ஜாசன்
jasonja993@gmail.com
நடக்குமோ நடக்காதோ என்று எதிர்பார்ப்பை எகிறவைத்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுக்கு முன்பாக மாதிரித் தேர்வு நடத்துவார்களே, அதேபோல் அடுத்த ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடந்த மாதிரித் தேர்வு என்று இதைச் சொல்லலாம். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் அவரவர் செயல்பாட்டுக்கு(!) ஏற்ப மதிப்பெண்களைக் கிராமப்புற மக்கள் வழங்கியிருக்கிறார்கள். கிராமப்புற மக்கள் எப்போதும் குசும்புக்காரர்கள்தான்.
யாருக்கு வளர்பிறை?
இந்தத் தேர்தலில் திமுகவைவிட அதிமுக பின்தங்கியிருக்கிறது. ஆனால், பெரிய வித்தியாசம் என்று சொல்ல முடியாது. இரண்டு கட்சிகளும் தத்தமது வேட்பாளர்களை நிறுத்தினாலும் ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சுயேச்சைகள் பயன்படுத்தும் சின்னங்களைத்தான் இரு கட்சிகளும் பயன்படுத்த வேண்டி வந்தது. எனவே, இந்த வெற்றியில் வேட்பாளர்களின் உள்ளுர் செல்வாக்கும் ஒரு காரணம். ஆனால், தங்களுக்குத்தான் வெற்றி என்று இரு கட்சிகளும் மல்லுக்கட்டுகின்றன. யார் வளர்பிறை என்பது பற்றி சட்டமன்றத்தில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் பெரும் விவாதமே செய்தார்கள்.
நிற்க. இந்தத் தேர்தலின் பின்னணியில் இன்னும் இரண்டு விஷயங்களையும் அலசலாம். அவை - கமலின் தெளிவற்ற அரசியல். ரஜினியின் குழப்ப அரசியல்.