அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்வதா?

By காமதேனு

நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்த, அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தும் சூழலில், 2019-20-ம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வி வரவு செலவுத் திட்டத்தில் மூவாயிரம் கோடி ரூபாயைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இது மிகுந்த ஏமாற்றமளிக்கும் நடவடிக்கை ஆகும்.

2014-15-ம் ஆண்டிலிருந்து பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீட்டை ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் மத்திய அரசு அதிகரித்துவந்தது ஓரளவுக்கு நம்பிக்கையைத் தந்தது. இந்நிலையில், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, வரும் கல்வி ஆண்டுக்கான ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிதிக் குறைப்பால், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘சமக்ர சி க்‌ஷா அபியான்’ உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒருபக்கம் பொருளாதாரச் சரிவு குறித்து வெளியாகும் தகவல்களை மறுத்துவரும் மத்திய அரசு, ‘நிதி நெருக்கடி’யைக் காரணம் காட்டி இந்நடவடிக்கையை எடுப்பது ஏன் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

இந்நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகத்திலிருந்து வலுவான குரல்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இதை விமர்சித்திருக்கின்றன. இந்நிலையில், பாஜகவுடன் நல்லுறவைப் பேணிவரும் அதிமுக அரசு இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். பள்ளிக் கல்விதான் தேசத்தின் எதிர்காலத்துக்குப் பலமான அஸ்திவாரம் என்பதை நன்கு உணர்ந்த மாநிலம் தமிழகம். பள்ளிக் கல்வியில் பல முன்னோடித் திட்டங்களை நாட்டுக்கே அறிமுகப்படுத்திய தமிழகத்துக்கு இவ்விஷயத்தில் கூடுதல் பொறுப்பு உண்டு. தமிழக அரசு அந்தப் பொறுப்பைக் கைகொள்ள வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE