கரு.முத்து
muthu.k@kamadenu.in
மாலை ஆறு மணி. திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரில் இருக்கும் அந்தக் குறுகலான தெருவில், தோளில் புத்தகப் பை சுமந்து ஒவ்வொருவராக வரத்தொடங்குகிறார்கள் சின்னஞ்சிறு மாணவர்கள். 12 அடி அகலமே கொண்ட அந்தத் தெருவைத் தெருவென்று அழைக்க முடியாது. இருபுறமும் அட்டைப் பெட்டிகள் போல சின்னஞ்சிறு வீடுகளைக் கொண்ட நெருக்கமான சந்து அது. இரண்டு பக்கமும் திறந்த நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது சாக்கடை. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் மூங்கில் கூடைகள், குப்பைக் கூடைகள்.
ஒரு வீட்டு வாசலில் டியூப் லைட் ஒளிர்கிறது. அதன் முன்பாக மாணவர்கள் மூன்று மூன்று பேராக வரிசையாக அமரத் தொடங்குகிறார்கள். கிட்டத்தட்ட 25 வரிசை நீள்கிறது. இருள் அதிகரிக்கத் தொடங்கியதும், டியூப் லைட் வெளிச்சம் போதவில்லை. தெருவிளக்கின் வெளிச்சம்தான் கைகொடுக்கிறது. ஒருபுறம் குழந்தைகள் அமர்ந்திருக்க, இன்னொரு புறம் வாகனங்கள் வருவதும் போவதுமாய் இருக்கின்றன. பிஞ்சுகளின் படிப்புக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மெதுவாகச் செல்கிறார்கள். சிலர் இறங்கிச் செல்கிறார்கள். ஒலிப்பான்கள் ஒலிப்பதில்லை.
ஏழைக் குழந்தைகள்