போர்முனை டு தெருமுனை 10: மலையுச்சியின் சவால்கள்

By ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளுக்குத் தலைமை விஞ்ஞானியாக இருந்த டாக்டர் அப்துல்கலாம், அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டும் என்று  முனைப்புடன் உழைத்தார். குறிப்பாக மருத்துவம்  சார்ந்த ராணுவத் தொழில்நுட்பங்கள் பொது மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படும் வகையில் ஆராய்ச்சி முயற்சிகளை முன்னெடுத்தார்.

மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பங்களில் அப்துல் கலாம் தனிக்கவனம் செலுத்தியதற்கு இன்னொரு வலிமையான காரணம் உண்டு.  அதிகச் செலவு பிடிக்கும் முக்கிய மருத்துவ சிகிச்சைகளும் உபகரணங்களும் சாதாரண மக்களின் வாங்கும் சக்தியின் வீச்செல்லைகளுக்கு வெளியே இருந்தன. மலிவு விலை மருத்துவ சேவையின் தேவை கருதி அவர் தொடங்கிய பல்நோக்கு மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை முழுவதும் ஈடுபடுத்திக் களமாடினர் நம் ராணுவ விஞ்ஞானிகள்.

சங்கம் வளர்த்த கலாம்

மருத்துவ ஆராய்ச்சி முயற்சிகளை ஒருங்கிணைக்க ஓர்அமைப்பை நிறுவினார் கலாம். ‘எனது மூளை உங்கள் வலியைத் தணிக்கட்டும்’ (Let my brain relieve your pain) என்ற முழக்கத்தோடு 1993-ல், தொடங்கப்பட்டது உயிரி மருத்துவத் தொழில்நுட்பச் சங்கம் (Society for Biomedical Technology-SBMT). பெங்களூருவிலுள்ள பாதுகாப்பு உயிரித் தொழில்நுட்ப மற்றும் மின்மருத்துவ ஆய்வகத்தின் (Defence Bio-Engineering & Electro Medical Laboratory-DEBEL) ஓர் அங்கமாகச் செயல்படும் இச்சங்கத்தில் டி.ஆர்.டி.ஓ மட்டுமின்றி, இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை, கிராம வளர்ச்சித் துறை மற்றும் சுகாதாரம் - குடும்ப நலத் துறை ஆகியவற்றையும் இணைத்தார் கலாம்.

கலாம்-ராஜூ வலை குழாய்

இதய நோயாளிகளுக்கு அடைப்பைச் சரி செய்ய, ரத்த நாளத்தில் வலை குழாய் (Stent) பொருத்தப்படுவது வழக்கம். விரியக்கூடிய தன்மையுள்ள உலோக வலையாலான இக்குழாய், அடைப்புள்ள ரத்த நாளத்தை விரித்துப்பிடிப்பதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. அதிகச் செலவாகும் என்பதால் ஏழை நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை எட்டாக் கனியாகக் கிட்டாமலே இருந்தது.

இந்த நிலையை மாற்ற 1994-ல், ராணுவ விஞ்ஞானிகளும், ஹைதராபாத் கேர் மருத்துவமனை மருத்துவர்களும் ஒன்றிணைந்து புதிய வலை குழாயை உருவாக்கும் பணியில் இறங்கினர். சுருள் வடிவிலும் குழாய் வடிவிலும் மருத்துவத் துறையில் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த இறக்குமதி செய்யப்பட்ட வலை குழாய்களை வாங்கி, அவற்றைச் சோதனை செய்தனர். அவற்றுக்கு மாற்றாக ராணுவ உபகரணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த டைட்டானியம் உலோகத்தைத் தேர்ந்தெடுத்தனர். டைட்டானியத்தின் எடை குறைவு. ஆனால், வலிமை அதிகம். முக்கியமாக டைட்டானியம் மனித உடலோடு ஒத்துப்போகும் (Bio Compatible) ஓர் உலோகம். இப்படித் தான் 1997-ல், உருவானது இந்தியாவின் முதல் வலை குழாய்.

இந்த ஆராய்ச்சி முயற்சியில் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர், ஹைதராபாத் கேர் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சோம ராஜூ. பொருத்தமாக இந்த வலை குழாய்க்கு, ‘கலாம்-ராஜூ வலை குழாய்’ என்று பெயரிடப்பட்டது.

கலாம்-ராஜூ குழாய், மருத்துவத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் காலக்கட்டத்தில், இறக்குமதி செய்யப்பட்ட குழாய்கள் நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் வரை விலை வைத்து விற்கப்பட்டன. கலாம்-ராஜூ குழாய், வெறும்  பதினைந்தாயிரம் ரூபாயில் மலிவு விலை மருத்துவ சேவையை எல்லோருக்கும் சாத்தியப்படுத்தியது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஏறக்குறைய 2,000 பேருக்கு கலாம்-ராஜூ குழாய் பொருத்தப்பட்டதை ஒரு மருத்துவப் புரட்சி என்றே பதிவுசெய்யலாம். அத்துடன், சந்தையில் விற்கப்பட்டுவந்த இறக்குமதி செய்யப்பட்ட குழாய்களின் விலையும் உடனடியாக 50 சதவீதம் குறைப்பட்டது ஒரு தனி வர்த்தகக் கதை!

இழை வலுவேறிய பிளாஸ்டிக்

விமானத் துறை விஞ்ஞானிகளும் ஒரு வகையில் கல்லூரி இளம் தலைமுறையினர்தான். இரு தரப்புக்கும் எடையைக் குறித்த சிந்தனை எப்போதும் இருக்கும்.

வானில் பறக்கும் விமானங்களும் ஏவுகணைகளும் எடை குறைவாக இருக்க வேண்டும். எடை குறைந்த விமானத்தை இயக்க குறைந்த எரிபொருள் போதும். எரிபொருள் தொட்டியின் அளவும் சிறிதாகும். இதனால் போர் விமானத்தின் மொத்த எடை குறையும், 
அளவும் சிறிதாகும். அளவு சிறிதானால், ரேடார்களின் கண்களிலிருந்து தப்பவும் எளிதாகும். எனவே, குறைந்த எடையுடைய 
அதேசமயம் போதுமான வலிமையுள்ள அலுமினியம் விமானத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ச்சியான ஆய்வுகளின் அடிப்படையில், அலுமினியத்தைவிட எடை குறைந்த வலுவேற்றப்பட்ட பிளாஸ்டிக், விமான பாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி இழைகளால் வலுவேற்றப்பட்ட பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஏவுகணை மற்றும் போர் விமானத்தின் மூக்கு, இறக்கைகளின் முகப்பு உள்ளிட்ட உதிரி பாகங்களை டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கிப் பயன்படுத்திவருகின்றனர்.

இந்தியாவின் ‘தேஜஸ்’ இலகு ரகப் போர் விமானத்தின் 45 சதவீத பாகங்கள், இழை வலுவேற்றப்பட்ட நெகிழ்மிகளால் உருவாக்கப்பட்டவை. சொல்லப்போனால் இது ஒரு பிளாஸ்டிக் பறவை. டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளால் அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளிலும், தேஜஸ் விமானத்திலும் பயன்படுத்தப்பட்ட வலுவேற்றப்பட்ட பிளாஸ்டிக் தொழில்நுட்பம், சமுதாயத்திற்கு மிகப் பெரிய பலனைப் பின்னாட்களில் தந்தது.

பிளாஸ்டிக் நடைக்கருவி

போலியோவினால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்த சிறுவர் சிறுமியர் நடக்க ஏதுவாக நடைக்கருவிகளைப் பயன்
படுத்துவதைப் பார்த்திருக்கலாம். இதன் தொழில்நுட்பப் பெயர் ‘தரை எதிர்விசை நடைக்கருவி’ (Floor Reaction Orthosis). அலுமினியத்தாலான இந்த நடைக்கருவிகள் ஏறக்குறைய மூன்று கிலோ எடையுடையவை. ஏற்கெனவே, நடக்க சிரமப்படும் ஒரு மாற்றுத்திறனாளி இவ்வளவு எடையைச் சுமந்து நடக்க வேண்டும் என்பது ஒரு சகிக்க வேண்டிய சுமையாகவே இருந்துவந்தது. கூடவே, இதன் வடிவமைப்புச் சிக்கல் காரணமாக ஒரு கருவியைத் தயாரிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. போலியோவால் பாதிக்கப்பட்ட பலருக்கு இக்கருவி தேவைப்பட்டது. எனவே, இக்கருவியின் வடிவமைப்பை மாற்றினாலொழிய இதைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. மலிவு விலையில் இக்கருவியை வழங்கினால்தான் அடித்தட்டு மக்களும் பயன்பெற முடியும் எனும் நிலையும் இருந்தது. ஆக எடை, வடிவமைப்பு, விலை ஆகிய மூன்று தளங்களில் மாற்றம் தேவைப்பட்டது.

கலாமின் வழிகாட்டுதலில், புதிய நடைக்கருவி உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் மென்பொறியியல், பிளாஸ்டிக் பொறியியல், இயந்திரப் பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ராணுவ விஞ்ஞானிகளோடு எலும்பியல் துறை மருத்துவர்களும் இணைந்துகொண்டார்கள். ஹைதராபாத் நகரின் நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம் (Nizam’s Institute of Medical Sciences-NIMS) இந்த ஆய்வு முயற்சியில் பெரும்பங்காற்றியது.

இக்குழு ஏறக்குறை 1,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்து பாதிப்புக்கு உள்ளான கால்களை அளவெடுத்தது. எடுக்கப்பட்ட அளவுகளை ஃப்ரோஸ்டான் (FROSTAN) என்ற பிரத்யேக மென்பொருளை உருவாக்கி ஆராய்ந்து, வகைப்படுத்தியது. மூன்று பாகங்களில் பொதுமைப்படுத்தப்பட்ட நடைகருவி வடிவமைக்கப்பட்டது. அலுமினியத்திற்கு மாற்றாக ராணுவ விஞ்ஞானிகளின் பிளாஸ்டிக் தொழில்நுட்பம், மாற்றுத்திறனாளிகளின் சுமையை இலகுவாக்கியது.

கண்ணாடி இழை வலுவேற்றிய பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் இக்கருவிகளைத் தயாரித்தனர். இதன் எடை வெறும் 300 கிராம் மட்டுமே. விலையும் மிகமிகக் குறைவு. 1994-ல், இதன் விலை 500 ரூபாய். அலுமினியக் கருவியின் அப்போதைய விலை ஏறக்குறைய 4,000 ரூபாய். இந்தத் தொழில்நுட்பம் கான்பூரிலுள்ள, பொதுத் துறை நிறுவனமான செயற்கை உறுப்பு உற்பத்திக் கழகத்திற்கு வழங்கப்பட்டு பெரிய அளவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம், பல்லாயிரக்கணக்கான கருவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கலங்கினார் கலாம்

பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை போலியோ நடைக்கருவி சார்ந்த ஒரு நிகழ்வை என்னோடு பகிர்ந்துகொண்டார். “2006-ல், கோவையில் ஒரு நிகழ்ச்சியில் ஒத்தாசைக் கருவிகளை கலாம் வழங்கினார். ஒத்தாசைக் கருவி பொருத்தப்பட்ட 29 வயது தாய், ‘இதுவரை என்னால் நிற்க முடியாததால் எனது குழந்தையைத் தொட்டுத் தூக்கிக் கொஞ்ச முடியவில்லை. இனி அந்தக் குறையில்லை’ என்று சொன்னார். அதைக் கேட்டு அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவரும் கண்கலங்கினோம்” என்றார் அவர்.

ராணுவ ஆராய்ச்சியின் பயன்கள் இந்தியக் குடிமக்களின் இதயத்தையும் பாதங்களையும் தொட்டு அவர் தம் வாழ்வில் நம்பிக்கையை விதைத்தது, தொழில்நுட்பம் சார்ந்த சமூகப் புரட்சி எனலாம். டாக்டர் அப்துல் கலாமின் விருப்பப்படி இக்கருவிகளின் மேம்பட்ட வடிவமைப்புகளுக்கான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு, பொதுவெளியில் மலிவு விலையில் மருத்துவ சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என நம்புவோமாக.

தீப்பிடித்த கட்டிடங்களிலிருந்து தப்பிக்க வழியில்லாமல் கீழே குதித்துப் பலியானவர்கள் உண்டு. தீ விபத்திலிருந்து தப்ப பல கருவிகளை உருவாக்கியுள்ள ராணுவ விஞ்ஞானிகள்,16-வது மாடியிலிருந்து எளிதில் குதித்துத் தப்பிக்கவும் வழிவகை செய்திருக்கிறார்கள். எப்படி?

(பேசுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE