உமா
uma2015scert@gmail.com
ஆண்டுதோறும் பள்ளிக் கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் வரும் ஆண்டிலிருந்து 3000 கோடி ரூபாயை குறைக்கவிருப்பதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது போன்ற சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் ஒதுக்கப்படும் நிதி குறித்தும் அவற்றின் பயன்பாடு குறித்தும் நாம் ஆராய வேண்டியுள்ளது.
கோத்தாரி குழுவின் பரிந்துரை
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் கல்வி வளர்ச்சியைப் பொறுத்தே அளவிடப்படுகிறது. கல்வி வளர்ச்சி பெறுவதற்கு மிக இன்றியமையாத ஆதாரமாக இருப்பது கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி. ஒரு நாடு தரமான கல்வியைத் தனது மக்களுக்கு கொடுக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் தரமான கல்வியை அரசு இலவசமாகவே தரவேண்டும். தரமான கல்விக்குச் செலவிடும் நிதியாக தனது உற்பத்தி வருவாயில் 6 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்று 1968-ம் ஆண்டிலேயே கோத்தாரி கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால், ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் முடிந்த நிலையிலும், உற்பத்தி வருவாயில் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.