவர்கள் நாம் உறவுகளுடன் மகிழ்வாக இருக்கும்படியான தருணத்தை ஏற்படுத்தத்தான் ஊர்த் திருவிழா எனும் ஏற்பாட்டையே உருவாக்கினார்கள். சொந்த பந்தங்களை அழைத்து விருந்து சமைத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தார்கள். கொண்டாட்டம் என்பதையும் தாண்டி, உறவுகளின் சங்கமம்தான் அதில் முக்கியமானதாக இருக்கும்.

முன்பெல்லாம் ஒரு வீட்டில், திருமண வயதில் பெண் இருக்கிறாள் எனக் கேள்விப்பட்டால் உடனே போய் பெண் கேட்க மாட்டார்கள். தங்கள் வீட்டுப் பையனை அழைத்துக்கொண்டு கோயில் திருவிழாவிற்குப் போவார்கள், அந்தப் பெண்ணையும் பையனையும் பொது இடத்தில் பார்த்துக்கொள்ளச் செய்வார்கள். பிடித்திருந்தால் பின்னர் பெரியவர்கள் பேசி முடிவு செய்வார்கள். கடவுள் சன்னிதானத்தில் நடக்கும் விஷயம் தப்பாகாது; தவறு இருந்தால் கடவுள் தடை செய்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருக்கும்.

ஒரு சில இடங்களில் அங்காளி பங்காளிகள் சேர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வார்கள். மாமன் மடியில் குழந்தையை வைத்துக் காது குத்தும் சடங்கு, தாய்மாமன் சீர் எடுத்து வருதல், குழந்தை பிறந்தால் அத்தை காப்பு (வளையல்) செய்துபோடுதல் எனப் பெண் வீட்டு உறவுகளையும், பிள்ளை வீட்டு உறவுகளையும் கவுரவிக்கும் விதமாக விசேஷங்கள் செய்வார்கள். இதில் சீர் என்பது ஒரு காரணம் என்றாலும் அதை வைத்து இரண்டு பக்கங்களிலும் இடையிலான உறவுக்குப் பாலத்தை வலுப்படுத்துவதுதான் அடிப்படை நோக்கம்.
ஒருவர் இறந்துவிட்டால் தாய்வீட்டு கோடி துணி போட்டுத்தான் உடலை அடக்கம் செய்வார்கள். இப்படி நல்லது கெட்டது அனைத்திற்கும் உறவுகள் வேண்டும்.

இன்றைய நிலை

இன்றைய சூழலில் சொந்த ஊரைவிட்டு வந்து தனித்தனியாக வாழும் இன்றைய தலைமுறையினர், இந்தச் சம்பிரதாயங்களைப் பின்பற்ற விரும்புவதில்லை. இது அவர்களுக்கு ஒரு பாரமாக, தேவையில்லாத செலவாகத் தோன்றுகிறது. தான், தனக்கு என்ற சுயநலம் மிகுந்ததாக மாறிவிட்டது இன்றைய சமுதாயம்.

‘உறவுகளுக்குச் செய்யும் செலவு வீண்’ என்ற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் வேரூன்றிவிட்டது. வீட்டில் பெரியவர்கள் எப்பொழுதும் விட்டுக்கொடுத்துப் போவதைப் பற்றி சொல்வார்கள். இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கும்போது மூத்த பிள்ளையிடம், “அவ சின்னப் பொண்ணுதானே... நீ விட்டுக்கொடுத்துப் போகக்கூடாதா?” எனப் பெரியவர்கள் சொல்வார்கள். முன்பெல்லாம் இப்படியான வார்த்தைகளைப் பெரியவர்கள் சொன்னால், பிள்ளைகள் கேட்டுக்கொள்வார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை. “ஏன் நான் விட்டுக்கொடுக்கணும்... நாங்க ரெண்டு பெரும் உங்க பிள்ளைங்கதானே?” என எதிர் கேள்வி கேட்கிறார்கள்.பிறருக்குச் செய்யும் செலவு வீண் என்ற எண்ணம் எப்போது வந்ததோ அப்போதே உறவுகளுக்குள் விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது.

அருகிப்போன கூட்டுக்குடும்பம்

இன்றைக்கு, அம்மா அப்பாவுடன் இருப்பதே கூட்டுக் குடும்பம் என்று ஆகிவிட்ட பிறகு எப்படி அத்தை, மாமா, சித்தப்பா உடன் சேர்ந்து இருக்க முடியும்? திருமணமான அண்ணன் தம்பிகள் ஒரே கூரையின் கீழ் வாழ்வது என்பதே இன்றைக்கு அருகிவிட்டது. அப்படி இருக்கும் வீடுகளிலும் சீர்வரிசை, மரியாதை போன்ற விஷயங்களில் ஏற்படும் மனக்கசப்பு விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.
வேலைக்காக நகரங்களுக்கு வந்து தங்கும் பிள்ளைகளுடன் பெரியவர்கள் தங்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. அந்தச் சமயத்தில் ஊரில் உறவுகளுக்குத் திருமணம், பெரிய காரியம், கிரகப்பிரவேசம் எனப் பெரியவர்கள் ஊருக்கு அடிக்கடி செல்ல வேண்டி இருப்பதைப் பிள்ளைகள் தொல்லையாக நினைக்கிறார்கள். “ஒரு இடத்துல இருக்கீங்களா... எப்ப பார்த்தாலும் பங்காளி வீடு, மச்சான் வீடுன்னு எங்கேயாவது போய்க்கிட்டே இருந்தா எப்படி? ஒவ்வொரு தரமும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் யாரு கூட்டிட்டுப் போயிட்டு வர்றது?” என சலித்துக்கொள்கிறார்கள்.

ஊரில் வசிக்கும் பெற்றோர்களை நகரத்தில் தாங்கள் வசிக்கும் வீட்டுக்கு அழைத்துக்கொள்ள விரும்பும் பிள்ளைகள், உறவுகளின் விசேஷ நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி வர மறுக்கும் பெற்றோர் மீது அதிருப்தி கொள்வதும் நடக்கிறது. சில வீடுகளில் பணம், அந்தஸ்தை வைத்து உறவுகளை எடைபோடுவது உறவுகளுக்குள் கசப்பை மட்டுமல்லாமல் பகையையும் உண்டு பண்ணிவிடுகிறது.

உறவுகளின் உன்னதம்

எத்தனை வயதானாலும் உறவுகள்தான் உன்னதம். ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆறுதல் பெற, அன்பைப் பெற… ஒரு பிரச்சினை என்றால் பேசித் தீர்க்க, உறவுகளே உதவுவார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கலாம், பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசலாம். ஆனால், ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டு உறவுகளை ஒன்று சேர்ப்பது பெரியவர்களால்தான் முடியும். அவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்கள் அவர்களைப் பண்படுத்தியிருக்கும். வாழ்க்கைக் கஷ்டங்களை உணர்ந்து ஒற்றுமைக்காக விட்டுக்கொடுத்துச் செல்வார்கள். இந்த தாத்பரியத்தைப் பின்பற்றினால் குடும்பப் பிரச்சினை கோர்ட்டுக்கு வராமல் தவிர்க்கலாம்.
பெற்ற பிள்ளைகள் இருந்தும், கடைசிக் காலத்தில் கவனிக்க ஆளில்லாமல் அனாதையாக இறக்கும் பெரியவர்களின் கதைகள் வலி மிகுந்தவை. நமக்கும் நாளை இந்த நிலை வரும்; அப்போது நம்மைச் சுற்றியும் யாரும் இருக்கமாட்டார்கள் எனும் உண்மையை இன்றைய இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

உறவுகளுடன் ஒத்து உணர்ந்து வாழ்வோம்... உறவே பலம் என்பதை உணர்வோம்!

(காற்று வீசும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE