என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
ஸ்ரீவில்லிபுத்தூர் எதற்கெல்லாம் புகழ்பெற்றது என்று கேட்டால், ஆண்டாள் கோயில், பால்கோவா என்றெல்லாம் பட்டியலிடுவீர்கள்தானே? இனி, அந்தப் பட்டியலில் ‘ஏ.சி.ஆட்டோ’ என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னது ஏ.சி.ஆட்டோவா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? அதிநவீன காருக்கே சவால் விடும் வசதிகள் கொண்ட இந்த ஆட்டோவைக் கண்டால் உங்கள் ஆச்சரியம் ஆயிரம் மடங்காகும். இதில் இருக்கும் வசதிகள் தமிழகத்தில் எந்த ஆட்டோவிலும் இல்லை என்பதுதான் இதன் விசேஷம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வாசலில் சவாரிக்குக் காத்திருக்கும் இந்த வித்தியாசமான ஆட்டோவை வேடிக்கை பார்க்காதவர்கள் யாருமே இல்லை. நான்கு பக்கமும் கண்ணாடிக் கதவுகளுடன் கவர்ந்திழுக்கிறது ஆட்டோ. கதவைத் திறந்து பார்த்தால், பறக்கத் தயாராகும் உலோகப் பறவையைப் போன்று அழகாகக் காட்சிதருகிறது. உள்ளே பயணிகள் கண்டுகளிக்க 32 இஞ்ச் எல்.இ.டி டிவி இருக்கிறது. ஓட்டுநருக்கும் தனியாக ஒரு குட்டி டிவி உண்டு. இந்தக் குட்டி டிவியின் மோடை மாற்றினால் அதுவே ரிவர்ஸ் கேமராவாகிவிடுகிறது. அதிலேயே கூகுள் மேப்பும் வருகிறது. ஆட்டோவின் பின்பகுதியில் அச்சு அசலாய் காரைப் போலவே ‘டிக்கி’யும் உண்டு.
அது மட்டுமா... ஆட்டோவில் இரண்டு ஏர் கூலர்களும் இருக்கின்றன. ஒன்று ஓட்டுநருக்கு, மற்றொன்று பயணிகளுக்கு. பயணிகள் இருக்கையைத் தங்களது வசதிக்கேற்ப முன்னும் பின்னும்நீட்டிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இருக்கைக்கு இடையே நொறுக்குத் தீனிகள் வைத்துக் கொறிக்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. தேவையென்றால் அதை நீட்டிக்கொள்ளவும், தேவையில்லாத பட்சத்தில் மடக்கிக்கொள்ளவும் முடியும்.