பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com
மகா பெரியவாளின் திருவுருவப் படம் நம் இல்லத்து பூஜையறையிலோ அல்லது கண் பார்வை படும்படியான இடத்திலோ இருந்தால், அதை காகிதம் என்றோ, அட்டை என்றோ, கண்ணாடி என்றோ, சட்டம் என்றோ நினைத்தல் ஆகாது.
சாட்சாத் அந்த மகானே நம் இல்லத்தில் குடி கொண்டிருப்பதாக நினைக்க வேண்டும்.
உதாரணத்துக்கு ஓர் ஆலயக் கருவறையில் அம்பாள் குடி கொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அலங்கார பூஷிதையாக ஆபரணங்கள் அணிந்து கொண்டு, மடிசார் புடவை உடுத்திக் கொண்டு, மலர் மாலைகளை சூடிக்கொண்டு காணப்படுகிறாள் என்றால், எப்படி அது கல் என்று தரிசிக்கின்றவர்கள் மனதில் தோன்றும்?
கருவறையில் இருக்கிற விக்கிர கத்தைக் கல் என்று நினைத்து வணங்கினால், அது பக்தியாகுமா? ஒருவேளை கல் என்று நினைத்து வணங்கினால், பக்தனுக்கு அது கல்லாகவே தோன்றும். அதற்குள் உறைந்திருக்கிற தெய்வம் அவன் கண்களுக்குத் தோன்றாது.
கல்லுக்குள் தெய்வம் குடி கொண்டிருக்கிறது.
பார்க்கின்ற நம் ஊனக் கண்களுக்கு கல் தெரிகிறது. ஆனால், மனக் கண் கொண்டு பார்த்தால் தெய்வம் துலங்கும்.
விக்கிரகம் வடிக்கிற சிற்பியைப் பற்றி யோசியுங் கள். ஒரு சிற்பியின் கண்களுக்கு அதற்குள் குடி கொண்டிருக்கிற தெய்வம் தெரிகிறது. எனவே, மிகுந்த ஆசாரத்துடன் அந்தக் கல்லில் இருக்கின்ற தேவை இல்லாத பகுதிகளைக் கழிக்கிறார். எல்லாம் முடிந்த பின் அழகான தெய்வத் திருமேனி கண்களுக்குப் பிரகாசமாகத் தென்படுகிறதல்லவா? வடிக்கப்பட்ட அந்தத் திருமேனிக்குத்தான் பூர்வாங்க பூஜை நடத்தி, எல்லா வாசமும் (ஜல வாசம், தான்ய வாசம், தன வாசம்) மேற்கொள்கிறோம்.
ஆலயத்துக்குச் செல்லும்போது ஏனோதானோ என்று கடமைக்காக தெய்வத்தைத் தரிசிக்கக் கூடாது. சாட்சாத் தெய்வமே நமக்காக இங்கு குடி கொண்டு அருளுகிறது என்று மனம் நெகிழ்ந்து, பரவசத்துடன் வணங்க வேண்டும்.
அப்படித் தரிசித்தால்தான், தெய்வங்களுடன் பேச முடியும். பார்ப்பதற்கும், பிரார்த்திப்பதற்கும் மட்டும் தெய்வம் அல்ல. மனம் விட்டுப் பல விஷயங்கள் பேச வேண்டும். ஒரு பக்தன் தன் கேள்விகளுக்கு தெய்வங்களிடம் இருந்து பதில்களைப் பெற முடியும்.
காளஹஸ்தி வனத்துள் காளத்தியப்பரை முதன் முதலாக கண்ணப்ப நாயனார் பார்த்தபோது அந்தத் திருமேனியிடம் தன்னைப் பறி கொடுத்தார். ‘தெய்வத்துக்கு இந்த வனத்தில் வன விலங்கு களால் அச்சுறுத்தல் இருக்கும்’ என்று பயந்து விடிய விடிய பாது காவல் இருந்தார். இத்தகைய பக்தி இருந்ததால்தான், கண்ணப் பரை காளத்தியப்பர் சோதித்தார். இறுதியில் ஆட்கொண்டு முக்தி யையும் அருளினார்.
தெய்வத்திடம் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்துதான் அவையும் நமக்கு அருளும். அதுபோல்தான் மகா பெரியவா பக்தி யும். அந்த மகானிடம் நாம் எப்படி இருக்கிறோமோ, அதுபோல்தான் அவரும் நம்மிடம் இருப்பார். பேசுவார்!
சிற்பங்கள் கல்லாலும், உலோகத்தாலும் செய்யப் படுவதில்லை. சாட்சாத் அந்தத் தெய்வமே அதனுள் உறைகிறது என்பதற்கு ஓர் உதாரணம்தான் உலக அதிசயமாக விளங்கும் கோனேரிராஜபுரம் அருள்மிகு நடராஜர் திருவிக்கிரகம். பஞ்சலோகத் திருமேனி!
கும்பகோணத்துக்கு அருகே அமைந்துள்ளது கோனேரிராஜபுரம். இங்குள்ள நடராஜர் சுமார் ஒன்பதடி உயரத் திருமேனி. அதற்கு ஏற்றாற்போன்ற உயரத்தில் காணப்படுகிறார் சிவகாமி அம்மையார்.
வலக் காலை ஊன்றி இடக் காலைத் தூக்கியபடி விரிசடையுடனும் நான்கு திருக்கரங்களுடனும் தரி சனம் தருகிற இந்த நடராஜர், அற்புதமான பேரழகு!
ஈசனும் உமையும் விக்கிரக வடிவத்தில் சுயம்புவாக அமைந்த காரணத்தால் நடராஜர் திருமேனியில் தென்படுகிற பல விஷயங்கள் தரிசிப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
நெடிய புருவம். இடக் கையின் கீழ்ப் பகுதியில் ஒரு மச்சம். திருமார்பில் ஒரு மரு. அந்த மருவில் ஒரு முடி. அக்குளில் தேமல் அடையாளம்.
கைவிரல்களில் ரேகைகள். விரல்களில் நகங்கள். விக்கிரகத்தின் கைப்பகுதியை மெள்ளத் தடவிப் பார்த் தால் மனிதர்களுக்கு இருப்பதைப் போன்ற ரோமங்கள் இருப்பது போல் உணர முடியும்.
சற்றுத் தொலைவில் இருந்து இந்த நடராஜரைப் பார்த்தால் ஐம்பது வயது நிரம்பிய தோற்றத்தோடும், அருகில் சென்று பார்த்தால் முப்பது வயது நிரம்பிய இளைஞர் தோற்றத்தோடும் காணப்படுவது அதிசயத் திலும் அதிசயம்!
எல்லாவற்றுக்கும் காரணம் மனம். அதனால்தான் மனதை விசாலமாகத் திறந்து வைத்துக்கொண்டு தெய்வங்களைத் தரிசிக்க வேண்டும்.
இது மகா பெரியவா பக்திக்கும் பொருந்தும். அவரது ‘பாக்கெட் சைஸ்’ படத்தை வைத்துக் கொண்டு நித்தமும் அந்த மகானது அருளாசியுடன் நாட்களை நல்விதமாகக் கடத்துகிறவர்கள் அதிகம் உண்டு. காலையில் கண் விழித்தவுடன் அவரது திருமுக தரிசனம் கண்டு அதன் பிறகே மற்ற காரியங்களைத் தொடங்குவர்.
‘மகா பெரியவா விக்கிரகம் எத்தனை அழகாக இருக்கிறது’ என்று சொல்லக் கூடாது. ‘மகா பெரியவா எத்தனை அழகாகக் காணப்படுகிறார்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆத்மார்த்தமான பக்தர்கள் மகா பெரியவா விக்கிரகம் என்றோ மகா பெரியவா படம் என்றோ சொல்லமாட்டார்கள். விக்கிரகம், படம் என்று சொன்னால் அவர்களுக்குக் கோபம் வந்துவிடும். ‘மகா பெரியவா’ என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்றும் நம்முடனே இருப்பார் என்பதுதான் அவர்களது நம்பிக்கை.
நம்பிக்கை மட்டுமல்ல. மகானே இதைப் பலமுறை தன் பக்தர்களுக்கு நிரூபித்திருக்கிறார்!
தான் வாழ்ந்து வந்தபோது பக்தர் ஒருவருக்கு பெரியவா இதை நிரூபித்த நிகழ்வை இப்போது பார்க்கலாம்…
சென்னை எழும்பூரில் ஒரு அன்பர் வாழ்ந்து வந்தார். பெயர் வெங்கட்ராம ஐயர். ரயில்வேயில் பணி. மகா பெரியவாளின் பக்தர். சாதாரண பக்தர் இல்லை. ஆத்மார்த்தமான பக்தி கொண்டவர்.
மகா பெரியவாளை ஒரு மகானாக மட்டும் பார்க்க மாட்டார். சாட்சாத் சந்திரமௌளீஸ்வரராகவே பாவித்தார்.
தன் எதிரில் அமர்ந்து தரிசனம் தருகிறவர் மகா பெரியவா இல்லை. பிரபஞ்சத்தையே கட்டி ஆளுகிற சாட்சாத் சர்வேஸ்வரன் என்கிற எண்ணம் மனதில் குடிகொள்ள வேண்டுமானால், எந்த அளவுக்கு பக்தி இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட கண்மூடித்தனமான பக்தி வெங்கட்ராம ஐயருக்கு.
ஒவ்வொரு பிரதோஷ தினத்தின்போதும் மகா பெரியவாளை நேரில் போய் தரிசிப்பார். பிரதோஷ தினம் சிவபெருமானுக்கு உகந்தது அல்லவா? எனவேதான், நடமாடும் தெய்வத்தைத் தேடிப் போய் பிரதோஷ தரிசனம் பெறுவார்.
அன்றைய தினம் பாரத தேசத்தின் எந்த மூலையில், எந்தக் குக்கிராமத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தாலும் தேடிப் போய்த் தரிசிப்பார். பிரதோஷ தினம் வந்துவிட்டாலே, ‘இன்னும் அவன் வரலியா?’ என்று வெங்கட்ராம ஐயரைப் பற்றி சிப்பந்திகளிடம் பெரியவா விசாரிப்பாராம். இதனால் அவர் ‘பிரதோஷம் மாமா’, ‘பிரதோஷம் வெங்கட்ராமய்யர்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
மகா பெரியவாளின் ஜன்ம நட்சத்திரம் அனுஷம். வைகாசி அனுஷம் அவரது ஜயந்தி மஹோத்ஸவம். மகான் வாழ்கின்றபோதே அவரது பிரத்யேக அனுமதியின் பேரில் ‘ஜயந்தி உத்ஸவ’த்தைக் கொண்டாடியவர் பிரதோஷம் மாமா! பெரியவா பக்தர்கள் எவருக்கும் கிடைக்காத பெரும் பேறு இது.
சென்னை எழும்பூரில் பிரதோஷம் மாமா வசித்தபோது மாதா மாதம் அனுஷத்தை சிறப்பாகக் கொண்டாடுவார். வைகாசி அனுஷத்தை இன்னும் கோலாகலமாகக் கொண்டாடுவார். ஹோமம், வாத்திய கோஷம், தேவாரம், வேதம், அன்னதானம் என்று எழும்பூரே திமிலோகப்படும். இந்த அளவுக்கு சிறப்பாக நடத்தினார் என்றால், அது மகா பெரியவாளின் பரிபூரண ஆசியே!
ஒருமுறை மகானின் வைகாசி அனுஷ உத்ஸவம். அதாவது, அவரது அவதார நாள் திருவிழா!
எழும்பூரில் ஹோமம், அன்னதானம் எல்லாம் விமரிசையாக நடந்து முடிந்தது. அன்றைய தினம் மாலை மகா பெரியவா திருவுருவப் படத்துக்கு அற்புதமாக அலங்காரம் செய்து, மாலைகள் அணிவித்தார்கள். அந்தப் படத்தோடு வாத்திய கோஷம் முழங்க எழும்பூரில் ஊர்வலம் துவங்கியது.
‘ஜய ஜய சங்கர.. ஹர ஹர சங்கர’ கோஷம் விண்ணைப் பிளந்தது. நாகஸ்வரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் என்று பக்தி மயமாக ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.
ஊர்வலம் புரசைவாக்கத்துக்குள் நுழைந்தது.
அப்போது, மகா பெரியவா திருவுருவப் படம் ஊர்வல மாகச் செல்கிற பாதையில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தெரு முழுக்கக் கொடிகள், மின்விளக்கு அலங்காரங்கள்.
அது தேர்தல் நேரம் வேறு. இங்கு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த கட்சியின் கொள்கையே நாத்திக வாதம் தான்! முக்கியப் பேச்சாளர் ஒருவர் மேடையில் மைக்கைப் பிடித்துக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
‘இதென்னடா சோதனை... இந்த வழியாகத்தானே ஊர்வலம் போக வேண்டும்’ என்று பக்தகோடிகளுக்கு கவலை.
ஆனால், அடுத்து நடந்தது என்ன?
(ஆனந்தம் தொடரும்...)