வாழைநார் கொடுத்த வாழ்க்கை!- கைவினைப் பொருட்களால் கரை சேர்ந்த குடும்பம்

By காமதேனு

என்.பாரதி
readers@kamadenu.in

‘ஐந்து மகள்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்று சொலவடை ஒன்று உண்டு. ஆனால், அதைப் பொய்யாக்கி வாழைநாரை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தனது ஐந்து மகள்களைக் கரை சேர்த்திருக்கிறார் கமலம் பாட்டி.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமியார் மடத்தை அடுத்த நெடியான்கோடு பகுதியில் இருக்கிறது கமலத்தின் வீடு. எழுபது வயதை நெருங்கும் நிலையிலும் வாழைநாரைக் கொண்டு விதவிதமான கைவினைப் பொருட்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் இந்த மூதாட்டி. வாழைநாரில் செய்யப்பட்ட சாய்பாபா சிலை, திருவள்ளுவர், பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட மேஜை விரிப்புகள் என்று கண்ணைப் பறிக்கின்றன இந்தக் கைவினைப் பொருட்கள். இவருக்கு மட்டுமல்ல... இவரது மொத்தக் குடும்பத்தினருக்கும் வாழைநாரைச் சுற்றித்தான் வாழ்க்கை ஓடுகிறது.

பூ வேலைப்பாடுகள் கொண்ட மேஜை விரிப்பு ஒன்றைச் செய்துகொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார் கமலம் பாட்டி. “என் வீட்டுக்காரர் சிதம்பரம், கட்டிட வேலைக்கு கையாளா போவாங்க. ஆனா, அவுங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம ஆகிடும். அதனால ரெகுலரா வேலைக்குப் போக மாட்டாங்க. எனக்கு நாலாவது பொண்ணு பிறந்த சமயத்தில வேலை இல்லாம வீட்டுக்காரர் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. வேலை கிடைச்சாலும் போய் செய்றதுக்கு அவுங்க உடம்பு ஒத்துழைக்கல. உடனே நான் வீட்டுப் பக்கம் இருந்த நெசவு மில்லுக்கு வேலைக்குப் போனேன். அங்கேயே தொட்டில் கட்டி பிள்ளையைத் தூங்கவச்சுட்டு வேலை செய்வேன்.
அப்போதான் எங்க ஊர்ல ஒருத்தவங்க மூலமா வாழை நார்ல கைவினைப் பொருட்கள் செஞ்சு விக்கலாம்னு தெரிஞ்சுது. நாகர்கோவில்ல இருக்கிற கைவினைக் கலை இணை இயக்குநர் அலுவலகத்துக்குக் கைக்குழந்தையோட போனேன். அப்போ அங்க இருந்த இணை இயக்குநர் பாலு சார்கிட்ட என் நிலைமையைச் சொல்லி கலங்கி நின்னேன். அவர் உடனே ரெண்டு கிலோ வாழைநாரைக் கொடுத்து, ‘அழாதீங்கம்மா, இதுல இருந்து உங்க வாழ்க்கையைத் தொடங்குங்க’ன்னு சொன்னார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE