கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
‘‘ச்சீன்னு ஆகிப்போச்சு. வேறென்ன பண்ண முடியும் என்னால. அப்போ என்னா பத்து வயசிருக்கும். இப்போ யோசிக்கிறப்போ அசிங்கமாதான் இருக்கு. மொட்டை மாடி. நல்ல வெயிலு. ஓரத்துல கிடந்த நிழல்லதான் அந்த நாயி அப்படிப் பண்ணுச்சி. சொந்தக்காரன்னுதான் வீட்ல விட்டாங்க. அதுதான் அப்படிப் பண்ணுச்சி. எனக்கு நிழலே பிடிக்காம போனது அப்போதான். வளந்தேன். திமுதிமுன்னு வளந்தேன். ( சற்றே குரலை உயர்த்தி...) மாதர் கீ சோத். எத்தனை நாயிங்க அப்புறம். நான் நாசமா போனதுக்கு எல்லாம் அந்த நாயிங்கதான் காரணம். எனக்கென்ன தலையெழுத்தா...இப்படி அழுக்கா அசிங்கமா கிழிஞ்ச புடவையோட கிடக்கணும்னு. இங்க எதுவுமே சரியில்ல. ரோடு சரியில்ல. கண்ணெல்லாம் எரியுது. ராத்திரி தூக்கம் கிடையாது. கண்ணை மூடினாலே வெயிலாதான் இருக்கு. எல்லாம் அசிங்கமா இருக்கிற இடத்துல நான் மட்டும்தான் சரியா இருக்கேன்னா யார் நம்புறா... நான் யார்கிட்டவும் எதுவும் பேசுறதில்ல. இப்படியே இருந்துட்டா யாருக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாதுல்ல. எனக்குன்னு யார் இருக்கா...வயித்துப்பசின்னு நான் எங்கேயும் கை ஏந்தலையே... வெயில்ல தூங்குறதுன்னா பிடிக்குது. தூங்குறேன். ( இயல்பான குரலில்...) நான் எப்பவும் இப்படித்தான் இருப்பேன். உன்னால முடிஞ்சா இரு. இல்லைனா போ. எனக்கொண்ணும் இல்லை. போ.''
சென்னையின் முக்கிய அடையாளமான ஸ்பென்சர் பிளாஸாவின் வாசலில் பாதசாரிகள் நடக்கும் நீண்ட பாதையில் கால் நீட்டி அமர்ந்தபடி முற்றிலும் மனநலம் பிறழ்ந்த இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். என்ன பேசுகிறார்கள் என்பதை நின்று கேட்கும் திராணி எனக்கு இல்லை. மேலே உள்ளது ஒரு கற்பனை. புனைவு. இப்படியும் பேசியிருக்கலாம். பேசாமலும் இருந்திருக்கலாம். சக மனிதர்கள் என்ற வகைமையிலிருந்து பைத்தியம் என்ற புள்ளிக்கு எப்போது எப்படி ஏன் நகர்கிறார்கள்? இந்தப் பதில் தெரியாத ரகசியமே மேலும் மேலும் அவர்களை நோக்கி உந்துகிறது. யாராவது ‘இந்தச் சமயத்தில் இப்படி ஒரு மதியத்தின் 3 மணிக்கு மேல் எனக்கு பைத்தியம் பிடித்தது' என்றொரு வாக்குமூலம் தருவாரானால் நாம் எவரையும் போய்க் கேட்டுக்கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத பட்சத்தில் மனநிலை பிறழ்ந்தவர்களின் இரவு இரவாகத்தான் இருக்குமா, நாம் ரசித்துக் கேட்கும் ஒரு பாடல் அவர்கள் செவிகளுக்கு மட்டும் விழாதா, இரண்டு நாட்களானாலே கெட்டுப்போய் நம் மூக்கைச் சுளிக்கவைக்கும் ஒரு தின்பண்டத்தை சாக்கடை அருகில் அமர்ந்து அவர்களால் எப்படி உண்ண முடிகிறது? மரத்துப்போனது பசியா, ருசியா?
யாசகன்கூட தன் பசியைக் கையேந்தி வெளிப்படுத்திவிட, இவர்களால் மட்டும் எப்படி யாரும் அணுக முடியாத மவுனச்சிறைக்குள் தங்களை வைத்துப் பூட்டிக்கொள்ள முடிகிறது? எதற்கு பயப்படுகிறார்கள்? எதற்கு விலகுகிறார்கள்? அவர்களுக்கென்று கேள்விகள் எதுவும் இல்லையா? அல்லது எல்லா பதில்களும் தெரிந்ததால் இந்த மவுனமா? எல்லா பதில்களும் தெரிந்தவர்களாகவே அவர்கள் இருக்கட்டும். என்னிடம் ஒரே ஒரு கேள்வி உள்ளது. அதற்கு அவர்கள் பதில் சொல்வார்களா?