குழப்பத்தில் ஆழ்த்தும் க்யூ-ஆர் கோடு

By காமதேனு

உமா
uma2015scert@gmail.com

கல்வித் துறையின் தற்போதைய மாற்றங்களில் மிக முக்கியமானது, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை எல்லா நிலைகளிலும் இணைப்பது என்று சொல்லலாம்.

கற்பித்தல் சாராத பணிகளில் ஆசிரியர்களுக்கு, பல்வேறு தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகளைக் கல்வித் துறை அறிமுகம் செய்துவருகிறது. அதன் சாதக பாதகங்களைப் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துவருகிறோம்.

கற்பித்தல் - கற்றல் செயல்பாட்டில் அரசு கொண்டுவந்திருக்கும் நடைமுறைகளில் முக்கியமானது - க்யூ.ஆர் கோடு (QR CODE) செயலி பயன்பாடு. இது விரைவுத் துலங்கல் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. கடந்த வருடத்திலிருந்து, பாடப் புத்தகங்களில் இந்த க்யூ.ஆர் கோடு செயலிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதை ஆசிரியர்களால் மேம்படுத்த முடிகிறதா, நவீனத் தொழில்நுட்பமான இதைச் சரியான முறையில் கையாளும் சூழல்கள் இருக்கின்றனவா என்று பார்ப்போம்.

அது என்ன க்யூ.ஆர் கோடு?

‘இந்து தமிழ் திசை’ போன்ற நாளிதழ்களில் இந்த க்யூ.ஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள். வெளிநாட்டுத் தலைவர் இந்தியா வருகை என்ற செய்திக்குக் கீழே, ‘இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு, தரப்பட்டிருக்கும் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யுங்கள்’ என்ற குறிப்பு இருக்கும். செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால், அந்தத் தலைவர் விமானத்திலிருந்து இறங்கிவரும் காட்சி காணொலியாகத் தெரியும். மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். அதே தொழில்நுட்பம்தான்!

2018 -19-ம் கல்வியாண்டில், 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களைத் தயாரித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது தமிழக அரசு. அந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர், அப்போது கல்வித் துறைச் செயலராக இருந்த த.உதயச்சந்திரன் ஐஏஎஸ். பாடநூல்களைத் தரமாகத் தயாரிக்க பல்வேறு உத்திகளைக் கையாள முனைப்புக் காட்டிய அவர், அவற்றில் ஒன்றாகத்தான் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தினார்.

ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் பொருளடக்கத்தின் கீழும், மின்னூல் (E -Book), மதிப்பீடு (Evaluation), இணைய வளங்கள் (Digital Contents) என்று மூன்று க்யூ.ஆர் கோடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஸ்கேன் செய்து தேவையான விஷயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். முதலாவது க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தால், அந்தப் புத்தகம் மின்னூல் வடிவில் செல்போனில் சேகரமாகிவிடும். இரண்டாவது க்யூ.ஆர் கோடு, வகுப்பு தொடர்பான மதிப்பீடுகளைச் சேகரித்து வைத்திருக்கும்.

மூன்றாவதை ஸ்கேன் செய்தால், பாடம் தொடர்பான கற்றல் வளங்களுக்கு அது இட்டுச்செல்லும். இதன் மூலம், சம்பந்தப்பட்ட பாடம் தொடர்பாகப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களைத் தாண்டி மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE