“நம்மை முதன்மைப்படுத்துவது சுற்றுலா. இயற்கையை முதன்மைப்படுத்துவது சூழல் இணக்கச் சுற்றுலா. இந்த உயர்வான எண்ணம் இல்லாதவர்கள் வனத்துக்குள் பிரவேசிக்காமல் இருப்பது மிக மிக அவசியம். அதை உறுதிப்படுத்தும் வகையில் காட்டுயிர்களையும் கானகத்தையும் நேசிப்பவர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலாவாகச் சூழல் இணக்கச் சுற்றுலா மாற வேண்டும். வனப் பகுதிகளில் குப்பைகளையும், உடைக்கப்பட்ட மதுபாட்டில்களையும் பார்க்க வேண்டிய அவல நிலை மாற வேண்டும்" என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் ‘ஓசை’ காளிதாசன்.
நீங்கள் அடுத்த முறை வனத்துக்குள்செல்லும்போது இந்த உயர்வான எண்ணத்தோடு செல்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்குத் தெங்குமரஹடாவை அறிமுகப்படுத்துகிறோம்.
எங்கே இருக்கிறது தெங்குமரஹடா?
தெங்குமரஹடா என்ற கிராமம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவில் இருக்கிறது. ஆனால், தெங்குமரஹடா வனத்தின் பெரும்பாலான பகுதிகள், ஈரோடு மாவட்டத்திலும் எஞ்சியவை நீலகிரி மாவட்டத்திலும் இருக்கின்றன. மோயாறு எனும் தமிழகத்தின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்றின் கரையில் இருக்கிறது இந்தக் காடு. மோயாற்றின் ஒரு பக்கம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்திருக்கிறது. மறுபுறம் இருப்பது முதுமலை புலிகள் காப்பகம். அங்குதான் தெங்குமரஹடா கிராமம் இருக்கிறது.
தெங்குமரஹடாவுக்கு ஒரு சுவாரசிய வரலாறும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், மோயாற்றங்கரை சமவெளிப் பகுதியான இவ்விடத்தில் விவசாயம் செய்யவும், மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தவும் படுகர் இன மக்களுக்கு ஆங்கிலேயர்கள் அனுமதியளித்தனர். ஒரு சமூக அமைப்பை உருவாக்கி, 130 குடும்பங்களுக்கு விவசாய, மேய்ச்சல் உரிமையை வழங்கினர். தற்போது இங்கு நில உரிமை கொண்ட படுக இன மக்களின் எண்ணிக்கை மிகமிகச் சொற்பம். தற்போது அங்கு வசிப்பவர்கள் நிலத்தின் மீது நேரடி உரிமை இல்லாதவர்கள். வாழ்வாதாரத்திற்காக இங்கு குடியேறியவர்கள். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் படுகர் மக்களிடமிருந்து நிலத்தை மறு குத்தகைக்கு எடுத்துத் தொழில் செய்துவருபவர்கள். இருளர் இன மக்களும் குறைந்த அளவில் இங்கு வசிக்கின்றனர்.
எப்படிச் செல்வது?
தெங்குமரஹடாவுக்குச் செல்ல வேண்டுமானால் ஈரோடு மாவட்டம் பவானிசாகரிலிருந்து செல்வதே உகந்தது. இங்கே தங்க வேண்டுமென்றால் முதுமலை வனக் காப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும். உள்ளே செல்வதற்கு சத்தியமங்கலம் மண்டல வன அதிகாரியிடம் (டிஎஃப்ஓ) அனுமதி பெற்றிருக்க வேண்டும். சாலை வசதி இல்லை என்பதால், நல்ல இயங்குநிலையில் இருக்கும் ‘ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி’ வகை வாகனத்தில்தான் செல்ல முடியும். முதியவர்களை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். காலையில் சென்றுவிட்டு மாலை மயங்கும்முன் திரும்புவது என்றால் தேவையான உணவு, தண்ணீர் கொண்டுசெல்ல வேண்டும். முக்கியமாக உணவுக் கழிவுகளை அகற்ற ‘லிட்டர் பேக்’ (Litre Bag) எடுத்துச் செல்லவும்.
வனவிலங்குகளின் சொர்க்கம்
தெங்குமரஹடாவை வனவிலங்குகளின் சொர்க்கம் என்றே இயற்கை ஆர்வலர்கள் அழைக்கின்றனர். கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள் சந்திக்கும் இடம் இது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து யானைகள் வலசை போகும் மிக முக்கியமான பகுதியும்கூட. முதுமலை, பண்டிப்பூர் பகுதிகள் முதல் சத்தியமங்கலம், பன்னார்காடு வரையிலும் கிழக்கே தலையாறு வரையிலும் யானைகள் வலசை செல்கின்றன. யானை, வெளிமான், புலி, கழுதைப் புலி என நான்கு வகை விலங்குகளும் ஒரே பகுதியில் வசிப்பது இங்கு மட்டும்தான். அதனாலேயே இப்பகுதியில் ஒரு நிறைவான உணவுச் சங்கிலி இருக்கிறது. தென்னிந்தியாவில் ‘எருமைக் கழுகுகள்’ எனப்படும் அரிதான கழுகுகள் வாழும் கடைசி இடம் இதுதான். இந்தியாவிற்குத் தெற்கே கழுதைப் புலிகள் வசிக்கும் கடைக்கோடியும் இதுதான். ஆன்டிலோப் எனப்படும் நான்கு கொம்புகள் கொண்ட மான்களும் இங்கு வாழ்கின்றன. வெளிமான்களும் இங்கிருக்கின்றன.
சூழலியல் பார்வை தேவை…
"மலைப் பகுதியில் உள்ள காடுகளை குறிஞ்சி நிலம் என்று அழைக்கிறோம். சமவெளிக் காடுகள் முல்லை நிலம் என அறியப்படுகின்றன. தமிழகத்தில் பெரிதும் அழிக்கப்பட்டவை சமவெளிக் காடுகளே. தெங்குமரஹடா தமிழகத்தில் மீதமிருக்கும் முல்லை நிலம். அதனால், இந்தப் பகுதியைச் சூழலியல் பார்வையோடு அணுக வேண்டும். விலங்குகளின் கடைசி வாழ்விடத்தையும் அவற்றிடமிருந்து பறிப்பது துரோகம்.
ஒவ்வொரு முறையும் மோயாற்றில் வெள்ளம் வரும்போதும் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அது நிறைவேற்றப்படுவதேயில்லை.
இப்போது மோயாற்றங்கரையில் இருக்கும் கிராமவாசிகளைப் புலிகள் காப்பகச் சட்டத்தின்படி வேறு இடத்தில் வசிக்க ஏற்பாடு செய்யலாம். ஆற்றின் ஒரு பகுதி வரையில்தான் பேருந்து வசதி. அதற்கு அப்பால் பரிசலில்தான் செல்கிறார்கள். வனத்துக்குள் 22 கிலோமீட்டர் பயணமென்பது மனிதர்களுக்கு எளிதானதல்ல. அதனால், ஒருசில இடங்களையாவது முற்றிலும் வனவிலங்குகளுக்காக என விட்டுவைக்கலாமே. இதனால் வன விலங்குகள் எதிர்கொள்ளும் அழுத்தம் குறையும். சுற்றுலா என்ற பெயரில் வனம் கட்டிடமயமாவதும், காடுகள் குப்பைமயமாவதும் தடுக்கப்படும்” என்று கூறுகிறார் ‘ஓசை’ காளிதாசன்.
அனுபவப் பகிர்வு
தெங்குமரஹடாவுக்குக் கடந்த ஜூன் மாதத்தில் நண்பர்களுடன் சென்றுவந்த அபிநவ் சொல்வதைக் கேட்போம்:
“வனம் என்றால் காணுமிடமெல்லாம் பச்சைப் பசேலென இருக்கும் என நாம் கொண்ட புரிதலே அடிப்படையில் பிழையானது என்பதைப் புரியவைத்த பயணம் அது. தெங்குமரஹடா ஒரு மலைமறைவுப் பிரதேசம். வறண்ட கானகம். தெங்குமரஹடா செல்ல கோடைக்காலமே உகந்தது என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதால், நண்பர்களுடன் ஜூன் மாதம் அங்கு சென்றேன். ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வாகனத்தில் சென்றோம். பயணத்தின்போது யானை, கரடி, செந்நாய், வெளிமான் போன்ற விலங்குகளைப் பார்த்தோம். பலவகைப் பறவைகளையும் பார்க்க முடிந்தது. பல்லுயிர்ச் சூழல் நிரம்பிய அற்புதமான இடம் இது.
விலங்குகள் வலசை வரும் பகுதி என்பதால் சில நேரங்களில் இயற்கையாக விலங்குகள் இறப்பதும் அவற்றைக் கழுதைப் புலிகள், கழுகுகள் சாப்பிடுவதும் வழக்கம். புலிகள் வேட்டையாடி உண்டுவிட்டுச் செல்லும் இரையைக் கழுதைப் புலி உண்பது வனத்தின் உணவுச் சங்கிலி வலுவாக இருப்பதன் அடையாளம். இது தொடர்பான குறிப்புகளை முன்னரே கேட்டறிந்திருந்தோம். அந்த எதிர்பார்ப்புடனேயே பயணப்பட்ட எங்களுக்கு, புலியால் வேட்டையாடப்பட்ட காட்டெருமையைக் கழுதைப் புலிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த அரிய காட்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. சத்தியமங்கலம் வனக் காப்பாளரிடம் அனுமதி வாங்கிச் சென்றிருந்ததால் எங்களுடன் வன அலுவலர் ஒருவரே வழிகாட்டியாக வந்தார். அவர் சொன்ன தகவல்கள் எங்களின் கண்களின் வழி விஸ்தாரமாகி வனத்தை அதன் அசல் தன்மையுடன் அனுபவிக்கச் செய்தது.
வன அலுவலரின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றினோம். வாகனத்திலிருந்து இறங்கி செல்ஃபி எடுத்தல் போன்ற சிறுமையான செயல்களில் ஈடுபடவில்லை. எங்களின் பொறுப்புணர்வை உடன் வந்த வன அலுவலர் பாராட்டினார்.
மோயாற்றின் ஒரு கரையில் இறங்கி மறுகரைக்குப் பரிசலில் சென்றோம். முதலைகள் இருக்கும் என்பதால் குறைந்த அளவு நீர் சென்றாலும் ஆற்றை பரிசல் கொண்டே கடப்பது பாதுகாப்பானது. பரிசலை இயக்கிய பழங்குடிகள் கன்னடம் கலந்த தமிழில் அன்புடன் பேசினர். ஊரில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கோயில் திருவிழா பற்றியும் விவரித்தனர். கோயிலையும் கண்டோம்; இயற்கையெனும் தெய்வத்தையும் தரிசித்தோம்" என்றார் அபிநவ் சற்றே சிலிர்ப்புடன்.
அடுத்த வாரம் பரம்பிக்குளம் வனப் பகுதிக்குப் பயணப்படுவோம்.
(பயணம் தொடரும்...)