“பயமா இருக்குடா. ஒரு பெரிய உண்மைய அவகிட்ட மறைச்சிட்டிருக்கேன். அது உடையறப்ப எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு என்னால யோசிக்கவே முடியல” என்றான் ரகு.
எந்த பதிலும் சொல்லாத மதன், தன் சிகரெட்டின் முனையில் நீளமாய்ச் சேர்ந்திருந்த சாம்பலையே பார்த்தபடி இருந்தான். தற்காலிக ஆஷ்ட்ரேயாக மாறியிருந்த காலி தீப்பெட்டிக்குள் அதைத் தட்டினான்.
மதன் பள்ளிப் பருவத்திலிருந்து நண்பன். விளையாட்டு வகுப்பில் ரகு கீழே விழுந்து சிராய்த்து ரத்தம் வந்தபோது ஓடிவந்து எச்சில் வைத்தவன்.
அன்று முதலே வாடா போடா நட்பு தொடங்கிவிட்டது. கல்லூரிக் காலத்தில் ரகு சிவில் இன்ஜினீயரிங் தேர்வுசெய்ய… மதன் ஒரு டிகிரி மட்டும் போதுமென்று கலைக் கல்லூரியில் பி.காம் தேர்வுசெய்தான்.
ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத ஏக்கத்தை வார இறுதி நாட்களில் சேர்ந்து சுற்றித் தீர்த்துக்கொண்டார்கள்.
ரகுவின் கல்லூரித் தோழர்கள் அனைவரும் மதனுக்கும் நண்பர்களாகி, மதனின் கல்லூரித் தோழர்கள் அனைவரும் ரகுவுக்கும் அறிமுகமாகி, டீம் பிரித்து மாநகராட்சித் திடல்களில் கிரிக்கெட் விளையாடும் அளவிற்குப் பெரிய நட்பு வட்டம் உருவானது.
ஆனாலும் ரகசியங்கள் பகிர்ந்து மிக மிக அந்தரங்கம் பேசுவது இவர்கள் இருவருக்குள் மட்டுமே.
மதன் ஆட்டோமொபைல்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தினாலும், அங்கே சரியான நபர்களைப் போட்டிருந்ததால் தினம் ஒரு மணி நேரத்திற்கு மேல் கடையில் இருக்க மாட்டான்.
அவன் ரசனை வேறு மாதிரி. திடீரென்று கிட்டார் கற்றுக்கொள்வான். திடீரென்று ஓவியம் கற்றுக்கொள்வான். திடீரென்று பேண்டேஜுடன் வந்து நிற்பான். என்னடாவென்றால் ஹார்ஸ் ரைடிங் கற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்வான்.
ஒரு வாரத்திற்குக் காணாமல் போய்விடுவான். மனைவி பவானியிடம் கேட்டாலும், “எங்கன்னு சொல்லலையே, ஒரு வாரத்துல வருவேன்னு சொல்லிட்டுப் போனாரு” என்றுதான் பதில் வரும்.
பிறகு கையில் காசி விஸ்வநாதர் ஆலயப் பிரசாதத்துடன் வந்து நிற்பான். “என்னமோ தோணிச்சி… போனேன்” என்பதைத் தாண்டி வேறு விளக்கம் இருக்காது.
ஒரு நாள் ரகுவின் அலுவலகத்திற்கு வந்து நின்று, “அர்ஜென்ட்டா எனக்கு உன் அட்வைஸ் வேணும்டா ரகு” என்றான்.
வெளியே டீக்கடைக்கு அழைத்து வந்ததும், “ஒரு பழைய சொத்து வித்து ஒரு கோடி வந்துச்சி. அதுக்குள்ள
ஒரு நல்ல சினிமா எடுக்கலாம்னு சொல்றாங்க. எடுக்கட்டுமா?”
“டேய்! என்னடா தெரியும் உனக்கு சினிமா பத்தி?”
“தெரிஞ்சிக்கிட்டாப் போச்சி.”
“அது ஒரு மாய வலைடா!”
“அப்படின்னு பல பேரு சொல்றாங்க. ஏன் அது மாய வலைன்னு தெரிஞ்சுக்குவமே…”
“லூசாடா நீ? அதுக்கு விலையா ஒரு கோடி குடுப்பியா?”
“நஷ்டம்தான் வரும்னு ஏன் நெகடிவ்வா யோசிக்கணும்?”
“ஒழுங்கா ரெண்டு ஃபிளாட் வாங்கிப்போடு. வாடகை வரும்.”
“நான் கடையில் சம்பாரிக்கிறதே எக்கச்சக்கமா வருது. இந்த ஒரு கோடியும் போனாலும் என்னை எதுவும் பாதிக்காது.”
“எனக்கு சரியாப் படல.”
என்ன சொல்லியும் கேட்காமல் ஒரு ஆபீஸ் போட்டு பலருக்கும் அட்வான்ஸ் கொடுத்து பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு படத்திற்கு பூஜையே போட்டுவிட்டான். ரகுவும் போய் வாழ்த்திவிட்டு வந்தான்.
அன்றைக்கு இரவு ரகு வீட்டில் வேறு மாதிரி யுத்தம்!
“ஏன் ரகு… இவ்ளோ க்ளோசா பழகறியே… மதன்ட்டேருந்து எதுவுமே கத்துக்க மாட்டியா?”
“சிகரெட், தண்ணி எல்லாம் அவன்தான் கத்துக்குடுத்தான். இப்ப நான் வேற என்ன கத்துக்கணும்னு சொல்றே?”
“வேண்டாத விஷயத்த மட்டும் கத்துட்டிருக்கே.”
“வேண்டிய விஷயம் என்ன கத்துக்கணும்னு சொல்லு.”
“எப்படி ரிஸ்க் எடுக்கறார் பாரு… துறுதுறுன்னு ஏதாச்சும் செய்றாரு… சினிமா எடுக்க தைரியம் வேணும். கண்டிப்பா அதுல ஜெயிப்பார் பாரு.”
“அவன் ஒரு நார்மல் பர்ஸனே இல்லடி. யுனிக். அவனோட என்னைக் கம்பேர் பண்ணாத.”
“ஆமாம்… அவருக்கு மட்டும் ரெண்டு கொம்பு எக்ஸ்ட் ராவா முளைச்சிருக்கு? என் வாயை அடைக்கிறதுக்கு எல்லாத்துக்கும் ரெடியா ஒரு பதில் வெச்சிருக்கே.”
“ஓகே. தாம்பரம் லேண்டை வித்துட்டு நானும் ஒரு சினிமா எடுக்கணும்னு சொல்றியா?”
“அவர் ஏற்கெனவே சொந்தமா ரெண்டு வீடு வெச்சிருக்காரு. அந்த மாதிரி நீயும் வாழ்றதுக்கு ஒண்ணு, வருமானத்துக்கு ஒண்ணுன்னு ரெண்டு வீடு ரெடி பண்ணிருந்தா…. தாராளமா எடுன்னு சொல்வேன்.”
“சுத்தி சுத்தி இங்கயே வந்து நில்லு!”
“ஒரு விஷயம் நடக்கற வரைக்கும் அது பத்தி மட்டும்தான் நினைக்க முடியும். பேச முடியும்.”
அன்றைக்கும் வீட்டை விட்டு வெளியேறி மதனுடன் சரக்கடித்தான் ரகு.
பட வேலைகள் தொடங்கிய இரண்டே மாதத்தில் ஆபீஸை மூடிவிட்டான் மதன்.
“அந்தப் படம் ட்ராப் பண்ணிட்டேன் ரகு” என்றான்.
“என்னாச்சுடா?”
“ஒரு ப்ரொடியூசர்கிட்டேர்ந்து எல்லாரும் எதிர்பார்க்
கறது காசு மட்டும்தான்டா. ஷூட்டிங் நடக்கற இடத்துக்குப் போனா ஒரு பய என்னை மதிக்க மாட்டேன்றான். திரைக்கதை சரியில்லையாம்… மரத்தடில நின்னு லைட்மேன்லாம் பேசறது காதுல விழுவுது.”
“இது ஒரு பிரச்சினையாடா? ஷூட்டிங்குக்குப் போகாம இருந்துட வேண்டியதுதான?”
“அதெப்படி? நீ வீடு கட்றே! அங்க போய் நிக்க மாட்டியா? அப்பதான அங்க என்ன அநியாயம் எல்லாம் நடக்குதுன்னு தெரியும்.”
“அப்படி என்னதான் நடந்துச்சி?”
“என் ஹீரோயின் இந்தில ரெண்டே ரெண்டு படம்தான் நடிச்சிருக்கா. அவ மேக்கப் போட்டுக்கிட்டுப் போனாலும் ரோட்ல யாருக்கும் தெரியாது. அவ கூட பத்து பேரு வர்றான். கேட்டா பவுன்சர்ஸ்னு சொல்றாங்க. பெரிய ஹோட்டல்ல, பார் வாசல்ல நிப்பானுங்க பாரு… அந்த மாதிரி! அவனுங்களுக்கும் நான்தான் சம்பளம், சாப்பாடு எல்லாம் தரணுமாம். என்னடா நியாயம்?”
“நிஜமாவா சொல்றே?”
“நிஜமாடா! அவளுக்குப் பாதுகாப்பே தேவையில்ல. அப்படியே வேணும்னா அவதானே செலவு பண்ணிக்கணும்? இதைக் கேளு... ஒரு செகண்ட் ஹீரோ யாரையோ திட்டி பேட்டி குடுத்துட்டான். பத்துப் பேரு செட்டுக்கு வந்து கைல கிடைச்சதை எல்லாம் தூக்கி அடிச்சி உடைச்சிப் போட்டுட்டுப் போய்ட்டானுங்க.”
“அவனுக்கு எதிர்ப்புக் காட்டணும்னா அவன் வீட்டுக்குத்தானே போகணும்?”
“எல்லாமே நியாயம், அநியாயம் பாத்துதான் நடக்குதா? அதுல நாலு லட்சம் போச்சு. நீ சொல்லு. இது என் கணக்குல எப்படி வரும்? அவன் லொள்ளுத்தனமா பேட்டி குடுத்ததுக்கு ஏற்பட்ட ரியாக்ஷன் அது! நான் எப்படி பொறுப்பாவேன்? இந்த மாதிரி தண்டமா நூறு செலவு வருது. வெறுத்துப்போச்சு. போங்கடான்னு ஆபீஸை மூடிட்டேன். நாப்பது லட்சம் மொய்!”
“அப்பவே சொன்னேன்.”
“தப்புதான். தப்புதான்.”
“இந்த லட்சணத்துல என் பொண்டாட்டி உங்கிட்ட என்னை பாடம் கத்துக்கச் சொன்னா.”
“விடு ரகு. நான் என்ன ஆத்துலயா கொட்னேன். எத்தனை குடும்பம் அந்தப் பணத்துல வாழ்ந்துச்சி” என்ற மதன், அடுத்த நாளே தன் வாழ்வில் அப்படி ஒரு சினிமா முயற்சி நடக்கவே இல்லை போல இயல்பானான்.
அடித்த தென்றல் காற்றில் கொடிக் கயிற்றில் துணிகள் இல்லாமல் தொங்கிய பிளாஸ்டிக் கிளிப்புகள் ஒரே திசையில் சரசரவென்று சத்தம் செய்தபடி நகர்ந்தன.
“சொல்லிடறது பெட்டர்னு தோணுது. அதுக்கு முன்னாடி.. ஒண்ணு செய்யி. உன் வைஃப் தினம் பஸ்லயும், ட்ரெய்ன்லயும் ஆபீஸ் போய்ட்டு வர்றதுக்கு சிரமப்படறாங்க இல்ல… முதல்ல ஒரு ஸ்கூட்டர் வாங்கிட்டுப் போய் நிறுத்து. பயங்கரமா ஹேப்பி ஆயிடுவாங்க. அப்ப பக்குவமா மேட்டரைச் சொல்லிடு.”
“கை குடுடா. சூப்பர் யோசனைடா” என்று உற்சாகமாக மதன் கையைக் குலுக்கினான் ரகு.
மறுநாளே அஞ்சலிக்குப் பிடித்த பிங்க் நிறத்தில் ஸ்கூட்டியை அவள் பெயரிலேயே வாங்கி, பார்க்கிங் பகுதியில் தன் பைக் அருகில் நிறுத்திவிட்டு மாடிக்கு வந்து மணியடித்தான் ரகு.
குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த அஞ்சலியிடம், “பரணியத் தூக்கிட்டு ஒரு நிமிஷம் என்னோட வா” என்றான்.
“எங்க? நான் நைட்டில இருக்கேன்.”
“பரவால்ல… வா.. சொல்றேன்.”
புரியாமல் நுறு கேள்விகள் கேட்டபடி லிஃப்ட்டில் வந்த அஞ்சலிக்கு எதுவும் சொல்லாமல் மெளனம் காத்து தனது பார்க்கிங் பகுதிக்கு அழைத்து வந்தான்.
ஸ்கூட்டியைப் பார்த்த அஞ்சலி, “யாரு இது நம்ம எடத்துல நிறுத்திருக்கறது? மாணிக்கம்! மாணிக்கம்!” என்றாள்.
“ஏய்! இரு! கத்தாத! இது உனக்காக நான் வாங்கினது. கொஞ்சம் லேட்டா குடுக்கற வெட்டிங் டே கிஃப்ட்னு வெச்சிக்கயேன். பாரு… கலர் பிடிச்சிருக்கா?”
அஞ்சலி கண்கள் விரிய, முகம் பூரிக்க உற்சாகப் படுவாள் என்று எதிர்பார்த்தால்… மாறாக, “என்ன விளையாட்டு இது? எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டியா? மொதல்ல போய் திருப்பிக் குடுக்க முடியுமான்னு பாரு” என்றவளைப் புரியாமல் பார்த்தான் ரகு.
(தொடரும்…)