என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
சீன அதிபருடனான சந்திப்புக்காகச் சமீபத்தில் மாமல்லபுரம் வந்திருந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியது உலக அளவில் ட்ரெண்டானது. பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டும் வகையில் அடையாள நிமித்தமாகப் பிரதமர் அதைச் செய்துகாட்டியிருந்தார். அதையே குமரி மாவட்டத்தின், சங்குத்துறை கடற்கரையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாடப் பணியாகச் செய்துவருகிறார் கருணாகரன்.
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான கருணாகரனுக்கு இப்போது 82 வயது. கடல் மாதா மீது எல்லையற்ற அன்பு கொண்டவர். அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் ஆண்ட்ரூஸின் அழைப்பின் பேரில், 10 நாட்கள் அங்கு சென்றிருந்த கருணாகரன், ஊருக்கு
வந்ததும் வராததுமாய் சங்குத்துறை கடற்கரையைச் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டார். குமரி அருகே புதிய காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகியிருப்பதாக வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையைக்கூட பொருட்படுத்தாமல் கடற்கரை தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவரைச் சந்தித்தேன்.
“பத்து நாளுல எவ்ளோ கழிவு சேர்ந்துடுச்சு பார்த்தீங்களா தம்பி… கடல் மாதா தாங்குவாளா?” என்றபடியே பேசத் தொடங்குகிறார்.
“கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை கிராமம்தான் எனக்குப் பூர்விகம். பொட்டல் அரசு தொடக்கப் பள்ளியில ஆசிரியர் பணியைத் தொடங்கினேன். 1996-ல ஓய்வுபெற்றேன். கடலோடி சமூகத்துல பிறந்ததால, இயல்பிலேயே கடலன்னை மேல எனக்குப் பாசம் அதிகம். இந்த உலகத்துலயே வஞ்சிக்காம ஏழைக்கு அள்ளிக் கொடுக்குறது கடலன்னை மட்டும்தான். இங்கே, உழைப்புங்கிற மூலதனத்தை மட்டும் செலுத்துனா போதும். நிச்சயம் பொழச்சிக்கலாம்.