கலங்கடிக்கும் கரூர் ரவுடி- கல்லூரிக் காளைகளையும் இழுக்கும் ரேக்ளா!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

முன்பெல்லாம் தை பிறந்துவிட்டால், கல்லூரிகளில் மாணவ - மாணவியரை வைத்துப் பாரம்பரிய பொங்கல் விழா நடத்துவது வழக்கம். இப்போதெல்லாம், பொங்கல் என்றாலே ரேக்ளா பந்தயங்கள் நடத்தி பட்டையைக் கிளப்புகிறார்கள் சில தனியார் கல்லூரி நிர்வாகத்தினர். அதிலும் கோவை பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகள் நடத்தும் ரேக்ளா பந்தயங்கள் ரகளை ரகம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்ததன் விளைவாக, ஜல்லிக்கட்டின் துணை விளையாட்டான ரேக்ளா பந்தயத்துக்கு இளைஞர்கள் மத்தியில் இத்தனை மவுசு!

கோவை நீலம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜனவரி 5-ம் தேதி நடத்திய ரேக்ளா பந்தயத்தைக் காணச் சென்றிருந்தேன். திரும்பிய திசையெல்லாம் இளைஞர் பட்டாளம்தான்.

கல்லூரிக்குப் பின்புறம் விஸ்தாரமான பொட்டல் காட்டில்தான் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. ஆயிரக்கணக்கில் காளைகளும் வண்டிகளும் குவிந்திருந்தன. அதைவிட அதிகமாய் மனிதத் தலைகள். நான் சென்ற சமயம் 200 மீட்டருக்கான ரேக்ளா வண்டிப் பந்தயம் நடந்துகொண்டிருந்தது. மைக் செட்டில் நேரடி வர்ணனை பந்தயத்துக்கு விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டிருந்தது.
“உட்ரீ.... உட்ரீய்ய்ய்... ஓய்... ஓ... ஓ” எனும் கூச்சலால் அந்தப் பகுதியே அதிர்ந்தது. பறந்து வரும் காளைகள். விரட்டும் வண்டியோட்டிகள் என்று புழுதி பறக்கும் காட்சிகள் பரபரப்பைப் பற்றவைத்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE