எதிர்முனையில் போன் ஒலிக்கத் தொடங்கியது.
“அடிக்குது” என்றார் ரொஸாரியோ.
டாடியிடம் என்ன பேசலாம் என்று யோசித்தபடி ஆர்வத்துடன் காத்திருந்தான் பரணி.
“டாடி நான் பரணி பேசறேன். உங்க மேல எனக்குக் கொஞ்சம் கோபம் டாடி. ஏன் என்ன பாக்க வரவே இல்ல? நான் என்ன தப்பு செஞ்சேன்? நான் உங்கள பாக்கணும் டாடி. ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் பண்றேன். அந்த நோட்டு காட்டணும். முக்கியமா என் டிராயிங் நோட் காட்டணும். நம்ம நேஷனல் பேர்ட் பீக்காக்கை சூப்பரா வரைஞ்சி மிஸ்ட்ட வெரி குட் வாங்குனேன் தெரியுமா? எனக்கு சைக்கிள் ஓட்ட அம்மா கத்துத்தர மாட்டேன்றாங்க. குன்னூர்ல ரோடெல்லாம் மேடும் சரிவுமா இருக்கா… அதனால நான் விழுந்துடுவேனாம். என்னையும் அம்மாவையும் உங்களோட மெட்ராஸ் கூப்ட்டுப் போறிங்களா? என் ஃப்ரெண்டு பிரகாஷ்க்கு தாத்தா ஊரு மெட்ராஸ்தான். அவன் லீவுக்கு அங்க வருவான். அங்க பெரிய பீச் இருக்காமே… பெரிய சினிமா தியேட்டர் இருக்காம். அங்க பாப்கார்ன் டேஸ்ட்டா இருக்குமாம். பெரிய பில்டிங் ஃபுல்லா அழகழகா நிறைய கடை இருக்குமாம். அங்க விதவிதமா ட்ரெஸ், டாய்ஸ்லாம் விப்பாங்களாம். தீம் பார்க்கெல்லாம் இருக்காம். என்ன அங்கெல்லாம் கூட்டிட்டுப் போவீங்களா டாடி?”
சரசரவென்று அவன் மனதில் எண்ணங்கள் அலைமோத…
ஏமாற்றத்துடன் ரொஸாரியோ போனை வைத்தார்.
“என்னாச்சு தாத்தா?”
“தெரியலயே. யாருமே எடுக்கலை... ஒருவேளை இது பழைய நம்பரோ என்னவோ. இன்னொரு தடவை ட்ரை பண்றேன்.”
பரணியின் முக வாட்டத்தைக் கண்ட ரொஸாரியோவுக்குப் பாவமாகப் போய்விட… அவர் மீண்டும் முயல… இந்தத் தடவை போன் எடுக்கப்பட்டது.
“ஹலோ…காயத்ரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்” என்றாள் ஒரு பெண்.
“வணக்கம்… ரொஸாரியோன்னு குன்னூர்லேர்ந்து பேசறேன்.”
“சொல்லுங்க சார்.”
“அங்க மிஸ்டர் ரகுன்னு இன்ஜினீயர் இருக்காரா? அவரோட பேசணும்.”
“இது ஆபீஸ் நம்பர் சார்.”
“ஸாரிம்மா. இந்த ஒரு நம்பர்தான் எங்கிட்ட இருக்கு.”
“என்ன பேர் சொன்னிங்க?”
“ரகு. இன்ஜினீயர்ம்மா.”
“இங்க நாப்பது இன்ஜினீயர்ஸ் இருக்காங்க. ரகுன்னு யாரும் இருக்கறதா தெரியலை. நான் இங்க சேர்ந்து சிக்ஸ் மன்த்ஸ்தான் ஆச்சி. கொஞ்சம் லைன்ல இருங்க. விசாரிக்கிறேன்.”
“சரிம்மா.”
கொஞ்ச நேரக் காத்திருப்புக்குப் பிறகு அவள், “அவர் வேலையை ரிசைன் பண்ணி நாலு வருஷம் ஆச்சாமே சார்.”
“உன் பேர் என்னம்மா?”
“ஸ்வாதி சார்.”
“ப்ளீஸ்… எனக்கு ஒரு ஹெல்ப் செய்யணும்மா நீ. என்னை உன் அப்பா மாதிரி நினைச்சுக்கோ. ரகுவை நான் முக்கியமா கான்டாக்ட் பண்ணியாகணும். அங்க நாலு வருஷம் முன்னாடி ரகுவோட வேலை பார்த்த யாராச்சும் இருந்தா கேளும்மா. ரகு இப்ப எங்க இருக்கார், அவர் நம்பர் டீட்டெய்ல்ஸ் கிடைச்சா உனக்கு ரொம்ப பெரிய தேங்க்ஸ் சொல்வேன். அவசரமில்ல. நீ விசாரிச்சி வைம்மா. நாளைக்கு இதே நேரம் போன் செய்றேன்.”
“முக்கியம்னு சொல்றிங்க… கட்டாயம் விசாரிச்சி சொல்றேன் சார்.”
போனை வைத்துவிட்டு பரணியிடம், “உங்கப்பா வேலை பாத்த காயத்ரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனிலேர்ந்து நாலு வருஷம் முன்னாடியே வேலைய விட்டு நின்னுட்டாராம். விசாரிச்சி சொல்லச் சொல்லிருக்கேன்.”
“போங்க தாத்தா!” என்று நொந்துபோன பரணியை மீண்டும் அணைத்துக்கொண்டு, “நான் என்னடா செய்வேன்? நாளைக்குள்ள கிடைச்சிடும். எப்படியாச்சும் உன்னை உங்கப்பாட்ட பேச வைக்க வேண்டியது என் பொறுப்பு. ஆனா ஒண்ணு… உங்கம்மாட்ட மட்டும் சொன்னே. என்னைத் தாளிச்சிடுவா” என்றபோது செல்போன் ஒலித்தது.
செல்போனில் பெயர் பார்த்துவிட்டு, “உங்கம்மாதான்” என்று பரணியிடம் சொல்லிவிட்டு, “என்னம்மா அஞ்சலி?” என்றார்.
“சார்… நான் சத்யா வீட்டுக்கு அவங்கம்மாவப் பார்க்க வந்தேன். இங்க மழை ஹெவியா பிடிச்சிடுச்சி. எப்ப நிக்கும்னு தெரியல. நான் வர்றவரைக்கும் பரணியக் கொஞ்சம் பாத்துக்கறிங்களா? அவன் பசிக்குதுன்னு சொன்னா…”
“எல்லாம் நான் பாத்துக்கறேன்மா. நீ பொறுமையா மழை நின்னதும் புறப்பட்டு வா” என்று வைத்தார்.
சத்யாவின் வீட்டில் அவன் அம்மா சரஸ்வதியுடன் கேரம் போர்டு விளையாடிபடி ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையையும் நடுநடுவில் பார்த்துக்கொண்டாள் அஞ்சலி.
இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இருட்ட வேண்டிய வானம், மழையினால் முன்னதாகவே இருட்டத் தொடங்கியிருந்தது.
அடித்துக் கொட்டவும் செய்யாமல், சின்னத் தூறலாகவும் இல்லாமல் சீராக நேர்க்கோடுகளாக ஒரே வேகத்தில் கொட்டிக்கொண்டிருந்தது மழை.
சட்டென்று வீட்டுக்குள் இருள் கவ்வியதால் எழுந்து மின் விளக்கைப் போட்டார் சரஸ்வதி.
“டீ சாப்பிடறியாம்மா?”
“நீங்க உக்காருங்க. நானே போடறேன்.”
அஞ்சலி இயல்பாக சமையல் மேடைக்கு வந்து பாலைச் சுட வைத்தாள். அவள் சுறுசுறுப்பாக டீ போடுவதைப் பார்த்த சரஸ்வதிக்குக் கண்கள் கலங்கின.
‘இதே போல்தான் என்னை எந்த வேலையும் செய்யவிடாமல் என் மருமளும் செய்வாள். அற்பாயுசில் உயிர்களைப் பறித்துச்செல்ல இறைவன் வைத்திருக்கும் நியாயம்தான் என்ன? போன ஜென்மத்தின் கர்மப் பலன் என்கிற ஆன்மிக சமாதானத்தை மனம் ஏற்க மறுக்கிறதே!’
சட்டென்று அவர் மனது அஞ்சலியையே தன் மருமகள் ஸ்தானத்தில் பொருத்திப் பார்த்தது.
விவாகரத்து பெற்று பையனுடன் வாழும் இவளையே மருமகளாக்கினால் என்ன?
இரண்டாம் திருமணம் என்கிற பேச்சை எடுத்தாலே எகிறிக் குதிக்கும் சத்யாவை மிரட்டி கிரட்டியாவது சமாதானம் செய்துவிடலாம் என்றாலும், இவள் மனதில் இரண்டாம் திருமணம் பற்றி என்ன எண்ணம் இருக்கிறதென்று தெரிய வேண்டுமே!
டீயுடன் வந்த அஞ்சலியிடம், “ஏம்மா...என் பையன் என்னதான் சொல்றான்?” என்றார் சரஸ்வதி.
“நானும் சந்தர்ப்பம் கிடைக்கிறப்பல்லாம் சொல்லித்தான் பாக்கறேன். ஆனா, அவர் மனசுல அப்படி ஒரு நினைப்பே இல்லை. ஒரு லெவலுக்கு மேல நானும் வற்புறுத்த முடியாதுல்லம்மா?”
“நீ என்னம்மா செய்வே… பாவம்! ஆனா நான் ஆசைப்படறது தப்பா, சரியா? அதை மட்டும் சொல்லு. அம்பது, அறுபது வயசுல பொண்டாட்டி போய்ட்டா யாரும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல மாட்டாங்க… வாழ வேண்டிய வயசில்லையா இது? அவனுக்கு ஒரு துணை இல்லாம இப்படியே விட்டுட்டு நான் செத்துப்போனா என் கட்டை வேகுமா?”
“உங்க நியாயம் எனக்குப் புரியுது. அவருக்குப் புரியலயே…”
“ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன். சொல்ல நினைச்சா சொல்லு. இல்லன்னா வேணாம். அந்த நேரத்துல ஒரு வேகம்…கோர்ட்டுக்குப் போனீங்க. பிரிஞ்சிட்டிங்க. ஒரு சமயம் நமக்கு நியாமாப் படற விஷயமே இன்னொரு சமயம் அநியாயமாப் படும். மனசாட்சியத் தொட்டுச் சொல்லு. மறுபடி நீயும் உன் புருஷனும் சேர்றதுக்கு வாய்ப்பே இல்லையா?”
இல்லை என்பதற்குத் தலையைக் குறுக்கே அமைதியாக அசைத்தாள் அஞ்சலி.
“ஆனா உன் பையன் அப்பா… அப்பான்னு ரொம்ப ஏங்கிப் போறானாமே? அதுக்காக நீ அவனைத் திட்றே, அடிக்கிறேன்னு சத்யா சொன்னான். பாவம்மா… அது பிஞ்சு…அதுக்கு என்ன தெரியும்?”
எதுவும் சொல்லாமல் அமைதியாகப் பீங்கான் கோப்பையில் டீ பருகினாள் அஞ்சலி.
“மெட்ராஸ்ல என் சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம் ஒண்ணு இருக்கு. அடுத்த மாசம் போவேன். பரணி அப்பா அட்ரஸ் குடு. நான் போய்ப் பேசறேனே… உங்க விவகாரத்துல வீட்ல பெரியவங்க இருந்து சமாதானம் பேசாம விட்டதுதான் தப்பு. என்ன சொல்றே?”
அவள் பதில் சொல்ல வாயெடுத்தபோது…
தடதடவென்று பைக்கில் ரெயின் கோட் போட்ட சத்யா வந்து இறங்கினான்.
அவன் வந்ததும் சரஸ்வதியின் கவனம் கலைந்து எழுந்து வாசலுக்கு வந்தார்.
சத்யா ஹாலுக்கு முன்பாக இருந்த நடையில், நனைந்த ரெயின் கோட்டைக் கழற்றித் தர… அதை வாங்கி அங்கிருந்த ஒரு மர ஸ்டாண்டில் மாட்டினார்.
“அஞ்சலி… மழை நின்னாலும்கூட நீ இப்ப போக முடியாது. வழில பவர் கட். ஒரு பெரிய மரம் வேற வேரோட சாஞ்சிக் கிடக்குது. ரோடெல்லாம் சறுக்குது. நானே ரொம்பப் பாத்துப் பாத்துதான் வந்தேன்” என்றான் சத்யா உள்ளே வந்து.
“அப்டின்னா இங்கயே தங்கிடு அஞ்சலி” என்றார் சரஸ்வதி.
(தொடரும்…)