கரு.முத்து
muthu.k@kamadenu.in
திருச்சி கீழதேவதானத்தில் இருக்கும் ‘கலை அருவி’ கலைக்கூடத்தில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று நாட்டுப்புறக் கலைககளை ஆர்வத்துடன் படிக்கிறார்கள் இங்கு குவியும் மாணவர்கள். தமிழில் ராகம் பாடிக்கொண்டே அவர்களுக்கு நடன அசைவுகளைக் கற்றுக்கொடுக்கிறார் இளவழகன். அழிந்துவரும் நாட்டுப்புறக் கலைகளுக்குத் தனி அடையாளம் கொடுக்கத் தணியாது உழைக்கும் இவர், தொழில்முறை நாட்டுப்புறக் கலைஞரல்ல என்பதுதான் வியப்பு கலந்த சிறப்பு!
பெரம்பலூர் மாவட்டம் கரம்பியத்தைச் சேர்ந்த இளவழகன், விவசாயக் குடும்பத்து பட்டதாரி. இவரது தந்தை வளைகுடா நாட்டில் பணிபுரிகிறார். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்த இளவழகன், சுய ஆர்வத்தின் பேரில் நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஒருகட்டத்தில், வேலையைத் துறந்து நாட்டுப்புறக் கலைகளில் முழுமூச்சாக இறங்கினார்.
தன்னுடன் வெளிநாட்டுக்கு வந்துவிடுமாறு தந்தை விடுத்த அழைப்பையும் நிராகரித்துவிட்ட இவர், தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத்தரும் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிகிறார்.