போர்முனை டு தெருமுனை 18: ராணுவத்தில் மட்டக்குதிரைகள்

By ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

கார்கில் போரில் மாவீரத்துடன் களத்தில் குதித்த ராணுவத்தினருக்குத் தேசமே துணை நின்றது. ஹெலிகாப்டர்கள், போர் வாகனங்கள் எனக் களத்தில் அவர்களுக்கு உதவிசெய்த பல குழுக்களில் மட்டக்குதிரைகளும் அடக்கம்.

மட்டக்குதிரைகளின் அறிவியல் முறையிலான இனப்பெருக்கம், பயிற்சி உள்ளிட்ட ராணுவ விஞ்ஞானிகளின் கால்நடை ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது. கூடவே பனிமலைகளுக்கான செம்மறியாடு, வெள்ளாடு, கோழி வளர்ப்பு என அவர்களின் விலங்கியல் ஆய்வுக் களமும் விரிந்துபட்டது.

சூரியனும் கோழியும்

பனிமலையில் நிலவும் குறைந்த வெப்பநிலை, குளிருக்காக இறுகச் சாத்தப்பட்டிருக்கும் காற்றோட்டம் இல்லாத வளர்ப்புக்கூடம் போன்றவற்றால் வட இந்தியாவின் லடாக் பகுதியில் கோழிகள் சீக்கிரம் இறந்துவிடும். காற்றோட்டமில்லாத கோழிப் பண்ணைகளில் காற்றில் அமோனியாவின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதனால் கோழிகளின் வயிற்றில் நீர்கோத்து, ‘நீர்க் கோவை’ தோன்றும். கூடவே பார்வை குறைபாடுகளும் மூச்சுக்கோளாறுகளும் ஏற்படும். பனிமலையில் கோழி வளர்ப்பில் இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.

உணவுக்காகச் சமவெளிகளி லிருந்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பெறுவதில் சத்துக் குறைபாட்டோடு, கால மற்றும் பண விரயமும் உண்டு. இதனால் உள்ளூர் மக்களும் முகாமிட்டுள்ள ராணுத்தினரும் பாதிக்கப்பட்டனர். ராணுவ விஞ்ஞானிகள் இதற்கான தீர்வாகச் சூரிய கோழிப் பண்ணைகளை (Solar Poultry House) உருவாக்கினர். சூரிய ஒளியால் அனலூட்டப்பட்ட இப்பண்ணைகள் காற்றோட்டம், சுகாதாரம் இவற்றில் மேம்பட்டதாக வடிவமைக்கப்பட்டன. எலிகள் உள்ளே நுழையாத வகையில் அமைக்கப்பட்ட தடுப்பு அமைப்புகள் இப்பண்ணைகளின் சிறப்பம்சம். சூரியப் பண்ணைகளால் கோழிகளின் இறப்பு விகிதம் குறைந்தது. லடாக் பகுதியில் கோழி வளர்ப்பில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ராணுவத்தினருக்கான உணவுச் சங்கிலி பலப்பட்டது. கூடவே உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் நிலைப்பட்டது.

கோழிக்குஞ்சு வென்டிலேட்டர்

உயரங்களில் கோழி வளர்ப்பதில் இன்னொரு முக்கியச் சிக்கலும் உண்டு. கோழிப் பண்ணைகளுக்குக் குஞ்சுகள் அதிக அளவில் தேவை. பிறந்து ஒரு நாளான கோழிக்குஞ்சுகள் பனிமலைகளில் எங்கே கிடைக்கும்? அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளைப் பெற கோழிப் பண்ணைகளில் கிடைக்கும் முட்டைகளை அடைகாக்கும் தொழில்நுட்பம் தேவை. இதற்காகச் சூரியப் பொரிப்பகத்தை (Solar Hatchery) உருவாக்கினர் ராணுவ விஞ்ஞானிகள். இங்கும் ஒரு பிரச்சினை. அதிக உயரங்களில் வளிமண்டலக் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் காற்றில் ஆக்சிஜனின் அளவும் குறைவாக இருக்கும். இச்சூழல் நிலவும் லடாக் பகுதியில் பொரித்த குஞ்சுகள் உயிர்பிழைப்பது கடினம்.

சமவெளிகளில் நிலவும் காற்றழுத்தத்தைப் போல அழுத்தமேற்றப்பட்ட காற்றைச் செலுத்தினால் கோழிக்குஞ்சுகளைக் காப்பாற்றலாம். குறைமாதக் குழந்தைகளை வென்டிலேட்டரில் (செயற்கை உயிர்ப்புஅமைப்பு) வைத்துக் காப்பாற்றுவதுபோல, குஞ்சுகளையும் காப்பாற்ற உருவாக்கப்பட்டது ‘சமவெளி காற்றழுத்த பொரிப்பகம்’ (Normobaric Hatchery). இதில் வெப்பநிலை, ஆக்சிஜன், கரியமில வாயு, ஈரப்பதம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதனால் கோழிக்குஞ்சுகளின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகமாவது சாத்தியப்பட்டது.

பிராய்லர் ஆடுகள்

உணவுக்காக வளர்க்கப்படுகிற பிராய்லர் கோழிகள் (கறிக்கோழிகள்) பற்றி பலருக்குத் தெரியும். ஆனால், பிராய்லர் ஆடுகள் பற்றி தெரியுமா? உயரங்களில் புழங்கும் ராணுவத்தினரின் உணவுத் தேவைகளுக்காகவே விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கலப்பின செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உண்டு. 

முசாஃபர்நகரி-ச்சாங்தாங்கி கலப்பின செம்மறியாடு கள், சிரோஹி- ச்சாங்தாங்கி கலப்பின வெள்ளாடுகளும் பனிமலையின் சூழலுக்கு ஏற்ற கால்நடை ரகங்களாக மக்களின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதுடன் வாழ்வாதாரத்துக்கும் வழிசெய்கின்றன.
ராணுவத்தில் மட்டக்குதிரைகள்பனிமலைகளின் அபாயகரமான ஒற்றையடிப் பாதைகளில் ராணுவ வாகனங்கள் பயணிக்க முடியாது. ராணுவ முகாம்களுக்கான உணவுப்பொருட்களும் உபகரணங்களும் இவ்வழியாகச் சென்றாக வேண்டும். போர்க்காலங்களில் ஹெலிகாப்டர் உள்ளிட்ட வான்வழிப் போக்குவரத்து, எதிரிகளின் கவனத்தை ஈர்க்கும். கூடவே தாக்குதலுக்கும் உட்படலாம். கால்நடையாகச் செல்லும் ராணுவ வீரர்களுக்குத் துணையாக பளு சுமக்கும் வேலையைச் செய்வதற்கு மட்டக்குதிரை (Pony) ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

லடாக் பகுதியிலுள்ள ஸன்ஸ்கர் மட்டக்குதிரைகளின் எண்ணிக்கை மிகக் குறைந்து அந்த இனம் அழிவை நோக்கி பயணப்பட்ட வேளையில், பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியது ராணுவ விஞ்ஞானிகள் குழு. லடாக் பகுதியின் தட்பவெப்பத்துக்குப் பழகிய ஸன்ஸ்கர் குதிரைகளின் கால்களின் அமைப்பு குறுகிய மலைப்பாதைகளுக்கு மிகவும் ஏற்றது. மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள தாவரங்களே அவற்றுக்கான உணவு. இதற்கென சமவெளிகளிலிருந்து தனியே உணவு கொண்டு வரத் தேவையில்லை. இதனால் இந்த இனக் குதிரைகளை ராணுவத்தின் பயன்பாட்டுக்குத் தயார்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அறிவியல் முறையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் (Selective Breeding) மூலம் ஸன்ஸ்கர் மட்டக்குதிரைகள் வளர்க்கப்பட்டன. மேலும் அவற்றுக்குப் பல கட்டங்களாகப் பயிற்சியளிக்கப்பட்டது. அவற்றின் எடை சுமக்கும் திறன் வெவ்வேறு உயரங்களில் சோதிக்கப்பட்டது. கட்டளைகளுக்குக் கீழ்படிந்து ஒத்துழைக்கும் சுபாவம் கொண்ட இக்குதிரைகள், பயிற்சிக்குப் பிறகு ராணுவப் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டன. இப்படி பயிற்சிபெற்ற மட்டக்குதிரைகள் கார்கில் போரில், இந்திய ராணுவ முகாம்களுக்குச் சுமைகளைக் கொண்டுசென்று வெற்றியில் பெரும் பங்காற்றின. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள். மட்டக்குதிரைகளும் போரில் பட்டையைக் கிளப்பும் எனப் புதுமொழி புனையலாம். அறிவினால் ஆகாதது உண்டோ!

காளான் ஊறுகாய்

அதிஉயரங்களில் வசிக்கும் மக்களின் வருமானத்திற்கு வழி செய்ய, காளான் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக வீடுகளில் காளான் வளர்க்கும் முறை உள்ளூர்வாசிகளுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. காளானிலிருந்து பல வித சுவைகளில் ஊறுகாய்களைத் தேஸ்பூர் ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஏறக்குறை ஒரு வருடம் வரை இந்த ஊறுகாய் வகைகள் கெட்டுப்போகாது.

வெற்றிலைச் சாறு

வெற்றிலைச் சாறு செரிமானத்துக்கு நல்லது. ஆனால் வெற்றிலையைத் தொடர்ந்து மெல்வது வாய்க்கு நல்லதல்ல. இந்தத் தொந்தரவு இல்லாமல் உடனடியாகப் பயன்படுத்த வசதியாக வெற்றிலைச் சாறு பிரித்தெடுக்கப்பட்டு பைகளில் அடைக்கப்பட்ட முயற்சி நடைபெற்றுள்ளது. விஞ்ஞானிகளின் இந்த புதியப் படைப்பு, நான்கு மாதங்கள் வரை கெடாமலிருக்கும். விருந்துகளில் வயிறுமுட்ட உண்டவர்களுக்கு இச்சாறு செரிமானத்தை அதிகரிக்க உதவும்.

காயம் கட்டு

போர்க்களத்தில் குண்டு வெடிப்பில் துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் காயமடைவது உண்டு. வீரர்களைக் காப்பாற்ற ரத்த இழப்பைக் குறைக்க வேண்டும். மருத்துவ உதவி வரும் வரை காத்திருக்காமல் வீரர்களின் ரத்தப்போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

இதற்குத் தீர்வாக டெல்லியிலுள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான அணுக்கரு மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் நிறுவன 
(Institute of Nuclear Medicine & Allied Sciences) விஞ்ஞானிகள், இன்மாசீல் (INMASEAL) என்ற ஜெல் வடிவ மருந்தை உருவாக்கியுள்ளனர். சிட்டோசன், அசிடிக் அமிலம், கால்சியம் குளோரைட், சோடியம் அல்ஜினேட் மற்றும் தண்ணீர் கலந்த இந்தக் கூழ்மத்தைக் காயத்தில் நிரப்பினால், ரத்த இழப்பு நிறுத்தப்படும். போர்க்களத்தில் மட்டுமன்றி தீவிபத்து, சாலை விபத்து, விளையாட்டுப் பயிற்சி காயங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் காயங்களில் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் இம்மருந்தைப் பயன்படுத்தலாம். பிளாஸ்திரி வடிவிலும் இம்மருந்து கிடைக்கிறது. மருந்து பொதியப்பட்ட பிளாஸ்திரியைக் காயத்தின் மீது கட்டினால் ரத்தபோக்கு கட்டுப்படும். காயம் குணப்படவும் ஏதுவாகும்.

பறவையும் விமானமும்

பறவையைக் கண்டு விமானம் உருவாக்கப்பட்டாலும், சமயங்களில் விமான விபத்துக்கும் பறவைகள் காரணமாகின்றன. விமான இன்ஜின் மிக வேகமாகச் சுழல்வதால் உள்ளிழுக்கப்படும் பறவைகள், பெரிய சேதத்தை  இன் ஜினுக்கும் விமானத்துக்கும் ஏற்படுத்துகின்றன. விமானத் துறையில் உலக அளவில் பறவை மோதலினால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஆண்டிற்கு ஏறக்குறைய ரூ.6,500 கோடி. இதைவிட இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை எப்படி மதிப்பிடுவது?

தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்கள்கூட சோதனை செய்யப்பட்ட பிறகே சந்தைக்கு வருகின்றன. சோதனை செய்து உறுதி செய்யாமல் விமானத்தைப் பயன்பாட்டுக்கு விட முடியாது. ஆனால், பறவைகள் மோதுவதை எப்படி சோதனை செய்வது?  பறவைகளைச் சோதனைக்குப் பயன்படுத்துவது தார்மீக அடிபடையில் சரியல்ல. பின் எப்படி சோதிக்கிறார்கள் விஞ்ஞானிகள்?

(பேசுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE