ஹாட் லீக்ஸ்- நயினாருக்கு காவடி தூக்கும் பொன்னார்

By காமதேனு

நயினாருக்கு காவடி தூக்கும் பொன்னார்

பாஜக மாநிலத் தலைவர் பதவியை பிடிக்க ஆளாளுக்கு முட்டி மோதுகிறார்கள். ஆனால், இந்த ரேஸில் இருக்கும் அத்தனை பேருமே தங்களுக்குப் போட்டியாக வரும் மற்றவர்களின் செயல்பாடுகள் குறித்தும், கட்சியை வைத்து அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டது குறித்தும் தாறுமாறாக தலைமைக்கு போட்டுக் கொடுக்கிறார்களாம். இதனால், ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவரை தவிர்த்துவிட்டு திராவிட பின்னணி கொண்ட ஒருவரை தலைவர் பதவியில் உட்காரவைக்கலாமா என்ற விவாதம் தாமரை தலைமையில் தடதடக்கிறதாம். இதைப் புரிந்துகொண்ட முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்கிறாராம். “இருவரும் ஒரே மண்டலத்து ஆட்களாயிற்றே...” என்று கேட்டால், “நமக்கு கிடைக்காவிட்டாலும் நமக்கு ஆகாத ஒருவர் அந்தப் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் பொன்னார்” என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

அன்வர் ராஜாவை அலறவிட்ட மண்டபம்!

“குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களித்ததால், தமிழகத்தில் சிறுபான்மையினரின் ஆதரவை அதிமுக இழந்துவருகிறது” என்று சமீபத்தில் பகிரங்கமாகவே வெடித்தார் அதிமுக சிறுபான்மை பிரிவுச் செயலாளர் அன்வர் ராஜா. அது அவரது பிள்ளைகள் விஷயத்திலேயே உண்மையாகியிருக்கிறது. மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அன்வர்ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியாவும் போட்டியிட்டார். ஆனால், முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் அந்த வார்டில் அதபியாவைத் தோற்கடித்து திமுக வேட்பாளர் சுப்புலட்சுமியை 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். இதே ஒன்றியத்தின் இன்னொரு வார்டில் போட்டியிட்ட அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் 983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது குறிப்பிடத்தக்கது. பிள்ளைகள் தோற்ற கோபத்தை அன்வர் ராஜா எங்கே காட்டப்போகிறாரோ தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE