டெல்லி ஒரு பாடமாக இருக்கட்டும்!

By காமதேனு

தலைநகர் டெல்லியை மூச்சுத் திணற வைத்துக்கொண்டிருக்கும் காற்று மாசு போலவே, சென்னையிலும் நிலைமை கைமீறிப் போய்விடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்திருக்கிறது. பொதுச் சுகாதார நெருக்கடி நிலையை டெல்லி அரசு அறிவிக்கும் அளவுக்கு அந்நகரில் பரவியிருக்கும் புகைமண்டலம், அங்கிருந்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் பரவக்கூடும் என்ற தகவல் அச்சத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஆனால், டெல்லியின் காற்று மாசுக்கும் சென்னைக்கும் தொடர்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்திருக்கிறது. சென்னையில், கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட புகை கலந்த பனிமூட்டம்தான் இப்படியான பதற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது. எனினும் இந்தச் சூழல் வெப்பநிலை அதிகரித்ததும் மாறிவிடும் என்று வானிலை நிலைய அதிகாரிகள் உறுதிகூறுகிறார்கள்.
சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசு கடுமையாக இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே கூறியிருக்கிறது. பொதுவாகக் காற்றின் தரக் குறியீட்டு எண், 200-300 என்ற அளவில் இருப்பது மிக மோசமான நிலை என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் வரையறுத்திருக்கிறார்கள். இந்நிலையில். விரைவில் அந்த நிலை சென்னைக்கு ஏற்படலாம் என்று வெளியாகியிருக்கும் தகவல் பீதியை ஏற்படுத்துகிறது.

ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில், காய்ந்த பயிர்களை எரிப்பதும் டெல்லி காற்று மாசுக்கு ஒரு காரணம். ‘அப்படியான நிலை இங்கு இல்லை’ என்று தமிழக அரசு சமாதானம் சொல்கிறது. ஆனால், அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை போன்றவற்றால் சென்னை போன்ற நகரங்களும் பாதிப்பைச் சந்திக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில், ஆபத்து தலைக்கு ஏறும் வரை தமிழக அரசு காத்திருக்கக் கூடாது. சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் இந்த அபாயத்திலிருந்து தப்பும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE