போர்முனை டு தெருமுனை 14: கலவரம் தடுக்கும் அறிவியல்

By ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

வீட்டில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்கள் தற்காப்புக்கும் தாக்குதலுக்கும் பயன்படுகின்றன. கோட்டையில் ஊடுருவும் எதிரியின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்ட ‘ஆயில் தண்டனை’ வரலாறுகள் உண்டு. இந்த வரிசையில், ஒரு சமையல் பொருளைப் பயன்படுத்தி ஆயுதம் உருவாக்கினார்கள் ராணுவ விஞ்ஞானிகள். அது - மிளகாய்!

இந்திய மிளகாய்

தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மிளகாய், போர்ச்சுகீசியர்களால் 15-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமானதாக நம்பப்படுகிறது. இப்படியாக நம்மை வந்தடைந்த மிளகாய், இப்போது இந்தியாவில் ஆண்டுக்கு 23 லட்சம் டன் அளவுக்கு விளைவிக்கப்படுகிறது.

மிளகாய் காரப் பொருளாக மட்டுமில்லாமல், இயற்கை வண்ணமாகவும் உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலைவலி தைலத்திலும் மிளகாயின் கைவண்ணம் மிளிர்கிறது.

பூட் ஜோலோக்கியா

வட இந்தியாவில் வளரும் பூட் ஜோலோக்கியா (Bhut Jolokia) என்ற மிளகாய் ரகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது 2007-ல், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. மிளகாய் எதற்கு கின்னஸில்? உலகத்திலேயே காரமான மிளகாய் என்ற சாதனைக்காக!

காரத்தை அளப்பதற்கு சில அளவுகோல்கள் உள்ளன. ஷூ (Scoville Heat Unit-SHU) என்பது ஒரு அளவுகோல் (மிளகாயைக் கடித்த பிறகு கத்துபவர்களின் சத்தத்தின் அளவல்ல!). இஞ்சியின் காரம் 60,000 ஷூ, பச்சை மிளகாயின் காரம் 70,000 ஷூ. இந்த வரிசையில் பூட் ஜோலோக்கியா மிளகாயின் காரம் 8,55,000 ஷூ! அடேயப்பா!

மிளகாய் ஸ்பிரே

பூட் ஜோலோக்கியா மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓலரெசின் கேப்சிகம் (Oleoresin Capsicum) என்ற பொருளைப் பயன்படுத்தி மிளகாய் ஸ்பிரே (தமிழில் ‘தெளிப்பான்’) உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். இதைத் தெளித்தால் கடுமையான கண் எரிச்சல், தோல் எரிச்சல் ஏற்படும். இதைத் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தலாம். கேப்சி ஸ்பிரே (Capsi Spray) என்ற வணிகப் பெயரில் உலோகக் குப்பிகளில் சந்தைப்படுத்தப்படுகிறது இந்த உயிர் கொல்லாத ஆயுதம். பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் நிலவும் இன்றைய சூழலில், இது போன்ற தனிமனிதப் பாதுகாப்பு படைப்புகள் வரவேற்கத்தக்கவை. தனிமனிதப் பாதுகாப்பு மட்டுமின்றி, கும்பலைக் கலைப்பதற்கும், பணயக் கைதிகள் மீட்புக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கைகளில், மூடிய கதவின் சாவி துவாரம் வழியாக உபயோகிக்க வசதியாக, சிறிய நீண்ட குழாயுடனும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிளகாய் எறிகுண்டு

பெரிய கும்பலைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளைக் காவல் துறை பயன்படுத்தும். அது போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்த, மிளகாய் தெளிப்பானை வீச ஏதுவாக எறிகுண்டு (Grenade) வடிவில் உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். வெடிமருந்து இல்லாத இந்த இயற்கை ஆயுதம் மழையிலும் வேலை செய்யும். காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கலவரக் கும்பலைக் கலைக்க பாதுகாப்புப் படையினரால் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தண்ணீர் பீரங்கி-வருண்

கலவரக்காரர்கள் மேல் அதிக அழுத்தத்தில் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது, கலவரக் கும்பலைக் கலைக்க பயன்படுத்தப்படும் ஓர் உத்தி. இதைச் செய்ய தண்ணீர் பீரங்கி தேவை. அதையும் உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். ‘வருண்’ என்று பெயரிடப்பட்ட தண்ணீர் பீரங்கி 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ நீரைப் பீய்ச்சியடிக்கும். கலவரக்காரர்களை அடையாளம் காட்ட அழிக்க முடியாத மையையும் நீரில் கலந்து வீசலாம். தோலுக்கு எரிச்சலூட்டும் பொருளையும் கலந்து கலவரக் கும்பலைக் கலைக்கலாம். இதுவரை 80-க்கும் அதிகமான தண்ணீர் பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. புணே நகரில் உள்ள ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பொறியாளர்கள் என்ற டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் தயாரிப்பு இந்த ‘வருண்.’

பிளாஸ்டிக் தோட்டா

வன்முறையில் இறங்கும் கலவரக் கும்பலைக் கலைக்க இறுதி முயற்சியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது உண்டு. இந்த வழிமுறையில் உயிர்ச்சேதம் தவிர்க்க முடியாதது. இதனால், துப்பாக்கி - தோட்டாக்களுக்கு மாற்றாகத் தோட்டா துகள்களைப் (Pellets) பயன்படுத்தத் தொடங்கின பாதுகாப்புப் படைகள். தோட்டா துகள்களைப் பயன்படுத்த, குறைந்த அழுத்தமுள்ள பெல்லட்-துப்பாக்கிகள் தேவை. பெல்லட்-துப்பாக்கியை இயக்கும்போது நூற்றுக்கணக்கான சிறிய ஈயக் குண்டுகள் துகள்களாக வீசப்படும்.

உயிரிழப்பைக் குறைக்க, துப்பாக்கிக்கு மாற்றாக பெல்லட்-துப்பாக்கி பயன்படுத்தப்பட்டாலும், ஈயத் துகள்களால் கண் பார்வை இழந்தவர்களையும் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களையும் பற்றிய ஊடகச் செய்திகள் உண்டு. இந்தப் பின்புலத்தில் கலவரக் கும்பலைக் கலைக்க, குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் தோட்டாக்களுக்கான தேவை ஏற்பட்டது.

ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய பிளாஸ்டிக் தோட்டா இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முகிழ்த்திருக்கிறது. தோட்டா துகள்களைவிட பிளாஸ்டிக் தோட்டா 500 மடங்கு குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தும். பிளாஸ்டிக் தோட்டாவை ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகளில் வழக்கமான தோட்டாக்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும். பெல்லட்-துப்பாக்கிகள் போல் அல்லாமல், இதைப் பயன்படுத்தும்போது வழக்கமான துப்பாக்கி சுடும் சத்தம் ஏற்படும் என்பதால், கலவரக் கும்பலுக்கு மனோரீதியான பயம் தோன்றும். இந்த பயமும் கும்பலைக் கலைக்க உதவும். பிளாஸ்டிக் தோட்டாக்கள் தற்போது பாதுகாப்புப் படையிலும் சில மாநிலங்களின் காவல் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ராணுவ விஞ்ஞானிகளின் கலவரம் தடுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தேசச் சேவையாற்றி வருகின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும், சூத்திரங்களோடு நின்றுவிடாமல் பொதுமக்களின் அன்றாடங்களைச் செழுமைப்படுத்துவது சிறப்பு!

காற்று மாசு

இந்திய நகரங்களை ஆட்கொண்டிருக்கும் காற்று மாசு, இன்றைக்குத் தேசத்தின் பேசுபொருளாகியிருக்கிறது. காற்று மாசைத் தடுக்கும் முறைகள் ஊடகங்களில் விவாதப் பொருளாகியிருக்கின்றன. ராணுவத்திலும் காற்று மாசு நெருக்கடி உண்டு. ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளிலும், நிலத்தடியில் ரகசிய அறைகளிலும் தங்குவது தவிர்க்க முடியாதது. ஆயுதப் புழக்கத்தினாலும், புகையினாலும் இந்த அறைகளில் காற்று மாசு ஏற்படுவது உண்டு. இந்தப் பிரச்சினையிலிருந்து வீரர்களைக் காக்க டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் காற்றைச் சுத்தப்படுத்தும் மூலிகைத் தெளிப்பானை உருவாக்கியுள்ளனர்.

இது வேதிப்பொருள் கலக்காத 100 சதவீத மூலிகை மருந்து. அமோனியா, ஈதர் உள்ளிட்ட காற்று மாசுப் பொருட்களை இது சுத்தப்படுத்தும். நோய் பரப்பும் பாக்டீரியா, நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும். சிகரெட் புகையைக்கூட இது போக்கிவிடும். ‘ஏரோ க்ளீன்’ என்ற வணிகப் பெயரில் உருவாகியுள்ள இந்தப் படைப்பை, ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்தலாம். குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.

ஆக்சிஜன் முகமூடி

காசு கொடுத்து தூய காற்றை சுவாசிக்க ஆக்சிஜன் கடைகள் திறக்கப்பட்டதைப் பற்றிய செய்திகள் இன்றைக்கு உலவுகின்றன. ராணுவத்தில் இந்நுட்பம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காற்று மாசினால் அல்ல; அதிக உயரங்களில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். ஆகவே விமானிக்குத் தேவையான ஆக்சிஜன் கொடுக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் உருளை விமானத்தில் பொருத்தப்பட்டு, விமானியின் தலைக்கவசத்தில் இணைக்கப்பட்ட முகமூடி மூலமாக சுவாசிக்கும் வசதி இருக்கும். எல்லா போர் விமானங்களிலும் இது ஓர் அடிப்படைத் தேவை.

போர் ஹெலிகாப்டர் விமானிகளின் வசதிக்காக ராணுவ விஞ்ஞானிகள் ஒரு ஆக்சிஜன் சுவாச அமைப்பை உருவாக்கியுள்ளனர். எடை அதிகமான உலோக ஆக்சிஜன் உருளைக்குப் பதிலாக கூட்டுக்கலவையில் (Composite) உருளையை வடிவமைத்தனர். உலோக உருளையின் எடையில் ஐந்தில் ஒரு பங்கு கொண்ட இந்த அமைப்பு, தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் விமானிக்கு ஆக்சிஜன் தரும்.

போரில் பாராசூட்

ஆபத்துக் காலத்தில் விமானத்திலிருந்து பயணிகள் தப்பிக்க பாராசூட் உதவுவது நமக்குத் தெரியும். ராணுவத்திலும் பாராசூட் பெரும் பங்கு வகிக்கிறது. தாக்குதலில் ஈடுபடும் ராணுவ கமாண்டோ குழு விமானத்திலிருந்து தரையிறங்கவும், வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் போர்முனையில் தரையிறக்கவும் பாராசூட் தேவை.

ராணுவ டாங்க் வாகனத்தைக் கூட பறக்கும் விமானத்திலிருந்து கீழே தள்ளி, சேதமில்லாமல் தரையிறக்க முடியும். உண்மையாகவா?

 (பேசுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE