பேசும் படம் - 50: பொற்கோயிலுக்குள் ராணுவம்

By பி.எம்.சுதிர்

1980-களின் தொடக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தலைவலியாக காலிஸ்தான் தீவிரவாதிகள் இருந்தனர். பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கக் கோரி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலா தலைமையில் தீவிரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரிவினைவாதிகள், பஞ்சாப் பொற்கோயிலில் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததாகத் தெரியவந்தது. மேலும், காலிஸ்தான் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்து தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து 1984-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவுப்படி பொற்கோயில் மீது ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. ஜூன் 6-ம் தேதி வரை நீடித்த இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் பலரும் கொல்லப்பட்டதுடன் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்தத் தாக்குதலில் முக்கியப் பங்காற்றிய ராணுவ அதிகாரிகளைத்தான் இப்படத்தில் பார்க்கிறீர்கள். பஞ்சாப்பில் தீவிரவாதம் அழிந்து அமைதி திரும்ப இந்தத் தாக்குதல் முக்கியக் காரணமாக விளங்கியது. அதேநேரத்தில், இந்தத் தாக்குதல் முடிந்த நான்கே மாதங்களில் தனது சீக்கிய மெய்க்காப்பாளர்கள் இருவரால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

எடை பார்க்கும் காந்தி

போராட்டம், பொதுக்கூட்டம், சிறைவாசம் என சுதந்திரப் போராட்டத்தின்போது எந்நேரமும் பரபரப்பாக இருந்தவர் மகாத்மா காந்தி. ஆனால், சதா சர்வ காலம் பரபரப்பாக இயங்கினாலும் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். நாள்தோறும் 18 கிலோமீட்டர் தூரம் நடப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்துடன் உணவுப் பழக்கங்களிலும் கட்டுப்பாடாக இருந்தார்.

காந்தியின் இந்தக் கட்டுப்பாடுதான் அவரை எந்தநேரமும் களைப்பறியாமல் சுறுசுறுப்பாக வைத்திருந்தது. மலேரியா,  ப்ளூ  உள்ளிட்ட  நோய்களால்  தாக்குண்டபோதும், 2 அறுவைசிகிச்சைகள் செய்தபோதும் அவரது உடல் தளராமல், அவரது போராட்ட வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்ட மகாத்மா காந்தி, மும்பையில் உள்ள பிர்லா ஹவுஸில் தங்கியிருந்த காலத்தில், அங்குள்ள எடை மெஷினில் தன் எடையை சோதித்துக் கொள்ளும் இப்படம் 1945-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பிடிபட்டார் சதாம் உசேன்

இராக் போரில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு 2003-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மறக்க முடியாத நாள். பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு தண்ணி கட்டிக்கொண்டிருந்த இராக் அதிபர் சதாம் உசேன், அன்றைய தினம்தான் பிடிபட்டார். இராக்கில் உள்ள அட்-டார் எனும் ஊரில் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்கப் படைகள் சுற்றிவளைத்துப் பிடித்தன. ராணுவ உடையில் அமெரிக்காவுக்கு எதிராக கம்பீரமாக கர்ஜித்துக்கொண்டிருந்த சதாம் உசேனை நீண்ட தாடி, வற்றிப் போன கன்னம், வெளிறிப் போன முகம் என்று பரதேசிக் கோலத்தில் காட்டிய இந்தப் படம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்டாலும் கடைசி வரை தனது கவுரவத்தையும் கம்பீரத்தையும் சதாம் உசேன் விட்டுக்கொடுக்கவில்லை. தன் மீதான வழக்கு விசாரணையைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட சதாம் உசேன், தூக்குக் கயிறு கழுத்தில் ஏறும்போதும் கலங்காமல் நின்றார்.

கூடைப்பந்து விளையாட்டின் தொடக்கம்

இப்படத்தில் கூடையைக் கையில் பிடித்திருப்பவர் கூடைப்பந்து விளையாட்டின் தந்தையான ஜேம்ஸ் நிஸ்மித் (Dr.James Naismith). பந்தைக் கையில் வைத்திருப்பவர் அவரது மனைவி மாவ்டே. கனடா நாட்டில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் நிஸ்மித், பனிக்காலங்களில் மாணவர்கள் வெளியே விளையாடச் செல்லாமல் வீடு மற்றும் வகுப்பறைகளுக்குள் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து வருந்தினார். இதைத்தொடர்ந்து பனிக்காலத்தில் உள்ளரங்கிலேயே அவர்கள் ஆடும் வகையிலான ஒரு விளையாட்டை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். நீண்ட நாள் யோசனைக்குப் பிறகு கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கினார்.

கூடைப்பந்து விளையாட்டை எப்படி விளையாடுவது என்று தனது மனைவி மாவ்டே உதவியுடன் அவர் செயல் விளக்கம் கொடுக்கும் இந்தப் படம் 1928-ல், எடுக்கப்பட்டது.

பிரியும் புத்தகங்கள்

சுதந்திரத்துக்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் 2 நாடுகளாகப் பிரிந்ததைத் தொடர்ந்து நாட்டின் சொத்துகளும் பிரிக்கப்பட்டன. அப்படி பிரிக்கப்பட்ட சொத்துகளில் புத்தகங்களும் அடங்கும். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி கொல்கத்தா இம்பீரியல் செக்ரடேரியேட் லைப்ரரியில் வைக்கப்பட்டிருந்த 1.50 லட்சம் புத்தகங்களை இரு நாடுகளும் சமமாகப் பிரித்துக்கொண்டு இருந்தபோது எடுத்த புகைப்படம் இது. இப்படத்தில் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேசிய நூலகரான பி.எஸ்.கேசவன், இருநாடுகளுக்குமான புத்தகங்களை சமமாக பிரித்துக்கொண்டு இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வெளியான லைஃப் பத்திரிகையில் இப்படம் வெளியானது. அரசு அலுவலகங்களில் இருந்த நாற்காலிகள்கூட இச்சமயத்தில் இரு நாடுகளுக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE