முதுமை எனும் பூங்காற்று 13: தனிமை இனிமை தராது

By விவேக பாரதி

வாழ்க்கையில் தனிமையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தனிமையாக வாழப் பிடிக்கலாம். சிலர் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சில நிமிடங்களேனும் ஒதுங்கி தனிமைக்குள் மூழ்கியிருக்க விரும்புவார்கள். இப்படி தனிமை எனும் விஷயத்தை வெவ்வேறு விதமாக மனிதர்கள் உணரலாம். ஆனால், இதெல்லாம் உணவு, மருத்துவ உதவி, அரவணைப்பு என்று பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முதியவர்களுக்குப் பொருந்தாது. ஆம், முதுமையில் தனிமை அத்தனை இனிமையானது அல்ல!

நாமாக ஏற்றுக்கொண்டால் தனிமை ஒரு வரம். தானாக ஏற்பட்டால் அது சாபம் என்பதைப் பல நேரங்களில் முதுமை உணர்த்திவிடும். அந்தத் தனிமை அது ஏற்படுத்தும் வலி மிகக் கொடுமையானது.

ஆண்களின் வலி

ஒரு ஆண் முதுமையை எதிர்கொள்வதற்கும் ஒரு பெண் முதுமையை எதிர்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உடல் அளவில் ஆண்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், மனதளவில் பெண்கள் பலமானவர்கள். வயதான பெண்மணி தன் கணவனை இழக்க நேரிட்டால், ஏதோ ஒரு வகையில் கடைசிக் காலம் வரை அவரால் வாழ்க்கையை எதிர்கொள்ள முடிகிறது. அவரைப் பொறுத்தவரை பணமும், உடல்நலமும் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால், ஒரு முதியவர் மனைவியை இழந்தால், அவர் உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் உடைந்துவிடுகிறார். சமையல், வீட்டுப் பராமரிப்புப் பணிகள் என்று எதையும் பழகியிருக்காத ஆண், அடுத்த வேளை உணவிற்கும் பிறரை எதிர்பார்க்கும் சூழல் உருவாகலாம்.

துணையின் துணை

துணை என்பது இல்லற வாழ்விற்கு மட்டும் தேவைப்படுவது அல்ல. சமைத்துக்கொடுத்து கணவனைப் பார்த்துக்கொள்வதற்காக மட்டும் என்றால் ஒரு சமையல்காரர் போதும். ஒருவருக்கு ஒருவர் துணை, அனுசரணை தேவை எனும் அடிப்படையில்தான் திருமணம் எனும் ஏற்பாடே செய்யப்படுகிறது.

இன்றைய சூழலில் திருமணமே தேவையில்லை என்றும், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம் என்றும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் பலர் முடிவெடுக்கின்றனர். எனினும், இதனால் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. வெகு சிலரே, இந்தச் சோதனையை வெற்றிகரமாகக் கடக்கிறார்கள். பலர் தனிமைச் சிறையில் அடைபட்டு வதைபடுகிறார்கள்.

நம் இறுதிக்காலம் தனிமையின் இருளில் கரைந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றால், அன்பான துணையின் அருகாமை அவசியம். அது திருமண பந்தம் என்றால் இன்னும் திவ்யம்.

அருமையான விளக்கம்

புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார், ஒரு பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் கொடுத்திருந்த விளக்கம், வாழ்க்கைத் துணையின் அவசியத்தை அழகாகச் சொன்னது. ‘முதுமையில் ஒரு ஆண் தனியே இருப்பது கடினமா, பெண் தனியே இருப்பது கடினமா?’ என்பதுதான் வாசகரின் கேள்வி.

பதில் தந்த ராஜேஷ்குமார், ‘பொதுவாகத் தனிமை என்பது கொடுமை. ஆனால், மனைவி இருக்கும் வரை, ‘காபிக்குச் சர்க்கரை இல்லை’, ‘சாப்பாட்டில் உப்பு இல்லை’, ‘பாயாசத்தில் கொஞ்சம் இனிப்பு போட்டு இருக்கலாம்’ என்றெல்லாம் கூறும் கணவன், தனது மனைவியின் மறைவிற்குப் பிறகு ‘பசிக்கிறதா?’ என்று கேட்கக்கூட ஆள் இல்லாமல், ஆள் இருந்தாலும் பசிக்
கிறது என்று சொல்ல தைரியம் இல்லாமல் போய்விடுவது தான் நிதர்சனம்’ என்று சொல்லியிருந்தார். தனிமையின் கொடுமையை இதவிட எளிதாக யாரும் உணர்த்த முடியாது.

இழப்பு யாருக்கு?

பெரும்பாலும் வயதான பெண்கள் அடிக்கடி, ‘நான் பூவோடும் பொட்டோடும் போய்விட வேண்டும்’ என்று கூறுவதுண்டு. ஆனால், அது அத்தனை எளிமையாகக் கடக்கக்கூடிய விஷயமா? ஒரு மூத்த தம்பதியின் கதை இது. அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். ஐந்து வருடத்திற்கு முன்பு, அந்த மூதாட்டி இறந்துவிட்டார். மகளுடன் வசிக்க அந்தப் பெரியவருக்கு விருப்பமில்லை. அதேசமயம், தந்தையைத் தங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பாத இரண்டு மகன்களும், அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவரால் இருக்க முடியவில்லை. தனிமையை அவரால் தாங்க இயலவில்லை. பிறகு, அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட மகள், தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு தந்தையைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.
‘இந்தியாவில் பணி ஓய்வுக்குப் பிறகு 20 சதவீதம் பேர் தனியாக வாழ்கிறார்கள். அதிலும் பெண்கள்தான் அதிகம்’ என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கை. முதியோர் மீதான அன்பும் அக்கறையும் குறைவது அவர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும்தான் இழப்பு. நம்மைப் பார்த்து வளரும் பிள்ளைகள் நாம் செய்வதைத்தான் கற்றுக்கொள்கிறார்கள். நமக்கும் பிற்காலத்தில் இது நடக்கும் என்ற உணர்வு இல்லை என்றால் இழப்பு நமக்குத்தான்.

சட்டம் என்ன சொல்கிறது?

நம் நாட்டில் பல சட்டங்கள் மூத்த குடிமக்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன. பிள்ளைகள் சொத்தை வாங்கிக்கொண்டு பெற்றோர்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்பினால், அவர்கள் ஆட்சியரிடம் மனு எழுதித் தரலாம். அவர் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முன்னர் செய்த பத்திரப் பதிவை ரத்துசெய்யலாம் எனச் சட்டம் சொல்கிறது. அதுபோல், மருமகள் மாமனார் மாமியாரை வீட்டைவிட்டு அனுப்பினால், கணவன் விவாகரத்து கோர அது முக்கியக் காரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்கிறது குடும்பநல நீதிமன்றம். பெரியவர்களை பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேற்றினால், அவர்களுக்குச் சிறை தண்டனைகூட கொடுக்கும் அளவிற்கு இன்று சட்டங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பிள்ளைகளை இப்படிக் கூண்டில் ஏற்ற பெற்றோர் விரும்புவதில்லை என்பதே உண்மை.

இப்படி தனிமை ஒருபுறம் என்றால், ஒரு சில பெரியவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த பின்னர், பிள்ளைகளுடன் வராமல் பிடிவாதமாகத் தனியாக இருப்பது பிள்ளைகளுக்கு மனக்கஷ்டம் தரக்கூடிய ஒரு விஷயம். ‘இவனுடைய தந்தை இறந்துவிட்டார். ஆனால், தனியே இருக்கும் தாயைத் தன்னுடன் வைத்துக்கொள்ள இவன் மறுக்கிறான்’ என்று பிறரின் ஏச்சு பேச்சுக்கும் பிள்ளைகள் ஆளாக வேண்டியிருக்கும். அதேசமயம், தனியாக இருக்கும் தாயை, தந்தையை மனதளவில் எப்படித் தயார்படுத்தி தங்களுடன் அழைத்துச் செல்வது என்பதும் பலருக்குப் புரிவதில்லை.

என்ன செய்யலாம்?

பிள்ளைகள் முரண்டு பிடித்தாலும் பெற்றவர்கள் முரண்டு பிடித்தாலும் எல்லோரும் தத்தமது கடமையைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் வற்புறுத்தியாவது பெற்றோரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளின் சூழ்நிலை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அதற்கும் வாய்ப்பு இல்லாதபோது தனிமையை நினைத்து வருத்தப்பட வேண்டாம்.
மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்துகொண்டு தனிமையை மறக்கத் தொடங்கலாம். புத்தகம் ஒரு சிறந்த நண்பன். கற்க மட்டுமல்ல கற்பிக்கவும்தான். வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்குக் கதை சொல்லித் தருதல், பாடம் எடுத்தல் என்று தனிமையை விரட்டிக்கொண்டிருக்கும் பல பெரியவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் அப்படியான சூழல் அமைந்துவிடாது.

தனிமை வரமா சாபமா என்பதை நாம் முடிவுசெய்ய முடியாது. வாழ்க்கையின் போக்குதான் அதைத் தீர்மானிக்கும். ஆனால், பரஸ்பர அன்புடன் அந்தப் பாதையில் பயணிக்க, பெற்றோரும் பிள்ளைகளும் கைகோத்தால் அந்தப் பயணமே சுகமாகும்!
(காற்று வீசும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE