நானும் ஒரு எழுத்தாளர் தான்!- ஆட்டோ ஓட்டுநர் முபீதா நாசர்

By காமதேனு

என்.பாரதி
readers@kamadenu.in

குமரி மாவட்டத்தின் தக்கலை, மேட்டுக்கடை சந்திப்பில் நிற்கிறது அந்த ஆட்டோ. சவாரிக்காகக் காத்து நிற்கும் நேரத்தில் கையில் வைத்திருக்கும் தாளில் மும்முரமாக எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார் அந்த ஆட்டோவின் ஓட்டுநர். ஆர்வம் மிகுந்துபோய் அருகில் சென்று விசாரித்தேன். “என் பேர் முபீதா நாசர். நானும் ஒரு எழுத்தாளர் தான்” என்று எளிமையாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பெயரைக் கேட்டதும், ‘நாற்பத்தியொரு இரவுகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பின் நினைவு மனதில் மின்னலாக வெட்டியது. ஆம், அந்தப் புத்தகத்தின் மூலம் பல்வேறு விருதுகளை வென்ற எழுத்தாளர் முபீதா நாசர் இவர்தான்!
அறிமுகப்படலத்துக்குப் பின்னர், தன் வாழ்க்கைப் பின்னணி பற்றி பேசத் தொடங்கினார் முபீதா நாசர்.

“என்னோட பேர் நாசர்தான். என்கூட பிறந்தவங்க நாலு பேரு. அதுல ஒரு தங்கச்சி பேர் முபீதா. அவங்க ரொம்ப சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அவங்க நினைவா அவங்க பேரையும் சேர்த்து ‘முபீதா நாசர்’னு எழுதிக்கிட்டு இருக்கேன். என்னோட அப்பா ஹனீபா டீக்கடை வச்சுருந்தார். ரொம்ப விளிம்புநிலையிலதான் ஆரம்பகால வாழ்க்கை நகர்ந்துச்சு. ம்... இப்பவும் அப்படித்தான்!

படிக்கிறதுக்கு வசதியில்லாம அஞ்சாம் வகுப்போட பள்ளிப் படிப்பை நிறுத்திட்டேன். அப்புறம் டீக்கடை, பீரோவுக்கு வெல்டிங் செய்ற வேலைன்னு டஜன் கணக்குல தொழில் மாறிட்டேன். ஆனா, எந்தச் சூழல்லயும் நூலகத்துக்குப் போறதை மட்டும் நிறுத்தவே இல்லை. இடையில கொஞ்ச காலம் சென்னையில ஒரு கம்பெனியிலும் வேலை செஞ்சேன். அங்கே வாரத்துக்கு ஒரு நாள்தான் லீவு விடுவாங்க. அப்பக்கூட கன்னிமாரா நூலகத்துக்குப் போயிடுவேன். மதியம் சாப்பிடப்போனா ஒரு மணி நேரம் வீணாப்போயிடுமேன்னு அதுக்குக்கூட போகாம உட்கார்ந்து வாசிப்பேன். வாசிப்புல அப்படியொரு ஆர்வம்” என்று சொல்லும் முபீதா நாசர், 16 வயதிலேயே எழுத்தாளராக ஆகிவிட்டார். ‘தடம்புரண்ட தண்டவாளம்’ இதுதான் இவர் எழுதி பத்திரிகையில் முதலில் வெளியான சிறுகதை.
தொடர்ந்து சிறுகதை உலகில் இயங்கிவந்த இவர், 2015-ல், ‘நாற்பத்தியொரு இரவுகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். வாசக உலகில் பரவலாகக் கவனம்பெற்ற இந்தத் தொகுப்புக்கு, கலை இலக்கியப் பெருமன்றம், ‘மாநில அளவில் சிறந்த சிறுகதைத் தொகுப்பு’ எனும் விருதைக் கொடுத்தது. தொடர்ந்து இன்னும் பல அமைப்புகளும் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE