தொடாமல் தொடரும் - 9

By பட்டுக்கோட்டை பிரபாகர்

திசைகளெங்கும் பசுமை போர்த்திய அந்த அழகான தேயிலைத் தோட்டத்தின் நடுவாந்திரமாக அமைந்திருந்தது தொழிற்சாலை.
பறிக்கப்பட்ட தேயிலைகளைக் குப்பை நீக்கி, தரம் பிரித்து, டீத்தூளாக மாற்றி அதிலும் ரகம் பிரித்து, பேக்கிங் செய்யும் வரைக்கும் பல கட்டப் பணிகளில் இயந்திரங்களும், தொழிலாளர்களும் இணைந்து பணிபுரிவார்கள்.

நிறுவனத்தின் பெயர் தாங்கிய டெலிவரி வேன்கள் நான்கு வெளியே நிற்க… ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுக்குக் கீழே அலுவலகத்திலும், தோட்டத்திலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் மோட்டார் பைக்குகளும், சைக்கிள்களும் நின்றன.
இரண்டாம் மாடியில் இருக்கும் அலுவலகத்தை ஒட்டி தரையில் சிவப்புச் சதுரக் கற்கள் வேய்ந்த, பூந்தொட்டிகளால் ‘ப’வடிவத்தில் எல்லை கட்டிய ஒரு அகலமான பால்கனி.

அங்கே வந்து நின்றால், கிட்டத்தட்ட பறவையின் பார்வையில் தூரத்து சரிவில் கடற்கரை மணலில் விளையாட்டுக்குக் கட்டியது போன்ற சின்னச் சின்ன வீடுகளும், குழந்தையின் கிறுக்கல் கோடுகள் போன்ற வளைந்த சாலைகளும் தெரியும்.
அங்கிருந்து அதே காட்சியை இரவு நேரத்தில் பார்க்கும்போது சாலைகளும், வீடுகளும் இருள் போர்வைக்குள் மறைந்துபோய், கோலம் வரைவதற்கு ஆரம்பமாக வைக்கப்பட்ட புள்ளிகளைப் போல மின்சார விளக்குகளின் வெளிச்சக் கடுகுகள் பார்க்க அத்தனை ரம்மியமாக இருக்கும். நேர் மேலே வானத்தில் வெள்ளையாக மின்னும் நட்சத்திரப் புள்ளிகளுக்குச் சவால் விடும்.
ஐஸ் துண்டுகளை உடைத்துப் போட்டுக் கலக்கி எடுத்துவரும் சில்ல்ல்… காற்று கூந்தலையும் உடைகளையும் அலைக்கழித்து முகத்தைத் தடவும்.

கோடையிலேயே ஸ்வெட்டர் தேவைப்படும் என்றால், நவம்பர், டிசம்பரில் தலையில் கண்டிப்பாகக் கம்பளி மஃப்ளர் அல்லது தொப்பி அவசியப்படும்.

எல்லாப் பக்கங்களிலும் பசுமையைப் பார்த்தபடி, மலைகளும், மேகங்களும், பறவைகளும், மரங்களும் நிறைந்து இயற்கை ஆதிக்கம் செலுத்தும் பிரதேசத்தின் மத்தியில் நிற்கும்போது, இயற்கையே அரவணைத்து...தோளில் கை போட்டு, ‘நான் இருக்கிறேன்’ என்று முதுகில் தட்டும் ஓர் உணர்வு அஞ்சலிக்குத் தோன்றும்.

செயினின் டாலர் முனையைக் கடித்தபடி நெடுநேரமாக அங்கே நின்று தூரமாய் வெறித்த அஞ்சலிக்கு இன்றோ தன் மீதே ஒரு கசப்புணர்வு மனதில் மேலோங்கியிருந்தது.

சத்யாவை நோகடித்துவிட்டேனா? என் வாழ்க்கையின் ஒரு பிரச்சினைக்கு அக்கறை எடுத்து உரிமையுடன் பேச வேண்டுமென்று அவனுக்கென்ன இருக்கிறது?

அவன் சொன்ன கருத்தைவிடவும் என்னை முட்டாள் என்று சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் கோபத்தையும் எரிச்சலையும் கிளறிவிட்டதா?

எத்தனை அனுபவப்பட்டாலும் இந்தத் தன்முனைப்பு மறுபடியும் மறுபடியும் எட்டிப்பார்த்துக் கோரமாகச் சிரித்துவிடுகிறதே...
இது தன்முனைப்பா, இல்லை சுய கவுரவமா? அம்மாவோ, அப்பாவோ ஆயிரம் தடவை முட்டாள் என்றோ அல்லது அந்த அர்த்தத்திலோ திட்டியதில்லையா? வெடுக்கென்று இப்படி பதிலடி கொடுத்துச் சீறியிருக்கிறேனா?

என்னதான் நட்பு, அன்பு என்று ஒரு நல்ல நண்பனாக மனம் ஏற்றுக்கொண்டாலும், அதே மனம் ஓர் ஓரத்தில் நீ ஒன்றும் என்னிடம் முழு உரிமை உள்ளவன் அல்ல என்கிற ஒரு கசடான எண்ணத்தையும் தேக்கி வைத்திருக்கிறதே…

பல சமயங்களில் சுய விமர்சனமாக முட்டாள் மாதிரி நடந்துகொண்டேனே என்று நானே மனதிற்குள் சொல்லிக்கொண்டதில்லையா?
சத்யா தன் கருத்தை வலியுறுத்த வேண்டுமென்று அழுத்திச் சொன்னபோது எதற்கு இப்படி சீறித்தொலைத்தேன்?
தவறு செய்வதும், செய்த தவறை உணர்வதும் இயல்புதான். உணர்ந்த பின்னும் அதே தவறை மீண்டும் செய்வதென்பதும் இயல்புதானோ? உணர்தலும், உணர்ந்ததை மறத்தலும் தொடர் நிகழ்வுகளாகவே என் வாழ்வில் நிகழ்ந்து வருகின்றன.
நான் ஆயுதமாகப் பூவை எடுக்க வேண்டுமா இல்லை, கத்தியை எடுக்க வேண்டுமா என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று புகழ் வாய்ந்த சொற்றொடர் உண்டு.

என் சுய குணம் எதுவாக இருந்தாலும்…எதிர்வினையாற்றுபவரின் குணத்தைப் பொறுத்துதானே ரியாக்ட் செய்ய முடிகிறது?
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட காந்தி, பதிலுக்கு தன்னைத் தள்ளிவிட்டவனை இழுத்து கீழேத் தள்ளியிருந்தால் அவர் சராசரியாகியிருப்பார்.

ஏன் என்னைத் தள்ளினான், இதற்கான மூல காரணம் என்ன… அந்த வேரைத்தான் அறுக்க வேண்டும் என்று முனைந்ததால்தான் அவர் மகாத்மா!

ஆனால் மகாத்மாவை வியக்கவும், பாராட்டவும் முடிகிற நம்மால் அப்படியே அவரைப் போல நடந்துகொள்ள முடிகிறதா?
பெரும்பாலும் சராசரிகளையும் வெகு சில மகாத்மாக்களையும் கொண்டதுதானே இந்தச் சமூகம்? எல்லோரும் மகாத்மாக்களாக இருந்தால் மகாத்மாக்களுக்கு ஏது தனி மரியாதை? சராசரிகளுக்கு நடுவில் தனிப்பட்டு நிற்பதால்தான் மகாத்மாவுக்குப் பெருமை. மகாத்மாக்களுக்குப் பெருமை சேர்க்க சராசரிகள் தேவைப்படுகிறார்களே… மகாத்மாவாக மாற வாழ்நாள் முழுவதும் முயற்சி எடுத்தபடி, ஆனால் சராசரியாகவே இருப்பவர்களே அதிகம். ஒரு நேரம் சராசரியாகவும், ஒரு நேரம் மகாத்மாவாகவும் வாழ்தல் ஒன்றே இங்கே சாத்தியம்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றிய அஞ்சலி பால்கனியிலிருந்து அலுவலகத்திற்குள் வந்து சத்யாவைத் தேடினாள்.
அவன் நாற்காலி காலியாக இருந்தது.

“திலகா… சத்யா வீட்டுக்குக் கிளம்பிட்டாரா?”
“ஆமாம். உங்கிட்ட சொல்லச் சொன்னார்.”
சத்யாவுக்கு போன் செய்தாள்.
“சொல்லு…” என்ற அவன் குரலில் வறட்சி இருந்தது.
“பைக் ஓட்டிட்டிருக்கியா?''
“இல்ல. பெரிய மழை. டீக்கடைல டீ குடிச்சிட்டிருக்கேன்.”
“கோபமா இருக்கியா சத்யா?''
“இல்ல… என்ன சொல்லு.''
“அக்கறையா பேசினே. உன்னைக் காயப்படுத்திட்டேன்.''
“பரவால்ல.''
“இப்படி உடனே மன்னிக்காத ப்ளீஸ்…”
“ஏன்?”
“அதான் எனக்கு இளக்காரமாப் போயிடுது.''
“மன்னிக்கிற அளவுக்கு ஒண்ணுமே நடக்கலையே.''
“பின்ன ஏன் வெடுக்குன்னு போனே?''
“நான் சொன்னது உனக்குப் பிடிக்கல. அந்த டாபிக் ஓவர். அதனால போனேன். அஃப் கோர்ஸ்… நானும் உன்னை முட்டாள்னு சொல்லிருக்கக் கூடாது.”
“இன்னும் நூறு தடவை சொல்லு. நான் முட்டாளேதான்.”

“வேணாம் அஞ்சலி. இந்தச் சுய இரக்கம் டிப்ரஷன்ல கொண்டுபோய் நிறுத்தும். எங்கிட்ட ஸாரி சொல்லணும்னு எந்த ஃபார்மாலிட்டியும் வேணாம். மழை நின்னுடுச்சி. நான் கிளம்பறேன். நாளைக்குப் பேசுவோம். உன் கான்ஃபிடென்சை எப்பவும் எதுக்காகவும் விட்ராதே அஞ்சலி. பரவால்ல. நெருப்பு மாதிரி கொஞ்சம் கோபமாவே இரு. அதான் உன் ஸ்பெஷாலிட்டி.”
சத்யாவிடம் பேசியதும் கொஞ்சம் தெம்பாக இருந்தது.
இதேப்போலவே ஒரு முறை ரகு சொன்னான் அல்லவா?

படுக்கையறையிலிருந்து குரல் கொடுத்தான் ரகு, “பரணி தூங்கிட்டான் அஞ்சலி.”
“வந்துட்டேன்…'' என்றாள் கிச்சனிலிருந்து.
பரணி புரண்டுவிடாமல் இரண்டு பக்கமும் குட்டித் தலையணைகளை வைத்துவிட்டு, ஜன்னலின் திரைச்சீலைகளை முழுவதுமாக இழுத்துவிட்டான் ரகு.
“தூங்கிட்டான்னு சொன்னேன்'' என்றான் மறுபடியும்.
“அஞ்சி நிமிஷம்ப்பா'' என்றாள் மேடையைச் சுத்தம் செய்தபடி.
“காலையில சுத்தம் செஞ்சிக்கயேன்.''
“வர்றேண்டா ராஸ்கல்!''
கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு புடவை முந்தானையில் கைகளைத் துடைத்தபடி வந்து நைட்டியைக் கையிலெடுத்த அஞ்சலியை அப்படியே அள்ளி அணைத்தான் ரகு.
“ட்டூ மினிட்ஸ் குடேன். நைட்டி மாத்திடறேன்.''

“அப்பறம் மாத்திக்கலாம்'' அவள் காது மடலைச் செல்லமாகக் கடித்து விடுவித்து…இதழ்களைக் கவ்வினான்.
“மெதுவாடா! என்ன இன்னிக்கு செம மூடு? ஆபீசுக்கு எவளாச்சும் லோ ஹிப்ல ஸாரி கட்டின க்ளையன்ட் வந்தாளா?''
“என் பொண்டாட்டியக் கொஞ்சறதுக்கு நான் எவளையாவது பாத்துதான் மூடேத்திக்கணுமா? உன்ன நினைச்சாலே போதாதா?''
“ஆஹாஹா… நம்பிட்டேன். அன்னிக்கு ஒரு க்ளையன்ட் பத்தி என்னமா வர்ணிச்சே… சைஸ்லாம் சொன்னியேடா படவா!''
“ஓ.. ட்ரான்ஸ்பரன்டா எல்லாம் சொல்றது தப்போ? இனிமே ஃபில்டர் செய்யணுமோ?''
“வேணாம். வேணாம். இப்டியே இரு. ஆனா இப்ப உன் மூடுக்குக் காரணம் எனக்குத் தெரியும். நேத்து திட்னதுக்கு இன்னிக்கு சமாதானப்படுத்தறே. தெரியாதா உன்னைப் பத்தி?''

“போச்சுடா… இதுக்குக்கூட ஒரு காரணம் கற்பிச்சிப்பியா?''
“போன்ல ராட்சசின்னு சொல்லிட்டு நேர்ல கொஞ்சினா காரணம் தேடுதே மனசு… யோகா கிளாஸ் போலாம்னு இருக்கேன்.''
“அழகான யோகா மாஸ்டரைப் பாத்தியா?''
“ச்சீ! கோபத்தைக் குறைன்னு சொல்லிட்டே இருக்கியே.''
“அது பரவால்ல. அப்படியே இருக்கட்டும். கோபம்தான் டியர் உன் ஸ்பெஷாலிட்டி'' என்று இறுக்கி அணைத்துக்கொண்டான்.
“குடிகாரன் பேச்சு மாதிரி… இது மிட் நைட் பேச்சு. விடிஞ்சதும் இதையே சொல்றியான்னு பாப்போம்'' என்ற அஞ்சலி அவன் கைகளின் தேடலுக்குச் சிணுங்கியபடி அனுமதித்தாள்.

(தொடரும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE