கோவை விஜயா பதிப்பகம் வந்திருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன், ‘செளமிதா வளைகாப்பு விழா அழைப்பிதழ்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வைத்திருந்தார். இதென்ன புதுவிதமா இருக்கே என்று வாங்கிப் புரட்டினால் அடுத்தடுத்து ஆச்சரியங்கள். வளைகாப்பு விழா குறித்த விவரம் அடங்கிய அட்டை, நாஞ்சில் நாடன் எழுதிய ‘அஃகம் சுருக்கேல்’ என்ற நூலின் முகப்பு என்று கலவையாக இருந்தது அந்தப் புத்தகம்.
“என்னோட வாசகர் ஒருத்தர், நான் எழுதின ‘அஃகம் சுருக்கேல்’ புத்தகத்தை 300 பிரதிகள் அச்சடித்து அவர் வீட்டு வளைகாப்பு விழாவுக்கு வந்தவங்களுக்குப் பரிசா கொடுத்திருக்கார். அதுக்கான ராயல்டியை உடனே எனக்குக் கொடுத்துடுச்சு அதை அச்சடிச்ச ‘சிறுவாணி இலக்கிய மையம்’. இப்படி, கடந்த ரெண்டு வருஷத்துல முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சடிச்சிருக்கு இந்த மையம்” என்றார் நாஞ்சில் நாடன்.
‘சிறுவாணி இலக்கிய மைய’த்தை நடத்திவருபவர், ஜி.ஆர்.பிரகாஷ். கோவை சாயிபாபா காலனியில் ஓர் அடுக்ககக் குடியிருப்பில் வசிக்கிறார். வீட்டின் நுழைவு வாயிலிலேயே அலமாரிகளில் மலை மாதிரி புத்தகங்கள் குவிந்திருக்கின்றன. நூல்களைத் தேதிவாரியாக வரிசை எண் போட்டு நோட்டில் எழுதிவைத்திருக்கிறார்.
“இதுவரைக்கும் கதை, கவிதையோ… குறைந்தபட்சம் வாசகர் கடிதமோகூட நான் எழுதினதில்லை. ஆனா, எழுத்தாளர்களோட எழுத்துக்களைக் கொண்டாடறதுலதான் எனக்கு சுகமே” என்று புன்னகையுடன் சொல்லும் பிரகாஷிற்குச் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி. பரம்பரை மணியக்காரர் குடும்பம். தந்தை நேர்மையைக் கடைப்பிடித்தவர் என்பதால், வீட்டில் வறுமை தாண்டவமாடியது. இதனால், பள்ளியில் படித்துக்கொண்டே, பேப்பர் போடும் பையனாக வேலை பார்த்தார் பிரகாஷ். அதிலிருந்து வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்டது.