மயிலாப்பூர் பிரச்சாரக் கூட்ட மேடையில் அப்படி என்ன பேசினார் அந்த நாத்திகப் பேச்சாளர்?
கடவுள் மறுப்புக் கொள்கை பற்றிப் பேசிக்கொண்டே இருந்தவர் சாலையின் இந்தப் பக்கத்தில் இருந்து மகா பெரியவா வந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். நாத்திகத்தைப் பேசிக் கொண்டிருந்த வேளையில் ஆத்திகம் தொடர்பான ஒரு மகான் யாத்திரையாக அருகே வருவது, கண்களையும் மனதையும் உறுத்தியது.
பல்லக்கில் பவனி வரும் மகானைப் பார்த்த மாத்திரத்தில், தான் பேசிக் கொண்டிருந்த ‘சப்ஜெக்ட்’டில் இருந்து தாவினார்.
மகா பெரியவா வந்து கொண்டிருக்கிற திசையைப் பார்த்து, ‘‘மகான்கள் என்றால் அவர்களுக்கு புலனடக்கம் வேண்டும் என்று சொல்வார்கள். முற்றும் துறந்த மகான் என்றால், அவர் எதற்குப் பல்லக்கில் வலம் வர வேண்டும்? பல்லக்குத் தூக்கிகள் தேவைதானா? நடந்தே யாத்திரை செல்லலாமே?’’ என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டார்.
கொதித்துப் போனார்கள், யாத்திரையில் மகானுடன் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்!
நாத்திக அன்பரது இந்தப் பேச்சை மேடையில் இருந்த பல பிரமுகர்களும் விரும்பவில்லை என்றும் சொல்லப்படுவதுண்டு. காரணம், நாத்திகர்கள் பலரே கூட மகா பெரியவாளை ஏற்றுக் கொண்டனர். காரணம், அவரிடம் இருந்த எளிமை, அன்பு, கருணை போன்ற நற்குணங்கள். சமுதாயத்தில் பின்தங்கிய சாதாரண ஒருவருக்கும் அருளுகின்ற அவரது பாங்கு!
நாத்திகப் பேச்சாளர் உணர்ச்சிப் பிழம்பாக மேடையில் பேசிய பேச்சு தன் காதுகளில் விழுந்த மறுவிநாடி, பல்லக்கைக் கீழே இறக்கி வைக்குமாறு போகிகளுக்கு உத்தரவிட்டார் மகா பெரியவா!
பல்லக்கு கீழே இறக்கி வைக்கப்பட்டது. திரையை முற்றிலும் விலக்கினார். அதில் இருந்து பூமியில் பாதம் பதித்து இறங்கினார். மகானுடன் வந்த ஸ்ரீமடத்துக் கார்யதரிசிகள் அவரது இந்தச் செயலுக்கான காரணத்தை ஓரளவு ஊகித்துக் கொண்டு பதறிப் போனார்கள். கருணையே வடிவான காஞ்சி ஸ்வாமிகள் முகத்தில் எந்த ஒரு பதற்றமும் இல்லை. வெகு இயல்பாகவே காணப்பட்டார்.
‘பட்டணப் பிரவேசத்தைத் தொடரலாமா?’ என்று ஸ்ரீகார்யத்தைப் பார்த்து ஜாடையில் கேட்டார். ‘‘பெரியவா...’’ என்று நெகிழ்ந்த ஸ்ரீகார்யம் சாலையிலேயே விழுந்து நமஸ்காரம் செய்தார். பிறகு மகா பெரியவாளின் திருமுகம் பார்த்து பரிதவிப்புடன், ‘‘யாரோ ஒருத்தர் பேசின பேச்சைக் கேட்டுண்டு நீங்க அவசரமா முடிவெடுக்க வேண்டாம் பெரியவா. இந்த மடத்துல யாத்திரைன்னா பல்லக்கை பீடாதிபதிகள் பயன்படுத்துவது வழக்கம்தான். நீங்க வழக்கம்போல பல்லக்குலயே வாங்கோ. அதான் நன்னா இருக்கும்’’ என்று கண்ணீர் சிந்தியபடி பிரார்த்தித்துக் கொண்டார்.
ஸ்ரீகார்யம் மட்டுமல்ல... ஸ்ரீமடத்தின் முக்கிய கார்யதரிசிகள், பட்டணப் பிரவேசத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் உட்படப் பலரும் பல்லக்கில் அமர்ந்து வருமாறு மகானை பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் வற்புறுத்தவும் செய்தார்கள். போகிகள் அனைவரும் மகானின் திருவடியை வணங்கிப் பிரார்த்தித்தனர்.
ஆனால், நடமாடும் தெய்வம் மனம் மாறவில்லை. ‘‘மேடைல அவர் பேசினதுல எந்தத் தப்பும் இல்லை. சரியாகத்தான் பேசி இருக்கிறார். சொல்லப்போனா நான் அவருக்கு நன்றி சொல்லணும்’’ என்று கூறி, தன் திருப்பாதம் பதித்து மயிலை வீதிகளில் நடக்க ஆரம்பித்தார். அதன்பின் தொடங்கிய நடைப் பயணம் அவரது தொண்ணாறாவது வயது வரை நீடித்தது.
‘மகா பெரியவா இனிமேல் நடையாத்திரையாகத்தான் தேசம் முழுக்கப் பயணிக்கப் போகிறார்’ என்கிற தகவல் தெரிந்ததும், கண்ணீர் சிந்தியவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். ‘மகானின் திருப்பாதம் தரையில் படலாமா? அவரை நாமல்லவா தாங்க வேண்டும்?’ என்று ஆளாளுக்கு மருகினார்கள். ஆனால், ஒரே ஒரு ஜீவன் மட்டும் ஆனந்தப்பட்டது. பரவசமடைந்தது.
‘ஒரு மகான் நடை யாத்திரை செல்வதைக் கண்டு ஆனந்தப்படுவதற்கும் ஒரு ஜீவனா’ என்று மூக்கு நுனி வரை கோபம் வருகிறதா?
அவசரம் வேண்டாம்..! பொறுமை... பொறுமை! ஆம்! பொறுமைக்குப் பேர் போன ஜீவன்தான் அது!
பூமாதேவி!
மகா பெரியவா இனி நடையாத்திரையாக தேசமெங்கும் உலா வரப் போகிறார் என்பது தெரிந்த பூமாதேவி சந்தோஷப்பட்டாள். காரணம், அந்த மகானது பிஞ்சுப் பாதங்களைத் தான் தாங்கிப் பிடிக்கப் போகிறோமே என்கிற பரவசம்தான்!
சிலரது நடவடிக்கைகளிலும் செயல்பாடுகளிலும் அதர்மம் காணப்பட்டால், ‘ஏன்தான் பூமிக்குப் பாரமா அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறானோ?’ என்று எரிச்சல்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மகா பெரியவாளின் பாதங்கள் தொடர்ந்து தன் மீது பட்டுக் கொண்டே இருக்காதா என்று பூமகளுக்கு ஒரு ஏக்கம்!
உண்மையாகவும் அன்பாகவும் இருக்கின்றவர்களை தெய்வங்கள் விரும்பும். அவர்களை சோதனை சூழ்கின்ற காலங்களில் உடன் இருந்து காப்பாற்றும்.
யோசித்துப் பாருங்கள்... நம்முடைய முன்னோர்கள் பெரிய பெரிய வசதிகளுடன் வாழ்ந்தார்களா? அந்தக் காலத்தில் என்ன உத்தியோகம் பார்த்தார்கள்?
சாஃப்ட்வேர் தெரியுமா?
பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்தார்களா?
இன்ஜினீயரிங் படிப்புக்குப் போனார்களா?
இன்றைக்குப் பணம் கொழிக்கிற எந்தப் படிப்புமே அவர்கள் படித்தது இல்லையே... இன்றைக்கு பெரிய பெரிய படிப்பு படித்த இளைஞர்கள் மாதா மாதம் கைநிறைய வாங்குகிற சம்பளத்தை ஒரே சமயத்தில் தங்கள் வாழ்வில் அவர்கள் கண்ணால்கூடப் பார்த்ததில்லையே!
ஆனால், ஏழெட்டுக் குழந்தைகளுக்குக் குறைவில்லாமல் பெற்றுக் கொண்டார்கள். எல்லோரையும் வளர்த்து ஆளாக்கினார்கள். மணமும் செய்து வைத்தார்கள். தங்கள் கடமையை செவ்வனே செய்தார்கள்.
இன்றைக்கு லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கும் இளைஞர்கள் பெரும்பாலோர் தங்கள் வாழ்வைக் கோட்டை விட்டு விடுகிறார்களே... எல்லாம் இருந்தும் ஏனோ பின்தங்குகிறார்கள். மனஸ்தாபம்... மன அழுத்தம்... குடும்பத்தில் மனக் கசப்புகள்...
என்ன காரணம்?
முன்னோர்களுக்கு இருந்த நற்குணங்கள் அடுத்தடுத்து வரக் கூடிய தலைமுறைக்கு இல்லாமல் போய்விட்டது.
வாழ்நாள் முழுக்கப் பொய்யே பேசாமல் வாழ்ந்து காட்டிய மன்னன் அரிச்சந்திரனைத்தான் ‘உண்மையைப் பேசியவன்’ என்று இன்றைக்கும் நாம் உதாரணம் காட்டுகிறோம். அந்த மன்னனுக்குப் பின் வந்தவர்கள் யார் பெயரையும் சொல்வது இல்லை. அதுபோல் முற்றும்துறந்தமுனிவர், எளிமைக்கு உதாரணமானவர், ஏழைகளுக்கும் இரங்குபவர், கருணாசமுத்திரம் என்றெல்லாம் சொன்னால் மகா பெரியவாதானே நினைவுக்கு வருகிறார்?
அவரிடம் காணப்பட்ட நற்குணங்கள்தான் அவரை தெய்வ நிலைக்கு உணர்த்தின. அவரது சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்தன. அவர் திருவாயில் இருந்து என்ன அருள் வாக்கு வந்தாலும் அவை அப்படியே பலித்தன.
அந்த மகானின் திருப்பார்வை தங்கள் மீது படாதா என்றே பலர் ஏங்கி இருக்கிறார்கள். அதனால்தான், அவருக்கு இருந்த ஞான திருஷ்டி பற்றி இன்றைக்கும் நாம் வியந்து பேசுகிறோம். எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டுஇந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைச் சொன்னார்.
அவரிடம் சென்றவர்கள் எவரும் பொய் பேச முடியவில்லை. கதை கட்டிவிட முடியவில்லை. நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்கள் மட்டுமே அவரது தரிசனத்துக்குச் சென்றார்கள்.
‘தான்’ என்கிற கர்வத்தோடு தன் திருச்சந்நிதியை தேடி வந்தவர்களை அன்புடன் மெள்ளத் தட்டியே வைப்பார் பெரியவா!
ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
காஞ்சிப் பெரியவா அப்போது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் முகாமிட்டிருந்தார். மகான் எங்கு முகாமிட்டிருந்தாலும், யாரையாவது பார்க்க வேண்டும்... தன் திருச்சந்நிதிக்கு வரவழைக்க வேண்டும் என்றால், அடுத்த கணம் சிப்பந்திகள் மூலமாக தகவல் அனுப்பி விடுவார்.
அதுபோல் காளஹஸ்தியில் இருந்த மகா பெரியவா, ஜெமினி ஸ்டுடியோ மற்றும் ஆனந்த விகடன் அதிபரான எஸ்.எஸ்.வாசனை காளஹஸ்திக்கு வருமாறு அழைத்தார்.
அப்போது பிரமாண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் எஸ்.எஸ்.வாசன். எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடியவர்.
மகா பெரியவாளிடம் இருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்ததும், பரவசப்பட்டுப் போனார் வாசன். காரணம், அந்த மகானைத் தரிசிக்க எத்தனையோ பேர் நாட்கணக்
காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்... அப்பேர்ப்பட்ட இடத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்திருக்கிறதே என்கிற பூரிப்புதான்.
பிரபல வேத பண்டிதரான வழுத்தூர் ராஜகோபால சர்மாவின் குமாரர் ராமமூர்த்தி, அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ராமமூர்த்தியைத் தன்னிடம் அழைத்த வாசன், ‘‘நீங்க உடனே ஒரு கார்ல காளஹஸ்திக்குப் பொறப்பட்டுப் போய் மகா பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு எப்ப வரணும்னு கேட்டுட்டு வாங்கோ. அந்த மகானைத் திடுதிப்புன்னு போய் தரிசனம் பண்ணக் கூடாது. அவரோட நேரத்தையும் கேட்டுத்தான் போய் பாக்கணும். நீங்க புறப்படுங்க’’ என்றார்.
அதன்படி காளஹஸ்தி புறப்படத் தயாரானார் ராமமூர்த்தி.
தனியாகப் போக வேண்டும் என்பதுதான் ராம மூர்த்தியின் திட்டம். ஆனால், திட்டம் வேறுவிதமாகப் போனது!
(ஆனந்தம் தொடரும்...)