எங்கெங்கு காணினும் பசுமை; சுவாசத்துடன் கலந்து சிந்தையைத் தொடும் கானகத்தின் பச்சை வாசனை; உடலைத் தீண்டும் காற்றின் ஈரப்பதம்; வண்டுகளின் ரீங்காரம், இயற்கை அன்னையின் கருணை இருந்தால் காணக் கிடைக்கும் புலிகள், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மோனநிலை என்ற அனுபவத்தைப் பெற விரும்பும் சூழல் இணக்கச் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த வாரம் நாம் பயணப்படுவது கேரளத்தின் பரம்பிக்குளத்திற்கு.
சிறந்த முன்மாதிரி
பசுமை மாறா, ஈர இலையுதிர்க் காட்டு வகையைச் சேர்ந்த பரம்பிக்குளத்தில், ஓங்கி உயர்ந்த தேக்கு மரங்களின் ஊடே மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான புலி, சிறுத்தை, யானை, மான்கள், காட்டு எருமைகள் போன்ற விலங்குகளைக் காணலாம். பரம்பிக்குளம் அணை இருப்பதால் நீர் வாழ் இயற்கைச் சூழலும் இங்கு வளமாக இருக்கிறது. அதனால், மிகச் சாதாரணமாக முதலைகளையும் பார்க்கலாம். நீர்ப் பறவைகளும் கண்களுக்கு விருந்தாகலாம். ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சென்றால் அற்புதங்களைத் தரிசிக்கலாம்.
பரம்பிக்குளம் அமைந்திருப்பது கேரளமாக இருந்தாலும் தமிழ்நாட்டின் டாப் ஸ்லிப் வழியாகவே செல்ல வேண்டும். அதுவே அதற்கான நுழைவு வாயில். டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. அதனையடுத்து பரம்பிக்குளம் இருக்கிறது. தற்போது பரம்பிக்குளமும் புலிகள் காப்பகமாகவே உள்ளது. சூழல் இணக்கச் சுற்றுலாவுக்கான சிறந்த முன்மாதிரி இந்தப் பரம்பிக்குளம்!
சாதித்துக்காட்டிய சஞ்சயன் குமார்
பரம்பிக்குளத்தைப் பற்றி பேசும்போது சஞ்சயன் குமார் ஐஎஃப்எஸ் குறித்துப் பேசாமல் கடந்துவிட முடியாது. காரணம் பரம்பிக்குளத்திற்கு ‘சூழல் இணக்கச் சுற்றுலா முன்மாதிரி' (Eco Tourism Model) என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்ததில் அவருக்குப் பெரும் பங்கிருக்கிறது.
2006 முதல் 2010 வரை பரம்பிக்குளத்தின் வனவிலங்குகள் காப்பாளராக (Wild Life Warden) இருந்த சஞ்சயன் குமார் சொல்வதைக் கேளுங்கள்:
“இயற்கை பற்றிய விழிப்புணர்வு, உள்ளூர்ப் பழங்குடிகளின் வாழ்வாதாரம், உயிர்ச் சூழலியலைப் பாதிக்காத சமன்படுத்தப்பட்ட சுற்றுலா என எல்லா
வற்றையும் உள்ளடக்கிய, நீடித்து நிலைக்கக் கூடிய திட்டத்தை வகுக்க முற்பட்டோம். பரம்பிக்குளத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தினோம்.
இந்தியாவில் சுமார் 6 லட்சம் கிராமங்கள், வனப் பகுதிகளை ஒட்டியே அமைந்துள்ளன. பழங்குடிகளின் வசிப்பிடம் நிர்வாக ரீதியாக உள்ளடங்கி இருப்பதால் அரசின் திட்டங்கள் அவர்களை எளிதில் எட்டுவதில்லை. எனவே, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வனத்தையே முழுக்க முழுக்கச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பழங்குடிகளின் தேவை சுருக்கமானதே. ஆனால், அதையும் சுரண்ட சில கும்பல்கள் இருக்கின்றன. வனவிலங்குக் கடத்தல் கும்பல், நக்சல்கள், மாவோயிஸ்ட்டுகள் போன்ற சமூக விரோதிகளின் தூண்டிலில் விவரம் அறியாமலேயே பழங்குடிகள் சிக்கும் அபாயம் இருக்கிறது. இதையெல்லாம் தடுக்க அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எனவே, பரம்பிக்குளம் வாழ் பழங்குடிகளின் பொருளாதாரத் தன்னிறைவை உறுதி செய்வதை வகுப்பதில் முதன்மை இலக்காகக் கொண்டோம்.
2006 வரை பரம்பிக்குளத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் தங்களின் சொந்த வாகனங்களில் சென்றுவரலாம் என்றிருந்தது. நாங்கள் வனத் துறைக்குச் சொந்தமாக சஃபாரி பேருந்துகளை வாங்கினோம். அந்தப் பேருந்துகளை இயக்கவும், அதில் பயண வழிகாட்டியாகப் பயணிக்கவும் உள்ளூர்ப் பழங்குடிகளுக்குப் பயிற்சி கொடுத்தோம். இதன் மூலம் வனத்திற்குள் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது. அதனால் விலங்குகள் அச்சமின்றி இயல்பாக நடமாடுவது அதிகரித்தது. வனத்தைப் பற்றி நன்கு அறிந்த உள்ளூர்வாசி வழிகாட்டுவது பயணிகளுக்கும் சவுகரியமாக இருந்தது. குப்பைகளை வீசுவது, கூச்சல் போடுவது என்று எல்லாமே குறைந்தன.
பயண வழிகாட்டிகள், ஓட்டுநர்கள், ட்ரெக்கர்களின் வழிகாட்டிகள், உள்ளே வனத் துறை சார்பில் இயங்கும் உணவகங்களின் சமையல் தொழிலாளர்கள் எனப் பல வகைகளில் உள்ளூர்ப் பழங்குடியினருக்கு வாழ்வாதாரம் கிடைத்தது. அவர்கள் வெகுவிரைவில் வனத் துறையின் ஆதரவாளர்களானார்கள்.
பரம்பிக்குளத்தில் பூப்பாறை என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு வாழும் பழங்குடிகள் முழுக்க முழுக்க இயற்கை உரங்களைக் கொண்டு ஏலம், மிளகு உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அதற்கு வனத் துறை மூலமாக சர்வதேசத் தரச் சான்றிதழ் பெற்றுத்தந்தோம். பரம்பிக்குளம் வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது பூப்பாறை தயாரிப்புகளைப் பூரண நம்பிக்கையுடன் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் தேன் எடுத்தலில் அறிவியல் நுட்பங்களைப் பழங்குடிகளுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறோம்.
எங்களின் திட்டத்தால் வனத்தின் சூழல் மீதான அழுத்தம் வெகுவாகக் குறைந்தது. பூர்வகுடிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டது. இப்படியாக, சூழல் இணக்கச் சுற்றுலாவை ஒரு வரம்புக்குள் கொண்டுவந்தோம்” என்கிறார் சஞ்சயன் குமார். இது ஒட்டுமொத்த இந்தியாவும் தழுவிக்கொள்ள வேண்டிய புத்தாக்கத் திட்டம் அல்லவா!
அமைதியும், தூய்மையுமே பிரதானம்…
பரம்பிக்குளத்திற்குச் சென்றுவந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் போபி ஜார்ஜ் கோடியாத், தனது பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
“நான் ஒரு பயண ஆர்வலர். எனது நண்பர்கள் குழுவும் ஒருமித்த சிந்தனை கொண்டதே. சூழல் இணக்கச் சுற்றுலா செல்வதே வனத்தின் அமைதியையும், தூய்மையையும் பரிபூரணமாக உணர வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் நாங்கள் அத்தகைய சுற்றுலாவுக்குப் புகைஞர்கள், மதுப் பிரியர்களைத் தவிர்த்துவிடுவோம்.
முதல் முறை பரம்பிக்குளம் சென்றபோது, மதுரையிலிருந்து ஒரு குழுவாகக் கிளம்பினோம். உடை, உணவு, லிட்டர் பேக் எடுத்துக்கொண்டோம். உணவைப் பொறுத்தவரை பழங்கள், உலர் பழங்கள், பிஸ்கட் வகைகள் போன்றவற்றைத்தான் எடுத்துச் சென்றோம். கெட்டுப்போகும் சமைக்கப்பட்ட உணவுகளை நாங்கள் வனப் பகுதிக்கு எப்போதுமே எடுத்துச் செல்வதில்லை. ஒருவேளை நாங்கள் கொண்டு செல்லும் பழங்கள் ஒன்றிரண்டு மீந்தாலும், அது கீழே தவறுதலாக விழுந்தாலும் அந்த உணவை உட்கொள்ளும் குரங்கு போன்ற விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாது
அல்லவா?
பரம்பிக்குளம் எங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. அங்கே சாலையோரங்களில் நாங்கள் பிரம்மாண்ட கருந்தேள்களைப் பார்த்தோம். யானைகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைகளைக் கண்டோம். புலியைக் காண முடியாததுதான் ஒரே குறை. எல்லாவற்றையும் என் கேமராவில் பதிவுசெய்துகொண்டேன். வனப் பகுதியில் உள்ள மர வீடுகள், தங்குமிடங்களில் தங்கிக்கொண்டு ட்ரெக்கிங் செல்லலாம். நைட் சஃபாரி போகலாம். ஆனால், எங்கள் பயணத்தில் நாங்கள் அதைத் திட்டமிடாததால் மாலையே திரும்பினோம்.
பரம்பிக்குளத்திற்கு அனைத்து வயதினருமே சென்று வரலாம். அனைவருமே இயற்கையின் அமைதியையும், தூய்மையையும் மதிக்கத் தெரிந்தவராக இருப்பது மட்டும்தான் அவசியம். நான் இரண்டாவது முறையாகக் குடும்பத்துடன் சென்றபோது என் குழந்தைகளுக்கு இந்த அறிவுரையைச் சொல்லியே அழைத்துச் சென்றேன். ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் அந்தப் பயணத்தை அனுபவித்தனர். சூழல் இணக்கச் சுற்றுலாவுக்கும் வழக்கமான சுற்றுலாவுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்” என்கிறார் போபி ஜார்ஜ்.
இவரது கேமராவில் க்ளிக் ஆன பரம்பிக்குளத்தின் அழகை, இந்த அத்தியாயத்தில் கண்டுகளியுங்கள். அதே புத்துணர்ச்சியுடன் அடுத்த வாரம் பரளிக்காடு சென்றுவரலாம்!
(பயணம் தொடரும்...)