முஷாரப்புக்கு மரண தண்டனை!- விமர்சிக்கும் இம்ரான்... விடாப்பிடி நீதித்துறை

By காமதேனு

சந்தனார்
readers@kamadenu.in

“நான் 10 வருடங்கள் இந்த நாட்டுக்குச் சேவையாற்றியிருக்கிறேன். தேசத்துக்காகப் போரிட்டிருக்கிறேன். என் மீதான தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட வழக்கு இது. குற்றம் சாட்டப்பட்டவரோ, அவரது வழக்கறிஞரோ வழக்கை எதிர்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படாமல் இப்படி எந்த ஒரு வழக்கும் நடத்தப்பட்டதில்லை” – மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாய் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடி கரகரத்த குரலில் கூறியிருக்கும் வார்த்தைகள் இவை.

நெருக்கடி நிலையை அமல்படுத்தியது, அரசமைப்புச் சட்டத்தை முடக்கியது ஆகிய நடவடிக்கைகளுக்காகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம். இதன் மூலம் பாகிஸ்தான் நீதித் துறை புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. அந்நாட்டில் இதற்கு முன்னர் பல அரசியல் தலைவர்கள் தேசத்துரோகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 6-வது கூறின் கீழ், முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

ராணுவத்தின் முன்னாள் தலைவர் ஒருவருக்கு தேசத்துரோகக் குற்றச்சாட்டின்பேரில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறை. ராணுவ சர்வாதிகார ஆட்சியை அதிகம் பார்த்த பாகிஸ்தான் மண்ணில், இப்படி ஒரு தீர்ப்பு வெளியாகியிருப்பது அசாதாரணமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE