இந்தியன் நெ.1: ஒலிம்பிக் பதக்கத்தை வசப்படுத்திய ஜாதவ்

By பி.எம்.சுதிர்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியாவுக்குப் பதக்கங்களை அள்ளித்தரும் விளையாட்டாக மல்யுத்தம் இருக்கிறது. சுஷில் குமார், யோகேஸ்வர் தத், சாக்‌ஷி மாலிக் என்று இந்த விளையாட்டில் இன்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இந்தியாவுக்கு அதிக பதக்கங்களையும், நட்சத்திரங்களையும் தந்த மல்யுத்தம்தான் ஒலிம்பிக் போட்டியில் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தது. இப்பதக்கத்தை  வென்ற வீரர் கே.டி.ஜாதவ் என்று அழைக்கப்படும் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ்.

ஜாதவின் அப்பா ஒரு மல்யுத்த வீரர். அதனாலேயே ஜாதவுக்கு சிறுவயது முதலே மல்யுத்தத்தில் ஆர்வம் இருந்தது. இதைப்பார்த்த அவரது தந்தை, ஜாதவை ஒரு அகாடாவில் (மல்யுத்த பயிற்சி அளிக்கும் இடம்) கொண்டுபோய் சேர்த்தார். வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தள்ளியுள்ள அகாடாவுக்கு தினமும் நடந்தே போய் பயிற்சி பெற்றார் ஜாதவ்.

கல்லூரியில் படிக்கும்போது அங்கு நடக்கும் மல்யுத்த போட்டியில் பங்கேற்க ஜாதவுக்கு ஆவல் ஏற்பட்டது. குள்ளமான மற்றும் ஒல்லியான தேகத்தைப் பெற்றிருந்ததால் ஜாதவைப் பார்ப்பவர்கள் யாரும், அவர் ஒரு மல்யுத்த வீரர் என்று சொல்லமாட்டார்கள். எனவே, மல்யுத்த போட்டிக்கு பெயர் கொடுக்கச் சென்ற ஜாதவைப் பார்த்து கிண்டல் செய்தார்கள். போட்டியில் பங்கேற்றால் கைகால்கள் முறிந்துவிடும் என்றும் பயமுறுத்தினார்கள் ஆசிரியர்கள். ஆனால், பிடிவாதமாக இப்போட்டியில் பங்கேற்ற ஜாதவ், அதில் வெற்றியும் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கல்லூரியில் நடந்த இந்த மல்யுத்த போட்டிக்குப் பிறகு மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் என்று முன்னேறி 1948-ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஃபிளைவெயிட் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றார் ஜாதவ்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்ற இவருக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் லைட்வெயிட் மல்யுத்த சாம்பியனான ரீஸ் கார்டனர் பயிற்சி அளித்தார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும், கவுரவமாக 6-வது
இடத்தைப் பிடித்தார் ஜாதவ். இன்னும் கொஞ்சம் முயன்றால், ஹெல்சிங்கியில் 1952-ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை, இது அவருக்குள் விதைத்தது.

ஆனால், 1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் பங்கேற்பது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டி நெருங்கிய சமயத்தில், இவருக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வந்தது. மல்யுத்த பிரிவில் ஜாதவுக்கு பதிலாக நிரஞ்சன் தாஸ் என்ற மற்றொரு வீரரை அரசு தேர்வு செய்துவிட்டது என்பதே அந்தச் செய்தி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சன் தாஸ், உடல் அளவில் ஜாதவை விட வலுவானவராகவும், உயரமானவராகவும் (நிரஞ்சன் தாஸின் உயரம் 6 அடி. ஜாதவின் உயரம் 5.5 அடி) இருந்தார். அத்துடன் ஃபிளைவெயிட் பிரிவிலும் தாஸ் சாம்பியனாக இருந்ததால் அவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டது.

இதைக் கேள்விப்பட்டதும் பதறிப் போனார் ஜாதவ். உடனடியாக விளையாட்டுத்துறையில் செல்வாக்கு கொண்ட, பாட்டியாலா மகராஜாவுக்கு கடிதம் அனுப்பினார். ஜாதவைப் பற்றி நன்கு தெரிந்தவரான பாட்டியாலா மகாராஜாவும் இவருக்கு உதவ முன்வந்தார். இரு வீரர்களுக்கும் இடையில் போட்டி நடத்தி, அதில் வெல்பவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார். இதன்படி நடந்த போட்டியில் நிரஞ்சன் தாஸை வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் ஜாதவ்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும், இதில் பங்கேற்கச் செல்ல போதிய நிதி இல்லாமல் ஜாதவ் தவித்தார். இந்தச் சமயத்தில் அவர் படித்த, ராஜாராம் கல்லூரியின் முதல்வர் ஜாதவுக்கு உதவினார். தன் வீட்டை அடகுவைத்து 7,000 ரூபாயைத் தந்தார். மேலும் சில நண்பர்களும் உதவ, ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்றார் ஜாதவ். இத்தனை கஷ்டப்பட்டு தன்னை ஹெல்சிங்கிக்கு அனுப்பிய நண்பர்களுக்காகவாவது தான் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்குள் எழுந்தது.

இப்போட்டியில் சிறப்பாக பங்கேற்றவர், 5 சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றி கண்டார். 6-வது சுற்றில் ஜப்பான் வீரரான ஷோஹாசி சிஷியை எதிர்த்து மோதினார். சுமார் 15 நிமிடங்கள் நீண்ட இந்தக் கடும் போட்டியில் இஷியிடம் வீழ்ந்தார் ஜாதவ். பொதுவாக ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே குறைந்தது 30 நிமிடங்களாவது ஓய்வு வழங்க வேண்டும். ஆனால், இப்போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே வெள்ளிப் பதக்கத்துக்கான போட்டிக்கு ஜாதவ் அழைக்கப்பட்டார். ஏற்கெனவே சோர்ந்து போயிருந்த ஜாதவால், இப்போட்டியில் சரியாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போட்டியில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, அதுவரை ஹாக்கி போட்டியில் மட்டுமே பதக்கங்களை வென்றிருந்தது. இந்நிலையில் தனிநபர் பிரிவில் முதல் முறையாக பதக்கம் வென்று நாட்டுக்கு கவுரவம் சேர்த்தார் கே.டி.ஜாதவ். வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய ஜாதவை 40 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்று கவுரவப்படுத்தினார்கள் இவர் பிறந்த கோலேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள். இன்று இந்தியா பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைகளைப் படைத்தபோதிலும், நமக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்த இந்த நாயகனை என்றும் மறக்க முடியாது.

வாழ்க்கைப் பாதை

‘பாக்கெட் டைனமோ’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கே.டி.ஜாதவ், 1926-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள கோலேஸ்வர் கிராமத்தில் பிறந்தார். ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு காவல்துறையில் இணைந்து பணியாற்றிய இவர், 1984-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவருக்கு 2001-ல், மரணத்துக்கு பிந்தைய விருதாக அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள மல்யுத்த போட்டிக்கான உள் விளையாட்டு அரங்குக்கு ஜாதவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE