பேசும் படம் - 49: ஜப்பானை சிதைத்த இரட்டை குண்டுகள்!

By பி.எம்.சுதிர்

இரண்டாம் உலகப்போரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என்று ஜப்பான் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலைச் சொல்லலாம். அணுகுண்டுகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகளை இந்த உலகுக்கு எடுத்துச்சொன்ன இந்தச் சம்பவத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். இதில் நாகசாகி நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டபோது எடுத்த படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.



1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆரம்பத்தில்  ஈடுபடாமல் இருந்த ஜப்பான், பின்னர்   ஆசிய பகுதியில் தனது வலிமையை நிரூபிக்கும் பொருட்டு 1941-ம் ஆண்டு இப்போரில் இணைந்தது. இத்தாலி மற்றும்  ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஜப்பானிய படைகள், இந்தியாவின் கிழக்கு எல்லை வரை முன்னேறின.

இப்போரில் 1942-ம் ஆண்டுவரை  ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி  ஆகிய நாடுகளின் கைதான் ஓங்கி இருந்தது.  ஆனால், அதன்பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இப்போரில் நேரடியாகப் பங்கேற்காமல் இருந்த அமெரிக்கா, பின்னர் இதில் நேரடியாகக் களம் இறங்கியது, நேச நாடுகளின் கரத்தை வலுப்படுத்தியது. அதே நேரத்தில் ஐரோப்பாவின் கிழக்கு முனையில் ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தை ரஷ்யப் படைகள் தடுத்து நிறுத்தின.

பல ஆண்டுகள் நீடித்த போருக்குப் பின்னர் 1945-ம் ஆண்டு மே மாதம் ஜெர்மனி சரணடைந்தது. இதனால் ஐரோப்பிய நாடுகளில்  போர் முடிவுக்கு வந்தது. ஆனால்,
ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான், போரைத் தொடர்ந்துகொண்டிருந்தது.  இந்நிலையில் 1945-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா இணைந்து
ஒரு அறிக்கையை வெளியிட்டன.  ‘பாட்சம் அறிக்கை’ (Potsdam Statement) என்று அழைக்கப்பட்ட அந்த அறிக்கையில்,  ‘ஜப்பான் அரசு உடனடியாக நிபந்தனை
யின்றி சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அந்நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும்’ என்று எச்சரிக்கப்பட்டது.  

ஆனால், ஜப்பான்  பிரதமரான கண்டாரோ சுசுகி, இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தார். இதனால் ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பிரிட்டனும் அமெரிக்காவும் திட்டமிட்டன.  இதற்கு அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த நகரம் ஹிரோஷிமா. சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசித்துவந்த ஹிரோஷிமா, அப்போது ஜப்பானின் முக்கிய நகரமாக இருந்தது. போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் இங்கிருந்துதான் அனுப்பப்பட்டு வந்தன. இதனால்தான் முதலில் ஹிரோஷிமாவை அமெரிக்காவும் பிரிட்டனும் குறிவைத்தன.  

இந்தத் திட்டத்தின்படி ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி காலையில் பசிபிக் கடற்பகுதியில் உள்ள டினியான் (Tinian)  என்ற இடத்திலிருந்து எனோலா கே (Enola Gay) என்ற போர் விமானத்தில்  ‘லிட்டில்பாய்’ என்ற அணுகுண்டு ஏற்றி அனுப்பப்பட்டது. ஹிரோஷிமா மக்கள் காலையில் எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் மீது ‘லிட்டில் பாய்’  வீசப்பட்டது. ஹிரோஷிமா நகரில் சர்வ நாசத்தை விளைவித்த இந்த அணுண்டு வீச்சில் சுமார் 70 ஆயிரம் பேர் பலியானார்கள். இதே அளவிலான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஹிரோஷிமாவின் 69 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகின. எஞ்சியிருந்த கட்டிடங்களும் வாழத் தகுதியில்லாத நிலையில் உருக்குலைந்தன.
இந்த அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நேரத்தில்   அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன், ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அறிவித்ததுடன்,  “இனியும் ஜப்பான் சரணடையாவிட்டால் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கும்” என்று எச்சரித்தார்.

ஆனால், அதன் பிறகும் ஜப்பான் சரணடையவில்லை. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் மீது மேலும் ஒரு அணுகுண்டு தாக்குதலை நடத்த அமெரிக்காவும், பிரிட்டனும் திட்டமிட்டன.  இம்முறை தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் நாகசாகி.  ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியைத் தாக்க ஆகஸ்ட் 9-ம் தேதி  ‘போக்ஸ்கார்’ (Bockscar) என்ற விமானத்தில் ‘ஃபேட்மேன்’ என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த அணுகுண்டை வீசுவதற்காக அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவர் லெப்டினென்ட் சார்லஸ் லெவி . பிலடெல்பியாவைச் சேர்ந்த இவர், படமெடுப்பதிலும் கெட்டிக்காரராக இருந்தார். அணுகுண்டை வீசுவதற்காக செல்லும் குழுவில் தான் இருப்பதாகத் தெரிந்துகொண்டதும் அதைப் படம்பிடிக்கும் ஆர்வத்தில்  மறக்காமல் தனது கேமராவையும் எடுத்துக்கொண்டு சென்றார். ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11 மணிக்கு, நாகசாகி மீது 2-வது அணுகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு மண்ணில் விழுந்து, அதன் ஜுவாலைகள் மிகப்பெரிய அளவில்  எழும்ப, அதைத் தனது கேமராவால் துல்லியமாகப் படம்பிடித்தார் சார்லஸ் லெவி. உலகின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவும், அணுகுண்டின் அழிவுகளைப் பற்றி எடுத்துச் சொல்லும் படமாகவும் இன்றுவரை இப்படம் விளங்குகிறது.

பின்னாளில் இதுபற்றி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த சார்லஸ் லெவி, “அணுகுண்டை வீசுவதற்கு முன்பே, அதன் ஜுவாலை எங்கள் கண்களைத் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடிகளை அணிந்துகொண்டோம். அணுகுண்டை நாங்கள் வீசியதும் மிகப்பெரிய அளவிலான ஜுவாலை ஒன்று வானுக்கும் பூமிக்குமாய் எழுந்தது. 60 ஆயிரம் அடி உயரம் வரை எழுந்த இந்த ஜுவாலையில் பல வண்ணங்கள் கலந்திருந்தன. அதன் வெப்பத்தை எங்களாலேயே தாங்க முடியவில்லை. எத்தனை வேகத்தில் முடியுமோ, அத்தனை வேகத்தில் நாங்கள் திரும்பி வந்தோம்” என்று சொன்னார்.

ஜப்பான் மீது நடத்தப்பட்ட இந்த இரண்டாவது அணுகுண்டு வீச்சில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அழிந்ததுடன் ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஜப்பான் நிலைகுலைந்தது.  இனியும் தங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதியதால்   நேசப் படைகளிடம் ஜப்பான் சரணடைந்தது. இதற்கடுத்த சில நாட்களில் 2-வது உலகப்போரும் முடிவுக்கு வந்தது.
 

சார்லஸ் லெவி

2-ம் உலகப் போரின்போது அமெரிக்க விமானப்படையில் லெப்டினென்டாகப் பணியாற்றியவர் சார்லஸ் லெவி (Charles Levy). இப்போர் முடிந்த ஒரு மாதத்துக்குப் பின் அமெரிக்க விமானப்படையில் இருந்து விலகிய லெவி, பின்னர் பிலடெல்பியாவில் ஒரு விற்பனையாளராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். பின்னர் தீயணைப்பு படையில் இணைந்து  பணியாற்றிய அவர், 1997-ம் ஆண்டு, தனது 79-வது வயதில் காலமானார். விமானப்படை வீரர் என்பதைவிட, அணுகுண்டு வீச்சைப் படம்
பிடித்த புகைப்படக்காரராகவே பின்னாளில் இவர் பிரபலமானார் (படத்தில் இருக்கும் குழுவில் சார்லஸ் லெவியும் இருக்கிறார்).

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE