முதுமை எனும் பூங்காற்று 12: அன்னியோன்யம் அவசியம்

By விவேக பாரதி

காதல் என்பது இளமையில் மட்டும் வருவது அல்ல. முதுமையில் தோல் சுருங்கி, கண் பார்வை மங்கி, காது கேட்கும் திறன் குறைந்து, உடல் தளர்ந்துபோயிருக்கும் தருணத்திலும் தம்பதியர் ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்வதும் காதல்தான். சொல்லப்போனால் அதுதான் உண்மையான காதல். இந்தக் காதல்தான் நாம் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தமாய் அமையும்.

முன்பெல்லாம் கணவருக்கு எதிரில் மனைவி அமரக்கூட மாட்டார். வெளியே செல்வதானால் கணவர் பத்தடி முன்னால் செல்வார், மனைவி பத்தடி பின்னால் வருவார். ஆனால், கணவருக்கு ஒரு பிரச்சினை என்றால் மனைவியும், மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றால் கணவனும் துடிதுடித்துப் போவதே அவர்களின் அன்னியோன்யத்தைப் பிறருக்குப் புரிய வைக்கும். அந்தப் புரிதல் இல்லை என்றால், அன்றாட வாழ்க்கையே அவஸ்தைக்குள்ளாகிவிடும்.

புரிதல் அவசியம்

சென்ற தலைமுறையில், ஆண்தான் குடும்பத் தலைவர் என அங்கீகரிக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் பெண், குடும்பத்தைப் பராமரிக்கும் பணியைச் செய்பவளாக மட்டுமே இருந்தாள். ஆனால், இருவரும் பரஸ்பரம் உதவிக்கொண்டே குடும்பத்தை நிர்வகித்தார்கள். குழந்தைகள் பெற்றோரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள்.

சென்ற தலைமுறையில் பெண்களுக்கு தங்கள் கருத்துகளைச் சொல்லும் சுதந்திரம் இல்லை. ஆண்கள் முடிவெடுக்கும் இடத்திலும், பெண்கள் அதை ஏற்றுச் செயல்படுத்தும் இடத்திலுமே இருந்தனர். அந்த நிலை இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது. அதேசமயம், முந்தைய தலைமுறையில் கணவன் – மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் எழுந்தாலும் பரஸ்பர அன்பு மூலமே அதைத் தீர்த்துக்கொண்டனர். விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மை இருந்தது. வயதாக வயதாக தம்பதியினருக்குள் ஒரு இணக்கமான சூழல் உருவாக அது வழிவகுத்தது.

பிள்ளைகள் பெற்று வளர்ப்பது ஒரு பக்கம் கஷ்டம் என்றால் பிள்ளை இல்லாமல் போவது மற்றொரு வகையில் பெரும் துயரம். ‘எனக்கு நீ… உனக்கு நான்’ என்ற எண்ணம் வரும் வரை குடும்பத்தில் சூறாவளிதான். ஆனால், அந்தப் புரிதல் வந்துவிட்ட பிறகு ஏற்படும் உறவு மிக பலமானது. கணவனின் தேவைகளை மனைவியும், மனைவியின் தேவைகளைக் கணவனும் சொல்லாமலே புரிந்துகொண்டு செய்வார்கள். இந்த பந்தம் இறுதிவரை அப்படியே தொடரும். ‘பிள்ளை இல்லை என்றால் என்ன… நான் இருக்கிறேனே!’ என்று கணவனும் மனைவியும் பரஸ்பரம் பாசத்தைப் பொழிந்துகொள்வார்கள்.

அமைதியும் பொறுமையும்

வயோதிகம் தரும் வரங்களில் அமைதிக்கும் பொறுமைக்கும் முக்கிய இடம் உண்டு. இளமைக் காலத்தில் சேர்ந்து கழிக்க முடியாத தருணங்களை வயோதிகக் காலத்தில் சேர்ந்து கழிக்கலாம். கோயில், குளங்கள், கடற்கரை எனப் பல மணி நேரம் அமர்ந்து மனம் விட்டுப் பேசலாம். இத்தனை ஆண்டுகால திருமண வாழ்வில் கடந்துவந்த சந்தோஷங்கள், சங்கடங்களை இருவரும் பகிர்ந்துகொள்ளலாம். பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடலாம். இதற்கெல்லாம் அமைதியும் பொறுமையும் அவசியம். அதைவிட அவசியம் அன்னியோன்யம் இழையோடும் அன்பு!

இந்த அன்னியோன்யம் எத்தனை கஷ்டத்தை வேண்டுமானாலும் தாங்கும். எத்தனை போராட்டச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும். அத்தனை சோதனைகளையும் மாற்றும்.

உதாரணத் தம்பதிகள்

அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்ல இங்கு பலர் உண்டு. ஆனால், ஒரு சிலர்தான் தங்கள் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டுவார்கள். அறிவுரை சொல்வர்களைவிட வாழ்ந்து காட்டுபவர்களைத்தான் ஆராதிக்கிறது உலகம். நம் வாழ்விலும் இப்படியான மனிதர்கள் எதிர்ப்படவே செய்கிறார்கள். இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை, அவர்கள் ஏதாவது ஒரு வழியில் நமக்கு உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.

உதாரணத் தம்பதி

அந்தப் பெரியவருக்கு 83 வயது. அவரது மனைவிக்கு 70 வயது. பிள்ளைகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். இவர்கள் இருவர் மட்டும் சென்னையில் இருக்கிறார்கள். அந்தப் பெரியவர் நெய்வேலியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் நிறுவனத்தில் கீழ்மட்ட நிலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அந்தப் பெண்மணிக்குத் தட்டச்சு, சுருக்கெழுத்து தெரியும். அதன் அடிப்படையில் நெய்வேலியில் தட்டச்சு சுருக்கெழுத்தராக வேலை கிடைத்தது. ஆனால், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேலையை விட்டுவிட்டு கணவனின் மிகக் குறைந்த வருமானத்தில் சிக்கனமாக வாழ்ந்து, வீட்டில் எல்லா கடமைகளையும் செய்து முடித்தார்.

இப்படிப்பட்ட அன்பு மனைவிக்கு அந்தப் பெரியவர் தரும் மரியாதை அளப்பரியது. இன்றும் அந்தப் பெண்மணி சமைத்தால் காய்கறி வெட்டித் தருவார். தேங்காய் துருவித் தருவார். இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை மனைவிக்குச் செய்து தருவார். அத்தனை அன்பு காட்டுவார்.

சமீபத்தில் அந்தப் பெண்மணிக்குத் திடீரென உடல் நிலை சரியில்லை. பெரியவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். நேரில் சென்று பார்த்தபோது, அந்தப் பெண்மணியின் உடல்நிலை மோசமாக இருந்தது. பெரியவரும் சற்றுத் தளர்ந்து காணப்பட்
டார். தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று என்னிடம் கேட்டார். நாங்கள் கிளம்பும்போது, “நானும் கூட வருவேன், ஆனால் வயதாகிவிட்டது. பசி வந்தால் கை நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. மயக்கமாக வருகிறது. அப்படி ஒரு சிரமம் உனக்கு வரக்கூடாது” என்று தன் மனைவியிடம் சொன்னார். அதைக் கேட்கும்போது என் கண்கள் பனித்துவிட்டன. தன் மனைவியின் உடல்நிலை பற்றி என்னிடம் விளக்கிய அந்தப் பெரியவர், அந்தப் பெண்மணியின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பற்றியெல்லாம் சொன்னார். நடுங்கும் கரங்களுடன் தனது மனைவியின் மாத்திரைகளை என்னிடம் தந்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது.

உறவின் உன்னதம்

மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த பிறகு, மருத்துவர் என்ன சொன்னார் என்று மனைவியிடமும் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். எனினும், அவருக்கு மனம் சமாதானமாகவில்லை. மனைவியைத் தனியே அழைத்துச் சென்று, “டாக்டர் வேறு ஏதும் சொன்னாரா? வாதம், நடக்க முடியாது… என்றெல்லாம் ஏதும் சொன்னாரா? நீ என்னிடம் சொல்லத் தயங்கு
கிறாயா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கணவன் – மனைவி எனும்
உறவு நிலையின் உன்னதம் என்ன என்பது புரிந்தது.

இன்று தம்பதியர் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். விவாகரத்து கோரி நீதிமன்றப் படியேறுகிறார்கள். நான் குறிப்பிட்ட அந்த வயோதிக தம்பதியும் தங்கள் வாழ்வில் தங்களுக்குள் சண்டையிட்டிருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து பரஸ்பரம் தங்கள் அன்பை வளர்த்திருக்கிறார்கள். எதிர்பார்ப்பற்ற அந்த அன்பு இன்றைய தலைமுறையிடம் இல்லாமல் போனதால்தான், கணவன் - மனைவி - பிள்ளைகள் இடையில் சண்டைகள், பிரச்சினைகள் வருகின்றன.

சொல்லித் தருவதைவிட வாழ்ந்துகாட்டுவது கடினம். அதைச் செய்துகாட்டும் மூத்தவர்களின் வாழ்க்கை வணக்கத்திற்கு உரியது. வணங்குவோம், கற்றுக்கொள்வோம், பின்பற்றுவோம்!

(காற்று வீசும்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE