கரு.முத்து
muthu.k@kamadenu.in
ஆண்களே செய்யத் தயங்கும் மின் வாரிய வயர்மேன் வேலைக்கு தைரியமாக விண்ணப்பித்ததுடன் அதற்கான உடல்தகுதித் தேர்வுகளில், அதிவேக செயல்திறனைக் காட்டி அசத்தியிருக்கிறார் 36 வயதான பெண்ணரசி. இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்பது இன்னும் ஆச்சரியம்!
சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற இதற்கான உடல்தகுதித் தேர்வில் 41 பெண்கள் உட்பட 1,600 பேர் கலந்துகொண்டனர். இதில் தேர்வுபெற்ற ஒரே பெண் இவர் மட்டுமே. ஆண்களைவிட கூடுதல் வேகத்தில் அனைத்தையும் செய்து முடித்திருக்கிறார். 30 அடி உயர மின்கம்பத்தில் ஏறுவதற்கு எட்டு நிமிட நேரம் அளிக்கப்பட்டபோதும், இவர் ஆறு நிமிடம் 43 வினாடிகளில் ஏறிவிட்டார். கிரிப்பர்ஸ் கட்டுவதற்கு இரண்டு நிமிடங்கள் அளிக்கப்படும். இவர் ஒரு நிமிடம் 40 வினாடிகளுக்குள் கட்டிவிட்டார். இரும்புச் சட்டத்தைத் தூக்கிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 100 மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டிய போட்டியில் 25 வினாடிகளில் கடந்துவிட்டார்.
இப்படி அசாத்தியமான வேகம் காட்டி ஆச்சரியப்படுத்திய பெண்ணரசிக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கின. தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சங்கரன் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பெண்ணரசிக்கு சால்வை அணி
வித்துப் பாராட்டியுள்ளனர்.