தீபாவளிக்கு இரண்டு தினங்கள் முன்னதாக பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தார் தினகரன். சந்திப்பு முடிந்து திரும்பும்போது மிகவும் உற்சாகமாக இருந்தாராம். அதே தினத்தில் தான் பெங்களூரு புகழேந்தி சேலத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இம்முறை சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து தினகரனிடம் ஒருவித மாற்றம் தெரிவதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். வழக்கமாக ஓபிஎஸ் பெயரைச் சொன்னாலே கடுப்பாவார் தினகரன். ஆனால், “சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும் என்று ஓபிஎஸ் சொல்லி இருக்கிறாரே...” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இவரு இப்படிச் சொல்றாரு... ஆனா, ஜெயக்குமாரு மாத்திச் சொல்றாரேங்க...” என்று சிரித்தபடியே அந்தக் கேள்வியைக் கடந்தார் தினகரன்.
திருச்சி கழகத்தினருக்கு தித்திக்கும் தீபாவளி
ஆளும் கட்சியாக இருந்தால் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மாதா மாதம் மறக்காமல் படியளப்பார் முன்னாள் அமைச்சர் நேரு. எதிர்க்கட்சியாக இருந்தால் தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் தித்திக்கும் கவனிப்பு இருக்கும். அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் இந்தத் தீபாவளிக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளையும் தாராளமாகவே கவனித்தாராம். அதிலும் தனது திருச்சி மேற்கு தொகுதி நிர்வாகிகளுக்கு கூடுதல் சிறப்புக் கவனிப்பாம். இதேபோல் ஆளும் கட்சியிலும் மணல், ‘டாஸ்மாக் பார்’ வருமானங்களை வைத்து கட்சியின் வட்டப் பிரதிநிதி தொடங்கி மாவட்ட அவைத் தலைவர் வரைக்கும் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் தீபாவளி பரிசு கொடுத்தார்களாம்.
லைக்ஸை விட ஓட்ஸ் கம்மி!