விக்கி
readers@kamadenu.in
சென்னை கோடம்பாக்கம் சாலையில், பாம் குரோவ் ஓட்டலுக்குச் சற்று தள்ளி எதிர்ப்புறம் அமைந்திருக்கும் டீக்கடை இளையராஜா ரசிகர்கள் மத்தியில் பிரசித்தம். ‘எங்க அப்பா கடை’ எனும் பெயர்ப் பலகை தாங்கி வரவேற்கும் இந்தக் கடைக்குள் நுழைந்தால் ஒரே கான மழைதான். அத்தனையும் இளையராஜா இசைத்தவை. கடையின் சுவர் முழுவதும் இளையராஜாவின் அரிதான புகைப்படங்கள் காணக் கிடைக்கின்றன. அவருடன் பணியாற்றிய பாடகர்கள், பாடலாசிரியர்களின் படங்கள் என்று டீக்கடை முழுவதும், ஓர் இசை அருங்காட்சியகமாகக் காட்சியளிக்கிறது.
“நம்ம கடைக்கு வாடிக்கையா வர்ற பலர் இசைஞானி இளையராஜா சார் ரசிகர்கள்தான். அவங்க இங்க வர்றதுக்குக் காரணமே ராஜா பாடல்கள்தான். ஆபீஸ் இடைவெளியில இங்கே வந்து ராஜா பாட்டு கேட்டுட்டே ஒரு டீ குடிச்சு டென்ஷன் குறைச்சுக்குவாங்க” என்று சூடான இஞ்சி டீயுடன் ஆரம்பிக்கிறார் இந்தக் கடையின் உரிமையாளர் ஹரி நாராயணன். பின்னணியில் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடல், சூழலின் சிருங்காரத்தைக் கூட்டிக்கொண்டிருந்தது.
“அப்பா, அம்மா ரெண்டு பேரும் மலையாளிகள். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம், இந்திக்காரங்க அதிகமா வாழுற சவுகார்பேட்டைதான். பத்து வயசு வரைக்கும் இந்திப் பாடல்களா கேட்டு வளர்ந்தேன். 1976-ல, ‘அன்னக்கிளி’ வெளியானது… எங்க ஏரியாவுல ஒருத்தர்கிட்ட ரெக்கார்ட் பிளேயர் இருந்துச்சு. முதன்முதல்ல அங்கேதான் எல்.பி ரெக்கார்ட்ல ‘அன்னக்கிளி’ படத்தோட பாடல்களைக் கேட்டேன். தொடர்ந்து இந்திப் பாட்டா கேட்டுக்கிட்டு இருந்த எனக்குள்ளே அந்தப் பாடல்கள் என்னமோ பண்ணுச்சு… தொடர்ந்து ராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பிச்சேன்.