முதுமை எனும் பூங்காற்று 6: ஊர்ப் பாசமும் பிள்ளைகளின் கவலையும்... 

By விவேக பாரதி

பணி நிமித்தமாகப் பல்வேறு நகரங்களில் பணிபுரிந்து, பல அனுபவங்களைப் பெற்றிருக்கும் மனிதர்களின் மனதில் சொந்த ஊர் மீதான பிரியத்தை மட்டும் பிரித்தெடுக்கவே முடியாது. சொந்த மண், உறவுகள், பால்ய நண்பர்கள் என அவர்களது மனதில் தங்கியிருக்கும் மலரும் நினைவுகளுக்கு என்றைக்குமே வீச்சு அதிகம். பெரும்பாலானோர் பணிநிறைவுக்குப் பின்னர், வாழ விரும்புவது அவரவர் சொந்த ஊரில்தான்!
தங்கள் இறுதி நாட்களைச் சொந்த வீட்டிலேயே கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பலர் இருப்பார்கள். சொந்த வீட்டைவிட்டுப் பிரிய வேண்டியிருக்குமே என்று, வெளியூர்களில் / வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுடன் வந்து தங்கவும் தயங்குவார்கள். இந்த எண்ணம் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மனஸ்தாபத்தை ஏற்படுத்துவதும் உண்டு. பெற்றோர் ஓய்வு காலத்தைத் தங்களுடன் கழிக்க வேண்டும் என்று விரும்பும் பிள்ளைகள், பெற்றோர் காட்டும் பிடிவாதத்தைக் கண்டு அதிருப்தி கொள்கிறார்கள். ஆனால், சொந்த வீட்டுடனான பெற்றோரின் பந்தத்தின் பின்னால் இருக்கும் அம்சங்களைப் பார்க்க பிள்ளைகள் தவறிவிடுகிறார்கள்.

சொந்த வீட்டின் மகிமை

இன்றைய தலைமுறையினரில் பலர், 20 சொச்சம் வயதுகளிலேயே கைநிறைய சம்பளம் வாங்குவதால், திருமணத்திற்கு முன்னரே வீடு வாங்கிவிடுகிறார்கள். வயது, சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கியில் கடனுதவியும் கிடைத்துவிடுகிறது. ஆனால், முந்தைய தலைமுறையினரைப் பொறுத்தவரை, 45 வயதிற்கு மேல்தான் சொந்த வீடு பற்றிய எண்ணமே அவர்களுக்கு வரும்.
அப்போது பெரும்பாலான வீடுகளில் பெண் பிள்ளைகள் திருமண வயதை நெருங்கிக் கொண்டிருப்பார்கள். ‘வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பார்’ எனும் பழமொழி இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக இருக்கும் நிலையில், முந்தைய தலைமுறையினர் எந்த அளவுக்குச் சிரமங்களை அனுபவித்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.

வில்லாக்கள், ஃப்ளாட்டுகள் என்று விதவிதமான வீடுகளை, விரல் நுனியில் இணையதளம் மூலமாக வாங்கிவிடுகிறார்கள் இன்றைய தலைமுறையினர். வில்லங்கச் சான்றிதழைக்கூட இணையத்தின் மூலம் வாங்கிவிடும் வசதிகள் இன்றைக்கு வந்துவிட்டன. எனவே, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடுகிறார்கள். வருமான வரி கணக்கு காட்ட வீடு வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், முந்தைய தலைமுறையினர் ‘பார்த்துப் பார்த்து’ வீடு கட்டிய பாக்யவான்கள். நம்பகமான கட்டிட மேஸ்திரிக்கான தேடல் முதல், ஒவ்வொன்றுக்கும் தானே சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் வாங்கி, வீடு கட்டியவர்கள். பல கடைகள் ஏறி இறங்கி ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என பேரம் பேசிப் பொருட்களை வாங்கி, வேலை செய்பவர்களுக்குக் கூலி கொடுத்து வீட்டை உருவாக்கியவர்கள். சித்தாள், கொத்தனாருடன் சேர்ந்து தாங்களும் சேர்ந்து உழைத்துத்தான் அவர்களின் சொந்த வீடு கனவு, நனவாகி இருக்கும். எனவே, சொந்த வீட்டைவிட்டுப் பிரிய மனமில்லாத பெரியவர்களின் தரப்பைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

பரஸ்பர கவலைகள்

அதேபோல், கடும் பணிச்சுமை, போதிய விடுப்பு கிடைக்காதது, அடிக்கடி ஊருக்கு வந்தால் ஏற்படும் செலவுகள் என்று பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் தரப்பைப் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். சொந்த ஊரில் இருக்கும் பெற்றோரின் உடல்நலன், பாதுகாப்பு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து பிள்ளைகள் எப்போதும் கவலையுடனேயே இருப்பார்கள். ஒரு நாள் பெற்றோரிடமிருந்து அழைப்பு வரவில்லையென்றால் கூட பதறிவிடும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஒரு வயதான தம்பதியினர். அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூவரையும் நன்கு படிக்கவைத்து ஆளாக்கிவிட்டார்கள். பிள்ளைகள் வெவ்வேறு நகரங்களில் வசிக்கிறார்கள். மூவருக்கும் தங்கள் பெற்றோரைத் தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், சொந்த ஊரைவிட்டு வர மறுத்து சொந்த வீட்டிலேயே வசிக்கிறார்கள் அந்தப் பெற்றோர். வழுக்கி விழுந்து படுத்த படுக்கையான மனைவியை, தானே பார்த்துக்கொள்கிறார் தந்தை. “நகரங்களில் அருகிலேயே மருத்துவமனைகள் இருக்கும், எந்தச் சூழ்நிலையிலும் உடனே காண்பிக்க முடியும். துணைக்குப் பிள்ளைகள் இருக்கிறோம்” என்று எவ்வளவு கூறியும் பிள்ளைகள் வீடுகளுக்குச் சென்று தங்க பிடிவாதமாக மறுத்துவிட்டார் தந்தை. இதுபோன்ற சமயங்களில், பிள்ளைகள் படும் வேதனை சொல்லி மாளாது.

அதேபோல், தமது பிள்ளை வசிக்கும் ஊரில் இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் சமயங்களில், பெற்றோர் பதற்றத்துடன் உடனடியாக போன் செய்து விசாரிக்கிறார்கள். இப்படி பிள்ளைகள் ஓரிடத்திலும் பெற்றோர்கள் ஓரிடத்திலும் இருப்பதால் இருவருக்குமே ஒருவித பயம், கலக்கம் ஏற்படுவது இயற்கைதான்.

சமைத்துத் தரக்கூட ஆள் இல்லாமல், அருகில் கிடைக்கும் கடைகளில் உள்ள உணவுகளைச் சாப்பிட்டு, அதனால் வரும் உடல் உபாதைகளையும் தாங்கிக்கொண்டு பிறந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் காட்டும் பெரியவர்கள் ஒருபுறம். பெற்ற பிள்ளைகள் தங்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்று கண்ணீருடன் காவல் நிலையப் படியேறும் பெரியவர்கள் மறுபுறம்.

விட்டுக்கொடுப்பது அவசியம்

எந்த ஒரு மனிதரும் சொந்த மண்ணின் மீது ஈர்ப்புடன் இருப்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான். இத்தனை நாள் வாழ்ந்த வீட்டையோ, வயல், பண்ணை உள்ளிட்ட நிலங்களையோ எப்படி விட்டுவிட்டு வருவது எனும் அவர்களது எண்ணம் நியாயமானதுதான். ஆனால், அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவும் வாய்ப்புகள் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும். உதாரணமாக, விவசாய நிலம் வைத்திருப்போர், நம்பகமான ஆட்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு பிள்ளைகள் வசிக்கும் நகரங்களுக்கு வண்டியேறலாம். வீட்டையோ, நிலத்தையோ அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லலாம்.

காலத்திற்கு அனைத்தையும் மாற்றும் சக்தி உண்டு. ஒரு செடியை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுதல் என்பது குற்றம்தான். ஆனால், புதிய இடத்திற்கு வந்தாலும் தன்னைத்தானே தழைக்கச் செய்யும் தகவமைப்பு தாவரங்களுக்கு உண்டு. மனது வைத்தால் மனிதர்களுக்கும் அது சாத்தியம்தான்.

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், ‘மாப்பிள்ளை வீட்டில் எப்படி இருப்பது. அது மரியாதை இல்லையே’ என நினைக்கலாம். எப்படி சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு இருக்கிறதோ அதுபோல் பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வதிலும் பெண்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. பிறந்த மண்ணுடனான பிணைப்பு உணர்வுபூர்வமானது; மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் முக்கியமானவை.

அதேபோல், சொந்த ஊரைவிட்டு தங்களுடன் வசிக்க வந்திருக்கும் பெற்றோரின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் பொறுப்பு. புதிய இடத்தில் அசவுகரியமாக அவர்கள் உணரும் விஷயங்களை உடனுக்குடன் சரிசெய்து அவர்களை அன்போடு, அக்கறையோடு பார்த்துக் கொள்வோம். இதுவே, நம்மை இந்த உலகுக்குத் தந்த நம் பெற்றோருக்கு நாம் செய்யும் மரியாதை.

(காற்று வீசும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE