கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
இலங்கையில் வாழ வழியில்லாமல் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவும் கை விரித்திருக்கிறது குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம். இந்தப் பிரச்சினையில் இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று அறிந்துகொள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணிக் கட்சியை நடத்திவருபவருமான க.வி.விக்னேஸ்வரனைத் தொடர்புகொண்டேன். அவருடன் மின்னஞ்சல் மூலம் ஓர் உரையாடல் வடிவமாக எடுக்கப்பட்ட பேட்டி:
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை அளிக்க முடியாது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அகதிகள் தமது சிரமங்களுக்கு மத்தியிலும் தமது தாய் நாட்டுக்குத் திரும்புவதே உசிதம் என்றே கருதுகிறேன். ஆனால், திடீரென்று அவர்களைத் திரும்ப அனுப்பக் கூடாது. வடக்கு கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கு இந்திய அரசாங்கம் உரிய சூழலை அமைத்த பின்னர்தான் அவர்களின் திரும்புகை சாத்தியமாக வேண்டும். பல லட்சம் தமிழ் மக்கள் வட கிழக்கிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். இவ்வாறு சென்றதால் எமது வட கிழக்கு மாகாணங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையைக்கூட அரசாங்கம் குறைத்துள்ளது. எமது மக்கள் அனைவரும் பிற நாடுகளில் தஞ்சம் அடைந்தால் நாம் யாருக்காகப் போராட வேண்டும்? எல்லோரையும் வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டு பெருவாரியான சிங்களக் குடியேற்றத்தை இங்கு உறுதி செய்யலாமே? இப்பிரச்சினை பற்றி முன்னரே இந்திய உயர் ஸ்தானிகர்களுடன் நான் கதைத்திருந்தேன். முக்கியமாக எம் மக்கள் (அகதிகள்) கேட்பது தமது பிள்ளைகளின் உயர் கல்வியையே. இதுபற்றி அப்போதைய இந்திய உயர் ஸ்தானிகர் எனக்கு உறுதிமொழி தந்தார். அகதிகள் தமது தாய்நாட்டுக்குத் திரும்பினால் அவர்களின் பிள்ளைகள் தமது உயர்கல்வியைத் தொடர்ந்து இந்தியாவிலேயே பெற முடியும் என்றார். இந்தியா எமது அகதிகளுக்குக் குடியுரிமை அளிக்காதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் அவர்கள் வடக்கு கிழக்கிற்குத் திரும்புவதே பொருத்தமானது.