வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
‘மஹாயுதி கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, பேச்சுவார்த்தை தீபத்தில் எண்ணெய் ஊற்றப்பட்டது. அந்த எண்ணெய் இப்போது சாக்கடையாகிவிட்டதா என்ன?’ – மகாராஷ்டிராவில் பாஜகவுக்கும் சிவசேனைக்கும் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பாக நடந்துகொண்டிருக்கும் மோதலுக்கு நடுவே சிவசேனையின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் இடம்பெற்ற சாட்டையடி வார்த்தைகள் இவை.
“முதல்வர் பட்னவிஸின் வீடியோ, ஆடியோ எல்லாவற்றையும் பார்த்திருக்கிறீர்கள். கூட்டணி நிபந்தனைகள் ஏற்கப்படும் என்றுதான் அவர் சொல்லியிருக்கிறார். இப்போது ஏன் மாற்றிப் பேசுகிறார்?” என்று ஆவேசமாகக் கேட்கிறார் சிவசேனை எம்பி-யான சஞ்சய் ராவத். மறுபுறம், “அப்படி எல்லாம் எந்த நிபந்தனையையும் பாஜக ஏற்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு நான்தான் முதல்வர்” என்கிறார் பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ்.
இதுவரை கிங் மேக்கராகவே இருந்துவந்த சிவசேனை இந்த முறை ‘கிங்’ ஆகிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. எதிர்பார்த்ததைவிட குறைவான தொகுதிகளில் பாஜக வென்றிருப்பது சிவசேனைக்கு இந்தத் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.