கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
‘யானைகள்: அழியும் பேருயிர்’, ‘அதோ அந்தப் பறவை போல’, ‘பாலூட்டிகளின் கதைகள்’, ‘பறக்கும் இயந்திரங்கள்’, ‘பல்லுயிரியம்’ என்று சூழலியல் குறித்து 16 நூல்களை எழுதியவர் ச.முகம்மது அலி. சூழலியல் ஆராய்ச்சிக்காக மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளுக்கும் சென்றுவரும் இவர், தமிழக பள்ளி - கல்லூரிகளில் சூழலியல் வகுப்புகளையும் நடத்திவருகிறார். சூழலியல் ஆர்வலரான இந்த முகம்மது அலி, லெளகீக வாழ்க்கைக்காக, ஸ்கிரீன் பிரின்டிங் பணி, தனியார் நிறுவனத்தில் டிசைனிங் பணி, புத்தகக் கடைப் பணி என்று பல்வேறு வேலைகளைச் செய்தவர் .
“சொந்த ஊர் தாராபுரம். அப்பா தன்னோட தொழில் நிமித்தமா மேட்டுப்பாளையத்துக்கு இடமாறினார். நான் ராமகிருஷ்ணா வித்தியாலயத்துல பி.ஏ., வரலாறு படிச்சேன். அதுக்கப்புறம், படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலைகளையே பத்து வருஷம் செஞ்சேன். இதுக்கிடையில, இயற்கை மேல எனக்கு ஆர்வம் வந்துச்சு. ஸ்கூல்ல படிக்கும்போதே நண்பர்களோட சேர்ந்து கல்லாறு போயிடுவேன். யானை, சிறுத்தை, புலின்னு நிறைய விலங்குகளைப் பார்த்திருக்கேன். நான் கல்லூரிக்குப் போற காலத்துலேயே கல்லாறுலயும், அதை ஒட்டிய காடுகள்லயும் நிறைய மாற்றம் தெரிஞ்சுது. விலங்குகளிடமும் பல மாற்றங்களைப் பார்க்க முடிஞ்சுது.
சின்ன கிராமம் மாதிரி இருந்த மேட்டுப்பாளையம் சீக்கிரம் நகரமா மாறிடுச்சு. வனத்தை ஒட்டியே நிறைய கட்டிடங்கள், விடுதிகள் வந்துடுச்சு. இப்படியே போனா காடுகள், விலங்குகள் என்ன ஆகும்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். அந்த வருத்தம்தான் கல்லூரி படிக்கிறப்பவே ‘வன உயிர் பாதுகாப்பு சொசைட்டி’ங்கிற அமைப்பை ஆரம்பிக்கக் காரணமா இருந்துச்சு. அதுல ஒரே கருத்துடைய பத்துப் பேர் எனக்கு உறுதுணையா நின்னாங்க.