போர்முனை டு தெருமுனை - 13: லேசர் அலைபாயுதே கண்ணா!

By ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

வெடிபொருள் நிபுணர் வெடிபொருளுக்கு மிக அருகில் சென்று தனது கைகளால் செயலாற்றுவதால்தான் ஆபத்து மிக அதிகம். தொடாமலேயே தூரத்திலிருந்து ஒரு வெடிபொருளைச் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்குப் பயன்படுத்தப்படுவது லேசர் கதிர்கள்.
லேசர் கதிர்கள் என்றாலே மனிதர்களுக்குப் பேராபத்து என்ற பொதுப் புத்தியிலிருந்த கருத்து மாறி, லேசர் சுட்டி (Pointer) தொடங்கி… குறுந்தகட்டில் தகவல்களைப் பதிய, அலுவலகத்தில் ஆவணங்களை அச்சடிக்க, கிரிக்கெட் போட்டியில் பந்தின் வேகத்தை அளக்க என லேசரைப் பலவிதங்களில் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு அடுத்த தளத்தில் கண் புரை அறுவைசிகிச்சை தொடங்கி, எதிரி தேசத்தின் நிலைகள் மீதான போர் விமானத் துல்லியத் தாக்குதல் வரை லேசர் கதிர்களின் பயன்பாட்டு அலைவரிசை பரந்துபட்டிருக்கிறது.



லேஸ்டெக், புது டெல்லி

லேசர் கதிர்களின் ராணுவப் பயன்பாடு தொடர்பான ஆய்வுகளுக்காகவே உருவாக்கப்பட்ட டி.ஆர்.டி.ஓ ஆய்வுக்கூடம், டெல்லியில் உள்ள ‘லேசர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்’ (Laser Sciences and Technology Center-LASTEC). இந்நிறுவனத்தின் ராணுவ விஞ்ஞானிகள் லேசர் தொழில்நுட்பத்தில் பல கருவிகளை உருவாக்கி ராணுவ வீரர்களின் பணியைச் செறிவாக்குகின்றனர்.

வெடிபொருள் செயலிழப்பு

சிறுவயதில் பூதக் கண்ணாடியில் சூரியக்கதிர்களைக் குவித்துக் காகிதத்தை எரித்திருப்போம். சூரியக்கதிர்களை அதிக தூரத்தில் குவிக்க பெரிய பூதக்கண்ணாடி தேவைப்படும். அப்படிப்பட்ட சிக்கல்கள் இல்லாமல் லேசர் கதிர்களைக் குவிக்கலாம்.
ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய ‘லார்ட்ஸ்’ (Laser Ordnance Disposal System-LORDS) லேசர் அலைகளைக் கொண்டு பாதுகாப்பான தூரத்திலிருந்து வெடிபொருளை வெப்பமேற்றி எரிவிக்கும். இப்படி எரியச்செய்வது என்பது வெடிக்கச்செய்வதைவிட மிகக் குறைந்த அளவு பாதிப்பையே தரும். ஏறக்குறைய 250 மீட்டர் தூரத்திலிருந்து 13 வகையான வெடிபொருட்களை இதன் மூலம் செயலிழக்கச் செய்யலாம். எடுத்துச் செல்ல வசதியாக லார்ட்ஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாகனத்தின் இருக்கையிலிருந்தபடியே, கேமரா மூலம் வெடிபொருளின் இருப்பிடத்தைக் காட்சிப்படுத்தி, லேசர் கற்றையின் மூலம் இலக்கைத் துல்லியமாக அடையாளப்படுத்தி, அதிக சக்தி கொண்ட லேசர் கற்றையைச் செலுத்தி வெடிபொருளைச் செயலிழக்கச்செய்யலாம். ஒரு கிலோவாட் சக்தி கொண்ட லேசர் இதில் பயன்படுத்தப்படுகிறது.

வாகனம் செல்ல முடியாத மலை அல்லது காட்டுப் பகுதியில் என்ன செய்வது? மனிதர்கள் சுமந்து செல்லக்கூடிய லேசர் கருவிகள் உண்டு. லார்ட்ஸ்-400 என்ற வெடிபொருள் அழிப்புக் கருவி, மூன்று கைப்பெட்டிகளில் அடங்கும். இரண்டு மூன்று பேர் இதைச் சுமந்து சென்று பயன்படுத்தலாம். 400 வாட்ஸ் லேசர் பயன்படுத்தப்படுவதால் இதற்கு ‘லார்ட்ஸ்-400’ என்று பெயர். லேசர் கற்றைகள் மூலம் செயலிழக்கப்பட்ட வெடிகுண்டு மற்றும் கைப்பெட்டி வெடிகுண்டுகளைப் படத்தில் காண்க.

லார்ட்ஸ் கருவிகள் ராணுவத்தில் மட்டுமன்றி மிதச் செறிவு சச்சரவுகளிலும் (Low Intensity Conflicts) காவல் துறையினராலும் பயன்படுத்தப் பட்டுப் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.



கலவரமும் லேசரும்

கலவரத்தில் ஈடுபடும் கும்பலைக் கலைக்க காவல் துறை பல முறைகளைக் கையாளும். ஒலிபெருக்கி எச்சரிக்கை, கண்ணீர்ப் புகை, நீர் பீரங்கி, தடியடி எனப் பல வழிகள் உண்டு. லேசர் அலைகளைக் கொண்டும் கலவரக் கும்பலைக் கலைக்கலாம். எப்படி?

லேசர் கற்றைகளைச் செலுத்தி கண்களைக் கூசச்செய்வதின் மூலமாகவும், தற்காலிகப் பார்வையிழப்பை ஏற்படுத்துவதின் வழியாகக் கலவரக் கும்பலைக் கலைக்கலாம். ராணுவ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள லேசர் கண்கூசி (Laser Dazzler) கருவி, பல வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கி வடிவத்திலும், சிறிய ரக மற்றும் கனரக வாகனங்களில் பொருத்தப்பட்ட வகைகளிலும் உண்டு.

இதைக் கொண்டு 10 மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபடியே கூட்டத்தைக் கலைக்கலாம். பகலிலும் இரவிலும் இதைப் பயன்படுத்தலாம். இதனால் உயிரிழப்பு இன்றி கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். முதலில் எச்சரிக்கும் விதமாகக் குறைந்த சக்தி கொண்ட லேசர் கற்றையை வீசும் இக்கருவி, கும்பல் தொடர்ந்து முன்னேறினால் அதிக சக்தி கொண்ட லேசர் கற்றையை வீசி தற்காலிகப் பார்வையிழப்பைச் சில வினாடிகள் ஏற்படுத்தி, கூட்டத்தினரைத் திகைக்க வைக்கும்.



லேசர் வேலி

வேலிகாத்தான் முள் தொடங்கி, மின்சாரம் பாய்ச்சப்பட்ட மதில் சுவர்கள் வரை வளர்ந்திருக்கின்றன வேலிகள். இதில் இன்னொரு தொழில்நுட்பப் பாய்ச்சலாகக் கண்ணுக்குத் தெரியாத வேலியும் இந்தியாவில் உண்டு. ஆம், கண்ணுக்குத் தெரியாத லேசர் வேலிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள்.

ஒரு முனையில் லேசர் அலை செலுத்தப்பட்டு மறுமுனையில் லேசர் அலைஉள்வாங்கப்படும். இந்த இரண்டு எல்லைப் புள்ளிகளுக்கு இடையில், மனிதர்களோ விலங்குகளோ வாகனமோ நுழைந்தால் உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஊடுருவிய உருவமும் அதன் இடமும் திரையில் தெரியும்.

ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய லேசர் வேலி, இந்திய ராணுவத்தின் வடக்குப் பிராந்தியத்தில் பயன்படுத்தப்பட்டு தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுத்துவருகிறது. லேசர் வேலியிலிருந்து லேசர் திரையையும் எச்சரிக்கை மணியையும் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கலாம். இதனால், எல்லைக்கோட்டிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு வீரர்கள் காவல் பணியைச் செய்ய முடியும். ஆற்றின் குறுக்கேயும் லேசர் வேலியை அமைக்கலாம். எல்லையில் ராணுவம் மட்டுமல்ல, நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் துணை ராணுவப் படைகளும் லேசர் வேலியைப் பயன்படுத்திவருகின்றன. மின் கலனில் இயங்குவதால் மின்சாரம் தடைபட்டாலும் இந்த வேலி இயங்கும்.

லேசர் வேலி, பார்வைக்கோடு (Line of sight) என்ற நேர்க்கோட்டுத் தத்துவத்தில் இயங்குவதால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் குறுக்கிடும் இடங்களில் சில சிக்கல்கள் உண்டு. லேசர் அலைகளைத் தம் சித்தம் போல் வளைத்துக் கருவிகள் செய்து தேசத்து குடிமக்களின் வாழ்வைப் பாதுகாக்கும் நமது ராணுவ விஞ்ஞானிகளுக்கு, மானசீகமாய் வாழ்த்து அலைகள் பாயட்டும்.

உக்சார் எந்திரன் சூட்கேஸ் வெடிகுண்டைவிட பெரிய வெடிகுண்டுகளை எப்படிக் கையாள்வது? அதிக சக்தியுள்ள வெடிகுண்டுகள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. வீசப்பட்ட வெடிக்காத ஏவுகணைகளையும் அதிக எடையுள்ள வெடிகுண்டுகளையும் கையாள ராணுவ விஞ்ஞானிகள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர். மண் அள்ளும் இயந்திரம் போன்ற இந்த ரோபோவை 1 கிலோமீட்டர் தூரத்திலிருந்து தொடர்ந்து 6 மணி நேரம் இயக்கலாம். ஏறக்குறைய 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டைக்கூட இது குறைந்த சக்தியில் வெடிக்க வைத்துச் செயலிழக்கச் செய்யும். வெடிகுண்டுகளை வெட்டிப்பிரித்துச் செயலிழக்கச்செய்யும் வசதியும் இதில் உண்டு.

1,000 கிலோ வெடிமருந்து வெடித்தால் என்னாவது? உக்சார் (Unexploded Ordnance Handling Robot - UXOR) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த எந்திரன் எத்தனை ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றுகிறான்! எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கு இந்த ரோபோ இரண்டாவது பாதுகாப்பு வளையம். முதல் பாதுகாப்பு வளையம்? சந்தேகமில்லாமல் நமது ஏவுகணைகள்தான். எதிரி ஏவுகணைகளை வானத்திலேயே அவை அழிக்கும்.

சமைலறை ஆயுதம்

முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழச்சியைப் பற்றி நாம் படித்திருக்கிறோம். வீட்டில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்கள் தற்காப்புக்கும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிடிபடாமலிருக்க திருடர்கள் உடலில் எண்ணெய் பூசி வந்த கதைகளை நாமறிவோம். கோட்டையில் ஊடுருவும் எதிரியின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்ட வரலாறுகள் உண்டு. இதற்காகக் கோட்டைகளில் மேலிருந்து எண்ணெய் ஊற்ற தோதான கட்டுமான வசதிகள் செய்யப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

வீட்டின் சமையலறை ஒரு படைக்கூடம்தான். கூரிய ஆயுதங்களும் நெருப்பும் களமாடும் இடம் அது. விஞ்ஞான சமையல் சாதம் செய்த விஞ்ஞானிகள், ஒரு சமையல் பொருளைப் பயன்படுத்தியும் ஆயுதம் தயாரித்திருக்கிறார்கள். என்ன அது?

(பேசுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE