என்.பாரதி
readers@kamadenu.in
குமரி மாவட்டத்தில் சாலையோரம் மனநோயாளிகளை எதிர்கொள்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் கரங்கள் அனிச்சைச் செயலாக செல்போனில் பேசில்ராஜனின் எண்ணைத் தேடும். மனநோயாளிகள், முதியோர் என்று ஆதரவற்று நிற்கும் ஜீவன்களுக்குக் கடந்த 35 ஆண்டுகளாக அடைக்கலம் தருகிறார் பேசில்ராஜன். கருணை இல்லங்கள், பள்ளிகளை நடத்திவரும் இவர், ஆதரவற்ற மூன்று குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கியவர்.
திருப்பதிசாரத்தில், மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளுக்கான பள்ளி, புளியடியில் மனவளர்ச்சி குன்றிய ஆண்களுக்கான பள்ளி, ஆசாரிப்பள்ளத்தில் ஆதரவற்ற முதியோருக்கான இல்லம், வெள்ளிச்சந்தையில் மனநோயாளிகளுக்கான இல்லம் என நடத்திவரும் இவர், எம்.ஏ., ஆங்கிலப் பட்டதாரி. தந்தை சந்தனமரியான் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர், தாய் அகஸ்தீன் ரத்தினமும் ஆசிரியையாக இருந்தவர்தான். நடுத்தரக் குடும்பச் சூழலிலிருந்து சேவைசெய்ய வந்திருக்கும் இவர், மறுவாழ்வு மையங்கள் நடத்துவது தொடர்பாகப் பிரத்யேகப் பயிற்சியும் எடுத்துக்கொண்டவர்.
“சின்ன வயசுல பள்ளி விடுமுறை நாட்கள்ல அப்பா எங்கேயாவது வெளில கூட்டிட்டுப் போறது வழக்கம். ஆனா, அது சுற்றுலாத் தலமா இருக்காது. ஏழை மக்களோட வாழ்க்கையைப் பற்றி நாங்க தெரிஞ்சிக்கணும்ங்கிற நோக்கத்துல அவங்க வசிக்கிற இடங்
களுக்குக் கூட்டிட்டுப் போவார். அப்படித்தான் ஆரல்வாய்மொழியில இருக்கிற மாற்றுத்திறனாளிகள் தொழில் கல்வி மையத்துக்கும் கூட்டிட்டுப் போனார்.