குற்றங்களைக் களைய கைகோப்போம்!

By காமதேனு

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சற்று நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது தமிழகக் காவல் துறை. ‘உதவி கோரி வரும் அழைப்புகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் சரக எல்லை, நடைமுறைச் சிக்கல்கள் போன்ற வரைமுறைகளைத் தாண்டி, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் தமிழகக் காவல் துறை டிஜிபி-யான திரிபாதி.

தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத அம்மாநிலக் காவல் துறை முதலில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் நோக்குடன், இப்படியான நடவடிக்கையைத் தமிழகக் காவல் துறை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. குழந்தைகள், சிறுமிகள், மூதாட்டிகள் என்று எல்லா வயதினரும் பாலியல் சீண்டல்களுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகிவரும் நிலையில் அவர்களைக் காக்க காவல் துறையும் சமூகமும் கைகோக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. அந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காவல் துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய  ‘காவலன்’ செயலி ஆக்கபூர்வமான முயற்சி. இந்தச் செயலியைப் பரவலாக்கவும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் காவல் துறை துணை நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரிக்க, சமகால நிகழ்வுகளே சாட்சியாக இருக்கின்றன. இந்நிலையில், பொதுமக்களின் ஆபத்பாந்தவனாகக் காவல் துறை இருக்கும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவது காவல் துறையினரின் கடமை.

டிஜிபி-யின் இந்த உத்தரவுகளை, உணர்வுபூர்வமாகப் பின்பற்றி மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க காவல் துறையினர் முன்வர வேண்டும். குற்றங்களைக் களைவதில் காவல் துறையினருக்குப் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான சமூகத்தை நாம் உருவாக்க முடியும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE