தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், உயர் கல்வியைத் தாய்மொழியில் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று நமது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியிருக்கிறார்.
பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் வெள்ளிவிழாவில் உரையாற்றிய அவர், உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம்கூட இடம்பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், அதுபோன்ற உயர்ந்த இலக்கை அடைய உயர் கல்வியில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தத் தருணத்தில், இன்றைக்குப் பள்ளிக் கல்வி அளவிலேயே, தாய்மொழி யிலிருந்து ஆங்கில வழிக்கு மாறும் போக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது என்று கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் எனும் இரண்டு மொழிகளிலும் மாணவர்களின் மொழித் திறன் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை என்பதும் நடைமுறை உண்மைதான்.
உண்மையில் பள்ளிக் கல்வியிலிருந்தே தாய்மொழி வழிக் கல்வியை வளர்த்தெடுத்தால்தான், உயர் கல்வியிலும் தாய்மொழிக் கல்வி நல்ல பலன் கொடுக்கும். உயர் கல்வியில் துறை சார்ந்த புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் தரத்தில் தாய்மொழியில், குறிப்பாகத் தமிழில் இல்லை என்றும் விமர்சனங்கள் உண்டு.