எல்லாரையும் சேர்த்தா என்னாவுறது?
டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடந்தது. நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலுக்கு நிகரான பரபரப்புடன் நடந்த இந்தத் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த 76 உறுப்பினர்கள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு சகலவிதமான ‘கவனிப்பு’களுடன் வாக்களிக்க வைக்கப்பட்டார்கள். டெல்லியில் 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசித்தாலும் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம்தானாம். உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அதிகாரம் தங்களது கையைவிட்டுப் போய்விடும் என்பதால் உறுப்பினர் சேர்க்கையை கட்டுக்குள் வைத்திருக்கிறார்களாம். இதற்காகவே, டெல்லியை விட்டு வெளியில் போனவர்களையும் இன்னமும் சங்கத்தில் வைத்திருக்கிறார்களாம்.
மாங்குடிக்கு செக்... சுந்தரத்துக்கு பக்!
காரைக்குடியை ஒட்டியுள்ள சங்கராபுரம் ஊராட்சி , கோடிகளில் பணம் புரளும் பசையானஊராட்சி. அதனால், இந்த ஊராட்சியைப் பிடிக்க கட்சிகளுக்குள் கடும்போட்டி நடக்கும். இதுவரை இந்த ஊராட்சியை காங்கிரஸும் திமுகவும் மட்டுமே தக்கவைத்து வருகின்றன.இந்த முறை ஊராட்சித் தலைவர் பதவியை திமுகவிடம் தனக்காக கேட்டுவாங்கிவிட்டது காங்கிரஸ். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் மாங்குடியையே மீண்டும் நிறுத்தி இருக்கிறது காங்கிரஸ். ஆனால், இவரை எதிர்த்து காங்கிரஸைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரும் நிற்கிறார். இவருக்கு அதிமுக சப்போர்ட். மாங்குடிக்கு திமுக ஆதரவு. காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியின் உறவினர்தான் ஐயப்பன். ஆனாலும் கட்சிக்குக் கட்டுப்பட்டு மாங்குடிக்கு ஆதரவு திரட்டுகிறார் ராமசாமி. அதேநேரம், முன்னாள் எம்எல்ஏ-வும் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளருமான சுந்தரம், ஐயப்பனுக்கு பகிரங்கமாக வாக்குக் கேட்டு வருகிறார். இதைக் கடுமையாக ஆட்சேபிக்கும் காங்கிரஸ் தலைகள், ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய சுந்தரத்தை காங்கிரஸை விட்டு நீக்கவேண்டும்’ என கே.எஸ்.அழகிரியிடம் புகார் செய்தார்களாம். அவரோ, “கே.ஆர்.ராமசாமி பரிந்துரைத்தால் உடனே நான் நடவடிக்கை எடுக்கிறேன்” என்று சொல்லி ஜகா வாங்கினாராம். விவகாரம் இப்போது ப.சிதம்பரத்தின் காதுக்குப் போயிருக்கிறது.