இனிக்கட்டும் பொங்கல் பரிசு!

By காமதேனு

தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய ரகப் பயிர்களைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருக்கிறது. நெல், கரும்பு, பருத்தி, சோளம், திணை, வாழை, தக்காளி உள்ளிட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இந்தப் புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இது வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும், தமிழக வேளாண் துறை இருக்கும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் தரும் நம்பிக்கையின் வீரியம் அதிகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய பருவமழை இல்லாமல் விவசாயிகள் அல்லலுற்றுவந்த நிலையில், இந்த ஆண்டு போதிய அளவுக்குப் பெய்த வட கிழக்குப் பருவமழை அவர்களின் மனதைக் குளிரச் செய்திருக்கிறது. அதேசமயம், மாநிலத்தின் சில பகுதிகளில் நெல் மகசூல் கணிசமாகக் குறைவு, விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளில் ஒரு தரப்பினர் கவலையில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் புதிய ரகப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்படுவது அவர்களின் சோர்வைப் போக்கி உற்சாகத்தில் ஆழ்த்தும்.

கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் போராடிவந்த நிலையில், தற்போதுதான் சற்று நம்பிக்கையூட்டும் சூழலைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், பாரம்பரியப் பயிர் ரகங்களைப் பாதுகாப்பது, பாசன வசதிகளை மேம்படுத்துவது, நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நமது விவசாயிகளுக்குச் செய்து தரப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE