யாரிடமும் கேட்டுப் பெறாமல், நாம் செய்யும் செயல்களால் நமக்குக் கிடைப்பது அன்பும் மரியாதையும்தான். கவிஞர்கள் முதல் கடைக்கோடி மனிதன் வரை யாரும் அன்பைப் பற்றி பேசலாம்; அன்பு காட்டலாம். ஆனால், அதே அன்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் அவர்களும் வேதனை அடைவார்கள். எல்லா உயிரினங்களுக்கும் அன்பு என்பது ஒன்றுதான். அன்பு மட்டுமே கொடுக்கக் கொடுக்கப் பெருகும். சாதாரண மனிதன் மட்டுமல்ல, அனைத்துக் கடமைகளையும் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் நேரத்தில் பெரியவர்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது அன்பையும் மரியாதையையும்தான்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
பேருந்திலோ, வழியிலோ ஒரு முதியவரைப் பார்த்தால் அவருக்கு உதவ, பலர் முன் வருகிறார்கள். முதியோரைத் தங்களது தாய், தந்தையின் இடத்தில் வைத்துப் பார்ப்பதால் அவர்களுக்குள் ஏற்படும் மரியாதை உணர்வு அது. ஆனால், தங்களுடைய பெற்றோர் என வரும்போது, ‘நம் அப்பா, அம்மா தானே’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். வெளிப்படையாக மரியாதையைக் காட்ட மறந்துவிடுகிறார்கள். இதனால், பெற்றோர் ஏமாற்றமடைகிறார்கள். விரிசல் விழுந்துவிடுகிறது!
பிள்ளைகள் எல்லா விஷயங்களையும் தங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்; கருத்துக் கேட்க வேண்டும்; அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் நினைக்கலாம். அதில் தவறில்லை. அந்தக் காலத்தில், பெற்றோரிடம் அவர்கள் அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்கள். திருமணமான புதிதில் மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் செல்வது முதல் புடவை எடுத்துத் தருவது வரை தங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்ற பிறகே செய்திருப்பார்கள். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. பழக்கவழக்கங்களும் மாறியிருக்கின்றன. புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. வேலைக்குப் போகும் மருமகளுக்குச் சாப்பாடு கட்டித்தரும் மாமியார்கள் இருக்கிறார்கள்.
கண்ணோட்டம்
சாதாரணமாகவே பணி நிறைவு பெற்ற பின்பு, தான் செல்லாக் காசாகிவிட்டோம்; இனி நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் பெரியவர்களின் அடிமனதில் தோன்றிவிடும். யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் தவறாகவே எடுத்துக்கொள்ளும் நிலைக்கு அது தள்ளிவிடும்.
ஒருவர் பணியில் இருந்த காலங்களில், சீக்கிரம் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் கிளம்புவது வழக்கமாக இருந்திருக்கும். மனைவியும் பிள்ளைகளும் சற்று நேரம் கழித்துச் சாப்பிடுவார்கள். அதேபோல், இன்றைக்கு வேலையில் இருக்கும் மகனோ மருமகளோ அப்படி முதலில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது, ‘நான் பணி ஓய்வுபெற்று வீட்டில் இருப்பவன் என்பதால் என்னை முதலில் சாப்பிடக் கூட அழைப்பதில்லை’ என்று பெரியவர்கள் எண்ணுகிறார்கள். அந்த எண்ணம் மகன் மீது மட்டுமல்ல, மருமகள் மீதும் கோபம் வர காரணமாகிவிடுகிறது.
பெரியவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதும், முதியவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் நடக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பெரியவர்களை இப்படி நடத்துவதில் மகன்கள் முதல் இடத்திலும் மருமகள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகத் தெரியவருகிறது. இதற்கு அடிப்படைக் காரணமே இரு தரப்புக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியும், புரிதலில் ஏற்படும் சிக்கலும்தான்!
பழக்கவழக்கம்
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் தங்கள் மருமகள்கள் தொடர்பாக அதிருப்தியடைய, ‘மரியாதை’ குறித்த புரிதலின்மையும் ஒரு காரணம். தனக்கு மட்டுமல்ல, தனது மகனுக்கும் மருமகள் மரியாதை தருவதில்லை என்று பல பெரியவர்கள் அங்கலாய்த்துக்கொள்கிறார்கள். முன்பெல்லாம் பெண் தன்னுடைய கணவனை, ‘மாமா’, ‘அத்தான்’ என்று அழைத்தாள். பின்னர், தங்கள் குழந்தையின் பெயரைச் சொல்லி ‘கண்மணி அப்பா’, ‘மகேஷ் அப்பா’ என்று அழைத்தார்கள். இன்று பெரும்பாலும் பெண்கள் கணவனைப் பெயர் சொல்லி அழைக்கின்றனர். காதல் திருமணம் என்றால் ‘நீ’, ‘வா’, ‘போ’ என்று ஒருமையில் அழைக்கின்றனர். பெரும்பாலான பெற்றோர்களால், பெரியவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
உண்மையில் இது ஒரு பிரச்சினையே அல்ல. ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் அதை அணுக முடியும். கண்ணோட்டம் சரியாக இல்லை என்றால் அதற்குப் பின் நிகழும் நிகழ்வுகள் வருத்தப்பட வைக்கும். எப்போது கருத்து வேறுபாடு வருகிறதோ, அப்போதே அதைப் பேசி, சரி செய்துகொள்ள வேண்டும். யாராவது ஒருவர் ஒரு இடத்தில் விட்டுக்கொடுக்க வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், தனது கணவனைப் பெயர் சொல்லி அழைப்பது வழக்கம். அதனால் அதிருப்தியடைந்த அவளது மாமியார், தன் மகனைப் பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். அவளும் சரி என்று அதை மாற்றிக்கொள்ள முடிவெடுத்துவிட்டாள். ஆனால், அவள் மாமனாரும் கணவனும், “இது ஒரு சின்ன விஷயம். இதற்காக உன் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம்” எனக் கூறியதுடன், மாமியாரிடமும் எடுத்துச்சொல்லி சமாதானப்படுத்திவிட்டனர். ஆனால், எல்லா வீடுகளிலும் இது சாத்தியமாகி விடுவதில்லை.
புரிதலின்மையின் விளைவு
உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே சரியாகக் கையாளாமல் போனால் பல குடும்பங்கள் குடும்ப நல நீதிமன்றங்கள் வரை போகக்கூடிய சூழல் உருவாகிறது. மாமியார் - மாமனாருடன் வசிக்கும் ஒரு பேராசிரியை, திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் கருவுற்றிருக்கிறாள். கருவுற்ற காரணத்தினாலும் உடல் சோர்வினாலும் வேலை முடித்து வந்ததும் தூங்குவது வழக்கமாகிவிட்டது. தூங்கி எழுந்து இரவு உணவு தயாரிக்கும்போது தினமும் பிரச்சினையாகி இருக்கிறது. “வீட்டுக்கு வந்ததும் அறைக்குச் சென்று கதவை மூடிப் படுத்துக்கொண்டால் என்ன மரியாதை?” என்று வீட்டுக்குள் பேச்சு எழுந்திருக்கிறது.
பின்னர் வளைகாப்பு நடத்துவதில் பிரச்சினை. இப்படிச் சிறு சிறு விஷயங்களில் ஆரம்பித்து சிக்கல்கள் பெரிதாகின. பின்னர் பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்குச் சென்ற பெண்ணை, பிரசவத்துக்குப் பின்னரும் கணவன் வீட்டார் சென்று பார்க்கவில்லை. “மரியாதை தெரியாத பெண்ணைக் கட்டியது எங்கள் தவறு. நாங்கள் வழக்குத் தொடர்கிறோம். விவாகரத்துப் பெற்றுக்கொள்ளலாம்” எனப் பிடிவாதமாகக் கூறிவிட்டனர். பெற்றவர்களையும் எதிர்க்க முடியாமல், மனைவியையும் பிரிந்து வாழ முடியாமல் இன்று அந்தப் பையன் போதைக்கு அடிமையாகி, மொத்தக் குடும்பமும் சிதைந்துவிட்டது.
அந்தப் பெண் என்னிடம் ஆலோசனைக்கு வந்தபோது பல அறிவுரைகள் கூறி சமாதானப்படுத்த முயன்றேன். அப்போது அவர் கணவனுக்குக் கம்பெனியில் இடமாற்றம் வந்திருந்தது. “இதுவே நல்ல தருணம். சிறிது காலம் வேறு ஊருக்குச் செல்லுங்கள். குழந்தை, புதுக்குடித்தனம், குடும்பப் பொறுப்பு என கணவன் மாறுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது” என்று கூறினேன். ஆனால், பெண்ணின் பெற்றோரோ, “பிறந்த குழந்தையைப் பார்க்க வராதவர்களை நம்பி எப்படி கைக்குழந்தையையும், பெண்ணையும் அனுப்புவோம்? நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்று கூறி மறுத்துவிட்டார்கள்.
இன்றைய காலத்தில், அறிவுரை சொல்லும் இடத்திலிருந்து மாறி, சில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் அளவில் நடந்துகொள்கிறார்கள் என்பது வேதனை. மறுபுறம், பெரியவர்களை வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ள விரும்பாத, மகன்களும் மருமகள்களும் அதிகரித்து விட்டார்கள்.
அன்பும் மரியாதையும் நிர்பந்தங்களால் கிடைப்பதில்லை. பெற்றோரும் பிள்ளைகளும் உள்ளன்புடன் எல்லா விஷயங்களையும் அணுகினால் பிரச்சினைகள்வரவே வராது. அன்பு செலுத்துவோம். அரவணைப்போம். மாற்றங்கள் தானாகவே நிகழும்!
(காற்று வீசும்...)