அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி- ஞானபீடத்தின் இன்னொரு மாணிக்கம்!

By காமதேனு

என்.பாரதி
readers@kamadenu.in

இலக்கியத் துறையின் உயரிய விருதான ‘ஞானபீட விருது’ இந்த முறை மலையாளக் கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு வழங்கப்படுகிறது. 93 வயதான மரபுக் கவிஞரான அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, இலக்கியப் பங்களிப்பிலிருந்து விலகி இளைப்பாறும் தருணத்தில் இந்த விருதைப் பெறுகிறார். மலையாளப் படைப்புலகில் ஞானபீட விருதுபெறும் ஆறாவது படைப்பாளியாக இணைந்திருக்கும் அக்கித்தத்துக்கு இதுவே காலம் கடந்த அங்கீகாரம்தான்!

1926 மார்ச் 18-ல், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் குமரநல்லூரில் பிறந்த அச்சுதன் நம்பூதிரி, அக்கித்தம் என்னும் தனது வீட்டின் பெயரோடு சேர்த்தே அறியப்படுகிறார். விளிம்புநிலை மனிதர்களின் துயர்மிகு வாழ்வைப் பதிவுசெய்தவை இவரது படைப்புகள்.
இவரது ஆரம்ப கட்டம், இதழியல் துறை சார்ந்தே இருந்தது. எம்.ராமன்பட்டதிரிப்பாடு ஆசிரியராக இருந்து வெளிவந்த ‘உண்ணி நம்பூதிரி’ என்னும் இதழின் வெளியீட்டாளராகப் பணியில் சேர்ந்தபோது அக்கித்தத்துக்கு 20 வயதுதான்! ‘மங்களோதயம்’ உள்ளிட்ட சில இதழ்களில் உதவி ஆசிரியராகவும் இருந்த அக்கித்தத்துக்கு, தொடர்ந்து அகில இந்திய வானொலியில் வேலை கிடைத்தது. திருச்சூர் அகில இந்திய வானொலியில் பொறுப்பாளராக இருந்த அக்கித்தம், அப்போதே பல புதுமைகளைச் செய்து வானொலியின் பக்கம் மக்களின் செவிகளைத் திருப்பினார். 1985-ல், பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதழியல், வானொலி பணிகளுக்கு இடையே இலக்கியத்தில் தீவிரமாக இயங்கினார். கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என நீண்டுவிரிந்த இவரதுபடைப்புலகில், கவிதைக்கு மிக முக்கிய இடம்உண்டு. மொத்தம் 55 படைப்புகளை எழுதியிருக்கிறார். அதில், 45 கவிதைத் தொகுப்புகள். ‘இருபதாம் நூற்றாண்டின் இதிகாசம்’ என்னும் இவரது குறுங்காவியம் மிகவும் பிரசித்தம். அதில் இடம்
பெற்ற ‘வெளிச்சம் துயரம் மகனே... இருட்டல்லவா இனியது’ எனும் வரிகள் மலையாளிகளின் அன்றாடச் சொல்லாடலாகவே மாறிவிட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE