உலகம் சுற்றும் சினிமா - 18: ஒரு வாழ்க்கை... 12 ஆண்டுகள்... ஒரு படம்!

By க.விக்னேஷ்வரன்

காலம்தான் எவ்வளவு அசாத்தியமானது. நல்லவர்களைக் கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும், முட்டாள்களை மேதைகளாகவும், மேதமை பொருந்தியவர்களைப் பித்துக்குளிகளாகவும் மாற்றும் ஆற்றல் கொண்டது காலம். 

ஒரு வருடத்துக்கு முன்பு இருந்தததுபோல் இப்போது நாம் இருப்பதில்லை. நீரோட்டத்தில் விழும் கரடுமுரடான கல், காலப்போக்கில் நீருடன் மோதி மோதி வழவழப்பான கூழாங்கல்லாக மாறுவதுபோல், காலம் நமக்குக் கொடையளிக்கும் அனுபவங்கள் நம்மைப் பக்குவப்படுத்திவிடுகின்றன. சிறுவன் ஒருவன் தன் பால்யத்தைக் கரைத்து, பதின்ம வயதில் ஓர் ஆண்மகனாக உருமாறும் பயணமும் ஓர் அற்புதம்தான். கால ஓட்டத்தின் இந்த அற்புத நிகழ்வைக் கவித்துவமாகப் பதிவுசெய்த படம்தான் ‘பாய்ஹுட்.’

ஒரு கதாபாத்திரம் - ஒரே நடிகர்

பொதுவாக ஒரு கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்டத்தைச் சொல்ல வேண்டும் என்றால், சிறு வயதைக் காட்சிப்படுத்தக் குழந்தை நட்சத்திரம், விடலைப் பருவத்துக்கு வேறு நடிகர் என்று வெவ்வேறு நடிகர்களை வைத்துப் படம் எடுப்பார்கள். ஆனால், ‘பாய்ஹுட்’ படத்தின் இயக்குநர் ரிச்சர்ட் லின்க்லேட்டர் கையாண்ட புதுமையான முயற்சிதான் இத்திரைப்படத்துக்குத் தனித்துவமிக்கச் சிறப்பைப் பெற்றுத் தந்தது. மேசன் ஜூனியர் என்ற ஆறு வயதுச் சிறுவன், 18 வயது இளைஞனாக மாறும் வரை அவன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிப் பேசும் இப்படத்தில், மேசன் ஜூனியர் கதாபாத்திரத்தில் ஆறு வயது முதல் 18 வயது வரை நடித்தது எலார் கோல்ட்ரேன் எனும் ஒரே நடிகர்தான். அதனால்தான் இத்திரைப்படத்தைப் படமாக்க 12 வருடங்கள் தேவைப்பட்டன. ஒவ்வொரு வருடமும் நேரம் ஒதுக்கிப் படத்தின் ஒவ்வொரு பகுதியும் படமாக்கப்பட்டது.

எலார் கோல்ட்ரேன் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் இப்படத்தில் 12 ஆண்டுகளாகப் பயணித்தனர். ‘பிஃபோர் ட்ரைலஜி’ தொடர் படங்கள் (1995-2013), ‘வேக்கிங் லைஃப்’ (2001) போன்ற படங்களை இயக்கிய ரிச்சர்ட் லின்க்லேட்டர், “ஒருவேளை இடையில் நான் இறந்துவிட்டால், நீ இந்தப் படத்தை எடுத்து முடித்துவிடு” என்று மேசனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஈத்தன் ஹாக்கிடம் சொல்லிவிட்டுத்தான் இப்படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தை எப்படியும் எடுத்து முடித்துவிடுவது எனும் ஒட்டுமொத்தப் படக்குழுவின் மன உறுதிதான் இப்படத்தைச் சாத்தியமாக்கியது.

வாழ்க்கைச் சக்கரம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆறு வயதான மேசன் ஜூனியர், தன் அக்கா சமந்தா மற்றும் விவாகரத்தான தாய் ஒலிவாவுடன் வாழ்வான். வார இறுதியில் மேசனின் தந்தை வந்து அவனையும் சமந்தாவையும் வெளியில் அழைத்துச் செல்வார். குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க, தனக்கு நல்ல வேலை வேண்டும் என்று ஹாஸ்டன் நகருக்கு குழந்தைகளுடன் குடிபெயரும் ஒலிவா, அங்கே கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிப்பார். பின்னர் கல்லூரிப் பேராசிரியரை மறுமணம் செய்துகொள்வார். சில ஆண்டுகளில் அந்தப் பேராசிரியர் குடிகாரராக மாற, அவரைப் பிரிந்து மீண்டும் தனியாக வாழ ஆரம்பிக்கும் ஒலிவா, பின்னர் பேராசிரியராகப் பணிபுரிய ஆரம்பிப்பார். ராணுவத்தில் பணியாற்றிவிட்டு வந்த தன் மாணவர் ஒருவருடன் காதலில் விழும் ஒலிவா, மீண்டும் மணம் புரிந்துகொள்வார்.

இதற்கிடையே மேசனின் வாழ்வும் ஒவ்வொரு படிநிலையைக் கடந்து வளர்ந்துகொண்டே வரும். சிறுவனான மேசன் விடலைப் பருவத்தைக் கடந்து, காதலில் விழுந்து, காதல் முறிவால் பாதிக்கப்பட்டு, தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கண்டு காலத்தின் கரங்களைப் பிடித்துப் பயணிக்கும் பெரும் பயணத்தை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் ரிச்சர்ட் லின்க்லேட்டர்.

வாழ்க்கையின் ஆவணம்

இத்திரைப்படம் மேசன் எனும் ஒரு சிறுவனின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்கச் சிறுவர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியுள்ளது. அவர்களது பழக்கவழக்கங்கள், விளையாட்டுகள் என்று அனைத்தையும் காட்சி
களின் ஊடாகப் பதிவுசெய்துள்ளார் இயக்குநர். அமெரிக்கச் சமூகத்தில் விவாகரத்து எனும் விஷயம், குழந்தைகளின் வாழ்க்
கையில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பிரதானமாகப் பேசுகிறது இப்படம். தன் பிள்ளைகளுக்கு கேர்ள் ஃப்ரெண்ட் அல்லது பாய் ப்ரெண்ட் கிடைத்தால் பெற்றோர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி என்று மகளுக்குத் தந்தை அறிவுரை வழங்குகிறார். இப்படிப் படம் நெடுக அமெரிக்கர்களின் வாழ்க்கையை இந்தப் படம் இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறது.

அடிப்படையான கதாபாத்திரங்கள் மற்றும் படத்தின் முடிவை மட்டும் தீர்மானித்துக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கியதால், 12 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட புற உலக மாற்றத்தைத் திரைக்கதையில் இலகுவாகத் தன்னால் கலக்க முடிந்தது என்று ரிச்சர்ட் லின்க்லேட்டர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். உதாரணத்திற்கு, அன்றாட வாழ்க்கையில் ஃபேஸ்புக் ஏற்படுத்திய மாற்றம், ஒபாமா முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தேர்தல், 2005-ல் வெளியான ஹாரிபாட்டர் தொடரின் ‘ஹாஃப் பிளட் பிரின்ஸ்’ புத்தகம் என்று சமகால நிகழ்வுகளையும் அழகாகத் திரைக்கதையுடன் கோத்து ஒரு வரலாற்றுப் பதிவாகவே ‘பாய்ஹுட்’ படத்தை மாற்றிவிட்டார் ரிச்சர்ட்.

இதற்கு முன்னரும், ஒரு பாத்திரத்தில் ஒரே நடிகர் என்று பல ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட சினிமாக்கள், தொடர்கள் உண்டு. பிபிசி நிறுவனத்தின் ‘அப் சீரிஸ்’, 1984-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ஐந்து சீஸன்களாக வெளிவந்த சினிமா தொடரான ‘ஹெய்மட்’ படவரிசை ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால், 12 வருடப் படப்பிடிப்பை 165 நிமிடத்தில் அடக்கி முழுத் திரைப்படமாக வெளிவந்த ‘பாய்ஹுட்’, முன்மாதிரி இல்லாத அசாத்திய முயற்சி.

படத்தின் தொடக்கத்தில் வானத்தை நோக்கியபடி ஆறு வயது சிறுவனாகத் திரையில் தோன்றும் மேசன், “காற்றில் நீரைத் 
தெளித்தால் அது குளவியாக மாறிவிடும்” என்று பேசும் வசனத்துக்கும், படத்தின் இறுதியில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தவாறு, 
“காலம் நிலையானது, ‘இப்போது’ என்பது எப்போதும் இருக்கிறது” என்று பேசும் வசனத்துக்கும் உள்ள இடைவெளிதான் ‘பாய்ஹுட்’ திரைப்படம். மொத்த உலக வரலாற்றையும் நக்கலும் நையாண்டியு மாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்துக்காட்டிய படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE