போர்முனை டு தெருமுனை 22: காதுக்கு கார்போஜன்

By ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

வீடுகளுக்கு வண்ணம் பூசுவது அழகுக்காகவும் சுவர்களைப் பாதுகாக்கவும் மட்டுமில்லை. அதில் வாழ்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் வேலையையும் சுவரின் வண்ணம் செய்தால் என்ன என்று மாற்றி யோசித்திருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள்.

பூச்சிக்கொல்லிப் பூச்சு

சுவர்களுக்கு விதவிதமான வண்ணங்களில் அழகு தருவதோடு கூடுதல் செலவின்றி கொசு விரட்டியாகவும் விளங்குகிறது ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள வண்ணப்பூச்சு (பெயின்ட்). கொசு மட்டுமல்ல... கரப்பான், கரையான், எறும்பு, பிற ஊறும் பூச்சிகள், வண்ணம் பூசப்பட்ட அறையில் நுழையா வண்ணம்(!) உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் பூச்சு. மெதுவாக பூச்சிமருந்து வெளியிடும் பூச்சு என்ற பொருள்படும் ‘ஸ்ரிப்’ (Slow Release Insecticidal Paint-SRIP) என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த பெயின்ட். சுவரில் ஊறும் பூச்சிகளைக் கொல்லப் போதுமான மருந்தை இந்த பெயின்ட் வெளியிடும். ஒரு முறை பூசப்பட்டால் இரண்டாண்டுகளுக்கு இதன் வீரியம் இருக்கும். வெள்ளை நிறத்தில் கிடைக்கும் இதனோடு நிறமிகளைச் சேர்த்து எந்த வண்ணத்தையும் பெறலாம். பூசப்பட்ட ஒரு மணிநேரத்தில் உலர்ந்துவிடும் இந்த பெயின்ட்.

போர்க்கப்பல்கள், ராணுவ வீரர்கள் புழங்கும் நிலவறைகள் எனப் பூச்சிகளின் தொல்லைகள் இருக்கும் இடங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த பெயின்ட், வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுவிட்டது. ராணுவ உபயோகத்தையும் தாண்டி, பயணிகள் ரயிலின் பெட்டிகளிலும் இது பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வீட்டுச் சமையலறை, உணவகங்கள், மருத்துவமனைகள், கிடங்குகள் ஆகியவற்றிலும் இந்த பெயின்ட் ஒரு வரப்பிரசாதம்.

கரப்பான் மாத்திரை

கப்பல்கள், பதுங்கு குழிகள், ராணுவ முகாம்களில் கரப்பான் பூச்சி தொல்லை உண்டு. உணவுப்பொருள் சார்ந்த நோய்க்கிருமிகளை கரப்பான் பரப்பும். இடுக்குகளிலும், துளைகளிலும் ஒளிந்து கொள்ளும் இப்பூச்சிகளை திரவ மருந்து தெளித்து கட்டுப்படுத்துவது சற்று சிரமம். ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கரப்பான் மாத்திரை (Roachtox) இதற்கு நல்ல தீர்வாக அமைந்திருக்கிறது. இந்த மாத்திரை, பூச்சிகளைக் கவர்ந்திழுத்துக் கொல்லும். இது தவிர, சாக்பீஸ் வடிவத்தில் கோடுவரைந்து பூச்சிகளைக் கொல்லும் ‘ரோச்லைன்’ (Roachline) மருந்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரைக் கூச்சம்

‘மூழ்கும் கப்பலை விட்டு எலிகள் ஓடிப்போகும்’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் உண்டு. அந்த அளவுக்கு எலிகளுக்கும் கப்பலுக்கும் தொடர்பு உண்டு. வீரர்களுக்கு ஆயுதங்களை உருவாக்குவதோடு, அவர்களின் அன்றாட படைக்கள வாழ்வை சுலபமாக்கும் பணியையும் ராணுவ விஞ்ஞானிகள் செய்கின்றனர். போர்க்கப்பல்களில், ராணுவ முகாம்களில் எலிகளின் தொல்லையைப் போக்க, ‘ரேட்டாக்ஸ்’ (Ratox) என்ற எலிமருந்தை உருவாக்கியுள்ளனர். எலிகளின் ஃப்ளுரோஅசிட்டமைட் என்ற நரம்புமண்டலத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் வேதிப்பொருளால் உருவாக்கப்பட்டது ‘ரேட்டாக்ஸ்’. எலிகள் புத்திசாலிகள். பொறி இரையை (Bait) கொஞ்சம் உட்கொண்டு அதனால் வரும் உடலியல் மாற்றங்களை எலிகள் அறிந்து கொள்ளும். அடுத்த முறை பொறி இரையைத் தொடாமல் கடந்து செல்லும். இதற்கு இரைக் கூச்சம் (Bait shyness) என்று பெயர். இதனால் பல எலிமருந்துகள் அதிகப் பலனைத் தருவதில்லை. ராணுவ விஞ்ஞானிகளின் ‘ரேட்டாக்ஸ்’, உடனடியாக எலிகளைக் கொல்வதால், இரைக் கூச்சத்திற்கு வாய்ப்பில்லை. மருந்தை உட்கொண்ட எலிகள் மறுபடியும் வலைக்குச் செல்லாமல் இரைக்கு அருகிலேயே இறப்பதால் அவற்றின் உடல்களை அப்புறப்படுத்துவதும் எளிது. இந்த மருந்து உணவுக்கிடங்குகளிலும், கப்பல்களிலும், உணவகங்களிலும் நல்ல பலனைத் தந்திருக்கிறது.

காதுக்கு கார்போஜன்

விமானப்படைத் தளங்களில் பணிபுரியும் வீரர்கள் விமான இன்ஜின் எழுப்பும் பெரும் இரைச்சலை தினந்தோறும் சமாளித்தாக வேண்டும். ராணுவ டாங்க் வாகனத்தில் பயிற்சி செய்யும் வீரர்கள், துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் எனத் தொடர்ந்து இரைச்சலில் புழங்கும் இந்த வீரர்கள் காதுக் கவசங்கள் அணிந்திருந்தாலும், அவர்களுடைய கேட்கும் திறன் நாளைடைவில் பாதிக்கப்படுவதுண்டு. போர்க்காலங்களில் இரைச்சலின் பாதிப்பை சொல்லி மாளாது. இப்படி இரைச்சலினால் ஏற்படுகிற கேட்கும் குறைபாட்டை (Noise-Induced Hearing Loss -NIHL) தடுக்கவும் குறைக்கவும் ஒரு அறிவியல் வழியுண்டு. என்ன அது?
கார்போஜன் வாயுவைச் சுவாசிப்பது! ஆக்சிஜன் கேள்விப்பட்டிருக்கிறோம். கார்போஜன் என்றால் என்ன? 95% ஆக்ஸிஜனும் 5% கார்பன் டை ஆக்ஸைடும் கலந்த கலவைதான் கார்போஜன். இதற்காக ராணுவ விஞ்ஞானிகள் ஒரு தனி சுவாச நிலையத்தை உருவாக்கியுள்ளனர். பணிக்கு இடையில் குறிப்பிட்ட காலநேரத்துக்கு கார்போஜனை சுவாசிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 பேர் கவசமணிந்து சுவாசிக்கும் வகையில் ராணுவ விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இந்த சுவாச நிலையம் போர் வீரர்களுக்கு மட்டுமன்றி, ஒலி மாசுள்ள சூழலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் மிக உதவிகரமாக அமையும். டில்லியில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான பாதுகாப்பு உடலியல் மற்றும் சார்பு அறிவியல் நிறுவன விஞ்ஞானிகளின் பங்களிப்பு இது.

மண்ணெண்ணெய் அனல்

உடல் சில்லிடும் பனிப்பிரதேசத்தில் மனிதர்கள் வாழ அறைகளில் அனல்மூட்டி தேவை. மின்சாரமில்லாத இடங்களில் மின்கலன்களில் இயங்கும் விளக்குகள் சாத்தியம். ஆனால், அதிக மின்சக்தி தேவைப்படும் அனல் மூட்டிகள் மின்கலனில் இயங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. இத்தகையச் சூழலில் பயன்படுத்த மண்ணெண்ணெயில் இயங்கும் அனல்மூட்டிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். குறைந்த எரிபொருளில் அதிக அனலைத் தரும் இவ்வகை அனல்மூட்டி, மிகக்குறைந்த கார்பன் மோனாக்சைட் வாயுவை வெளியிடும்.

சூரிய ஒளியால் சூடாகும் வகையில் கண்ணாடி கூரை வேய்ந்த ‘சௌர்ஜா’ (Sourja) என்ற சூரியக்குடில்களையும் ராணுவ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். சூரிய மின்சக்தியின் மூலம் மின்கலன்களை மின்னேற்றம் (Charging) செய்யும் வசதியும் இதில் உண்டு. பனிப்பகுதிகளில் பலத்த காற்று வீசும். எனவே, காற்றுச் சக்தியின் மூலம் மின்கலன்களை மின்னேற்றம் செய்யும் கூடுதல் வசதியும் இதிலுண்டு.

தீவிரவாதிகளுக்குப் பதிலடி

நகர்ப்புற தீவிரவாத தாக்குதல்கள் பெருகி வருகிற சூழலில் புதிது புதிதான தேவைகளும் பாதுகாப்புப் படையினருக்கு ஏற்படுகின்றன. உதாரணமாக, வணிக வளாகங்களில், நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் பொதுமக்களைப் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கும் சூழலில், பாதுகாப்பாக கட்டிடத்திற்குள் நுழைந்து பொதுமக்களை மீட்க, குண்டு துளைக்காத சிறிய வாகனம் தேவை. இரண்டு மூன்று வீரர்கள் அமர்ந்து பயணிக்க வசதியான சிறிய வாகனம் இருந்தால் கட்டிடத்தின் நடைக்கூடங்களில் (Corridors), சுற்றியுள்ள குறுக்கு சந்துகளில் கூட பயணப்பட்டு பதில் தாக்குதல் தொடுக்கலாம். இதற்காக ராணுவ விஞ்ஞானிகள் சிறிய குண்டு துளைக்காத வாகனத்தை உருவாக்கியுள்ளனர். மூன்று டன் எடையுள்ள இந்த வகை வாகனங்கள் மிகக்குறுகிய ஆரத்தில் திரும்பும் (Short turning radius). வீரர்கள் வெளியேற வசதியாக வாகனத்தின் கூரையில் அவசர காலத் திறப்பும் உண்டு.

எதிர் தீவிரவாத வாகனம் (Anti Terrorist Vehicle-ATV) எனக் குறிப்பிடப்படும் இவ்வாகனங்களை மராட்டிய மாநிலத்தின் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

எதிர்காலத் தொழில்நுட்பங்கள்

முப்படைகளின் அறிவியல் முதுகெலும்பாக விளங்கும் ராணுவ விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), போர் பயிற்சிக்கு பயன்படும் போர் விளையாட்டு (War game) மென்பொருள், ரேடார் கருவிகள், மெய்நிகர் யதார்த்தம் (Virtual reality) உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் களங்களில் செய்துள்ள பங்களிப்புகள் என்னென்ன? அவற்றால் பொதுமக்கள் அடைந்த நன்மைகள் என்ன?

(பேசுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE